
-சுகி சிவம்
உலக வாழ்வில் இருந்துகொண்டே நிறைவாக, நிம்மதியாக இருப்பது எப்படி என்று பலருக்குச் சந்தேகம் வரும். வாழ்வு வெற்றி பெற இரண்டு அம்சங்கள் தெரிந்திருந்தால் போதும்.
1. உறுதியான உடல்.
2. உயர்வான உள்ளம்.
இவை இரண்டும் இருந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகி விடும். உயிர் பெற்று விடும்.
உடம்பு என்பது உயர்ந்த கருவி. அதிசயமான கடவுள் கொடை. அதைச் சரியாக வைத்திருப்பது மனிதனுடைய கடமை. பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சி வகுப்பு என்று ஒன்று உண்டு. ஆனால் உடற்பயிற்சி ஆசிரியர் நிலை பரிதாபம். தேர்வுக்கான பாடம் முடிக்காத மற்ற ஆசிரியர்கள் எல்லாம் இந்த வகுப்பைக் கொள்ளை அடிப்பார்கள்.
முதுகுத் தண்டின் உபயோகம், சரீரம் லேசாக இருப்பதன் அவசியம் இவை எல்லாம் இளமையில் விளக்கப்படுவது இல்லை. அதன் விளைவு பலகீனமான ஒரு வாழ்க்கை முறை நாற்பதுக்குப் பிறகு மனிதனைத் தத்து எடுத்துக்கொள்கிறது.
'உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்' என்ற திருமூலர், "உள்ளம் பெருங் கோயில் ஊன் உடம்பு ஆலயம்” என்று உடம்பின் பெருமையை உணர்த்துகிறார். விவேகானந்தர் இரும்பு உடல் இளைஞர்களை இது கருதியே உருவாக்க நினைத்தார்.
எல்லாச் சுரப்பிகளும் சரிவர இயங்குவதுதான் இளமையின் இலக்கணம். நாளமில்லாச் சுரப்பிகளைச் சரியாக இயக்கத்தில் வைத்திருப்பதுதான் யோகாசனங்களின் அடிப்படை.
இந்துக்களின் சூரிய வழிபாடு, தண்டம் சமர்ப்பித்தல், பிள்ளையாருக்கான தோப்புக்கரணம், விரத அனுஷ்டானங்கள் இவை உடல் நலம் பேணும் யுக்திகள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உடற்பயிற்சி, யோகாசனங்கள் கட்டாயப் பாடம் ஆக வேண்டும்.
உறுதியான உடம்பில்தான் உயர்வான உள்ளம் இருக்க முடியும். உள்ளம் உயர்வாக இருந்தால்தான் உடம்பு உறுதியாக இருக்கும். இவை இரண்டும் ஒன்றை ஒன்று பாதுகாக்கும் 'வன சிம்ஹ நியாயம்…’
அதாவது, காடுதான் சிங்கத்தைப் பாதுகாக்க முடியும். சிங்கம் அங்கு மறைந்து வாழும். வெட்ட வெளியானால் வேட்டையாடப்படும். ஆனால் சிங்கம் காட்டைப் பாதுகாப்பதும் உண்மை. சிங்கம் போன்ற விலங்கு களுக்கு அஞ்சி காட்டிற்குள் வர மக்கள் தயங்குவர். காடு பாதுகாக்கப்படுகிறது. காடும் சிங்கமும் ஒன்றை ஒன்று பாதுகாப்பது போல் உறுதியான உடலும் உயர்வான உள்ளமும் ஒன்றை ஒன்று பாதுகாக்கின்றன.
பின்குறிப்பு:-
கல்கி 09 - 06 - 1991 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்