மிளகாயை விரும்பி ஏற்கும் பிரத்யங்கிரா தேவி!

Goddess Pratyangira who likes and accepts chili!
பிரத்யங்கிரா தேவி
Published on

தெய்வீக அன்னையின் அருள் எல்லையற்றது மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்திலிருந்து அன்னை தனது எண்ணற்ற அவதாரங்களின் மூலம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மனிதகுலத்தின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பிரத்யங்கிரா தேவியாக மற்றும் வாராஹி அம்மனாக அன்னை அவதரித்தார், சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள மிகப் பழமையான ஸ்ரீ வாராஹி பிரத்யங்கிரா கோயிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது

சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானதாகக் கருதப்படும் இக்கோயில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளாக ஹோமங்கள், யாகங்கள் நடைபெற்று வந்ததாம். பிறகு இருபது வருடங்களுக்கு முன்தான் ஸ்ரீ வாராஹி பிரத்யங்கிரா கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சித்தேஷ்வரானந்த பாரதி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் பிரத்யங்கிரா, வாராஹி, சரபேஸ்வரர் மூவரும் ஒரே இடத்தில் எழுந்தருளியிருப்பது விசேஷம்.

இந்த கோயிலில் நடைபெறும் ஹோமங்களில் ஆண், பெண் பேதமின்றி கலந்து கொள்கின்றனர். இங்கு ஹோமம் செய்வதன் மூலம் நவக்கிரஹ தோஷங்கள் மற்றும் அவற்றின் தீய விளைவுகள், பில்லிசூனியம் மற்றும் திருஷ்டி ஆகியவற்றால் ஏற்படும் பிரச்னைகள், நிலப் பிரச்னைகள், தாமத திருமணம் மற்றும் திருமண பிரச்னைகள், உடல்நலக்குறைவு ஆகியவை நீங்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு லட்சுமி கணபதி, காலபைரவர், பகளமுகி, மஹா பிரத்யங்கிரா, வாராஹி தேவி என பல்வேறு தெய்வ ஹோமங்கள் தினமும் நடைபெறுகின்றன, உலர்ந்த சிவப்பு மிளகாய்கள் ஹோம குண்டத்தில் போடப்படுகின்றன. ஆனால் அதிசயம் மிளகாய் கமறல் சிறிது கூட இல்லாமல் அங்கு ஒரு நல்ல தெய்வீக மணம் மட்டுமே கமழ்கிறது. தினமும் காலை மாலை ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

பக்தர்கள் எலுமிச்சை மாலைகளையும், காய்ந்த மிளகாயால் ஆன மாலைகளையும் படைத்து பிரத்யங்கிரா தேவியின் அருளைப் பெறுகின்றனர்.. இங்கே அன்னை பிரத்யங்கிரா கைகளில் வெவ்வேறு ஆயுதங்களேந்தி சிங்கத்தை வாகனமாகக் கொண்டு அமர்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம். அவளது வெறும் பார்வை மட்டுமே தங்கள் மனதில் அமைதியைத் தரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

வாராஹி அம்மன் இந்து வேதங்களின்படி திருமாலின் வராஹ அவதார ரூபத்தின் பெண்பால் அம்சமாக நம்பப்படுகிறார். அந்தகாசுரன், ரக்தபீஜன், சும்பனிசும்பன் போன்ற அரக்கர்களை வதம் செய்ததில் முக்கிய பங்கு வகித்தாள். வாராஹி தேவி பன்றி முகம் மற்றும் கருமேகம் போன்ற நிறம் கொண்ட ஒரு தெய்வமாக சித்தரிக்கப்படுகிறாள். வரதா மற்றும் அபய முத்திரைகளுடன் ஷங்கா, பாஷா மற்றும் ஹாலா போன்ற ஆயுதங்களூடன் காட்சி தருகிறாள். குதிரை, சிங்கம், காளை, யானை அவளது வாகனங்கள்.

வாராஹி தேவி பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளையெல்லாம் அகற்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வமாக எழுந்தருளியிருக்கிறாள். நேபாளத்தில் அவள் பராஹி என்று அழைக்கப்படுகிறாள். ஸ்ரீ வாராஹி தேவி முக்கியமாக இரவு நேரங்களில் பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்!
Goddess Pratyangira who likes and accepts chili!

ஸ்ரீ சரபேஸ்வரர் சிவபெருமானின் உக்கிரமான வடிவம். சிவ வேதங்கள் மற்றும் புராணங்களின்படி விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரை சாந்தப்படுத்த சிவபெருமான் ஷரபா வடிவத்தை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.. சிவ புராணம் மற்றும் ஷரபா உபநிடதம் ஷரபாவை இரண்டு தலைகள், இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்களுடன் சிங்கத்தின் கால்கள் மற்றும் நீண்ட வால் ஆகியவற்றுடன் சித்தரிக்கிறது. உடலின் மேல் பகுதி மனிதனாகக் காட்டப்பட்டுள்ளது, அலங்கரிக்கப்பட்ட கிரீடத்துடன் சிங்கத்தின் முகத்துடன்; பக்கவாட்டு தந்தங்களும் ஒட்டுமொத்தமாக பயமுறுத்தும் காட்சியைக் கொடுப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சரபேஸ்வரர் தீமையை அழிப்பவர். பக்தர்களுக்கு பயமின்மையையும், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்கொள்ளும் வலிமையையும் அருள்பாலிக்கிறார்.

இந்தக் கோயிலில் நடைபெறும் தச மஹா வித்யாலு ஹோமம் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கும் மற்றும் நமக்கு நீண்டஆயுள், செழிப்பு மற்றும் செல்வத்தை வழங்கும் .ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் பிரத்யங்கிரா தேவியை தரிசனம் செய்ய இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகின்றன. இக்கோயில் ஹைதராபாத் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் கொத்தபேட் எனற இடத்தில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com