
பார்வதி தேவி காசியிலிருந்து காஞ்சீபுரம் வந்தாள். அங்கே ஓடிக்கொண்டிருந்த கம்பா நதி அவள் மனத்தை கவர்ந்தது. தன் ஆபரணங்களை எறிந்தாள். அதன் கரையிலேயே தியானம் செய்ய அமர்ந்து விட்டாள். தன்பளபள ஆடைகளைக் களைந்து மரவுரி தரித்து உடலில் சாம்பலை பூசிக் கொண்டாள். புற்கள் மட்டுமே உட்கொண்டு சிவதியானத்தில் ஈடுபட்டார். கம்பா நதி மணலில் சிவலிங்கம் பிடித்து வில்வம், கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்தாள். அவள் இருப்பதை உணர்ந்த யோகிகள் , ரிஷிகள் அவரை வணங்கினர்.
காஞ்சி அப்போது வனப்பான காட்சியளிக்க அங்கிருந்த மலர்களைப் பறித்தாள். மணல் லிங்கத்துக்கு அர்ச்சித்து பூஜித்தாள். ஒருநாள் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கேடுத்தது. தோழியர் அம்பாளின் தியானத்தை கலைத்தனர். தன்னைக் காப்பாற்ற அவள் மணல் லிங்கத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். "இந்த வெள்ளம் என்னை சோதிக்கவே ஈசன் செய்திருக்கிறார். நான் தவத்தைக் தொடர்வேன்" என்று கூறி தியானத்தில் ஆழ்ந்தார்.
வானத்தில் அசரீரி ஒலித்தது.
"பெண்ணே சிவலிங்கத்தை விடுவி. உன்னால் இணைக்கப்பட்ட மண்லிங்கம் பிரசித்தமாகும். தேவாதி தேவர்களால் வழிபடும் தெய்வமாகும். கேட்ட வரம் அளிக்கும் லிங்கமாகும். உன் தவம் நிறைவேறட்டும். இந்த லிங்கம் என்றும் சாஸ்வதமாக இருக்கும். நானே அருணாசலமாக அருள் புரிவேன். பந்த பாசம் விலக்கி மோக்ஷம் அளிப்பேன். எண்ணற்ற ரிஷிகள், கந்தர்வர்கள்,யோகிகள் அங்கே என்னை சூழ்ந்து வழிபடுவார்கள். கைலாயம் மேருவைவிட இது எளிதாக பாடப்படும். என்னை ஜோதி பிழம்பாக தரிசிப்பாயாக!"
ஈசனின் இந்த ஆருளாசி கேட்டபோது ஆனந்தமடைந்தாள் பார்வதி. அருணாசலம் நோக்கி நடந்தாள். அவளைப்பின் தொடர்ந்த ரிஷிகளை நோக்கி, "நீங்கள் இங்கேயே கம்பா தீரத்தில் இருங்கள். உங்கள் தவத்தைக் தொடருங்கள். இங்கு வந்து வழிபடுபவர்கள் என்னை காமாட்சியாகக் கண்டு அருளாசி பெறுவார்கள். அவர்களுக்கு வரமருளுவேன்" என்றாள்.
அருணாசலத்தில் தேவர்கள் ரிஷிகளை சந்தித்தாள். தான் கௌதம ரிஷியை உடனே சந்திக்க வேண்டும் என வழி கேட்க, ரிஷிகள் பவழக்குன்று அடிவாரத்துக்கு வழி காட்டினர். கௌதம ரிஷியின் மகன் சதாநந்தன் ஓடிவந்தான். தன் தந்தையிடம் அம்பாள் வருகைபற்றிக்கூற, அந்த வனப்பிரதேசமே நந்தவனமாகிவிட்டது.
அவர் வேகமாக வந்து அம்பாளை வணங்கினார். அங்கு அம்பாளின் தவம் தொடங்கியது ஈசன் அவர்முன் தோன்றி, "வரம் என்ன வேண்டும்?" என கேட்க, அம்பாள் பரமேஸ்வரனின் பாதியாக வேண்டும் என்றாள். அவரை பிரிந்து இருக்க முடியாது என கூற, உடனே ஈசனும் ஒப்புக் கொண்டார். அம்பாள் அர்த்தநாரீ ஆனார்.