சங்கரன்கோவில் வேண்டிய வரம் அருளும் அன்னை கோமதி அம்மன் கோவிலில் நாளை காலை அதாவது 23-08-2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவிலும் ஒன்று.
11 ஆம் நூற்றாண்டில் உக்கரபாண்டிய மகாராஜா இத்திருக்கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. அந்த காலத்தில் சங்கரன்கோவில் பகுதியை உக்கரபாண்டிய மகாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் சைவ பக்தர். அடிக்கடி மதுரைக்கு சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பது வழக்கம். அவர் படைவீரர்கள் புடைசூழ யானையில் பயணித்து மதுரையை அடைவாராம் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்துவிட்டு அதே வழியில் அவர் திரும்புவாரம்.
ஒரு முறை அவர் மதுரைக்கு செல்லும்போது இடையில் பெரும் கோட்டூர் என்னும் இடத்தில் அவரது பட்டத்து யானை தந்ததால் மண்ணை குத்தி கீழே விழுந்தது. இதனால் மன்னர் செய்வதறியாது திகைத்தார். அப்போது புன்னைவன காவல்காரரான மணிக்கிரீவன் அவர் முன் தோன்றி அரசே இங்கு புற்றொன்றுடைய புன்னைவனம் உள்ளது என்றார்.
இதையடுத்து அந்த இடத்தை தோண்டும்போது பாம்புகள் சுற்றிக் கிடக்க சிவலிங்கம் கிடைத்தது. இதனால் வியப்பின் எல்லைக்கே சென்ற மன்னர் அரண்மனைக்கு திரும்பிவிட்டார். அன்றிரவே இறைவன் அவரது கனவில் தோன்றி நீ என்னை தரிசிப்பதற்காக மதுரை செல்ல வேண்டும். இங்கேயே கோவில் கட்டி வழிபடு என்றாராம். இதனால் உக்கிர பாண்டிய மஹாராஜா புன்னைவனத்தில் உள்ள காடுகளை திருத்தி திருமதில்களும் மண்டபங்களும் கோபுரங்களும் சிறந்து விளங்க சிவாலயம் கட்டிவித்து இறைவன் அருள் பெற்றான் என்பது திருக்கோவில் வரலாறு.
இந்த திருக்கோவிலில் 165 அடி உயர கோபுரம் உள்ளது. சங்கரலிங்கசுவாமி சங்கரநாராயணர் கோமதி அம்மன் என தனித்தனியாக மூன்று சன்னதிகள் உள்ளன. மேலும் சூரிய பகவானுக்கு கோவில் இருப்பது தனிச்சிறப்பு சூரியன் சிவபெருமானை வழிபட்டது இந்த இடம் என்பது தல வரலாறு. இதனால் ஆண்டுதோறும் மார்ச் 21 22 23 செப்டம்பர் 21 22 23 தேதிகளில் சூரிய ஒளி நேராக சிவலிங்கத்தின் மீது படுவது அபூர்வமான ஒன்று.
சங்கரன்கோவிலில் மூன்று சன்னதிகள் இருப்பது சிறப்பு சங்கர நாராயணசாமிக்கும் சங்கரலிங்கம் கோமதி அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. சங்கரன் கோவிலில் அருளும் விநாயகர் ஒரு கையில் பாம்பு ஏந்தி இருக்கிறார். எனவே சர்ப்ப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சங்கர நாராயணன் சங்கர லிங்கசுவாமியும் இருந்தாலும் அம்மனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கோமதி அம்பாள் தவக்கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம் அதுவும் ஆடித்தவசுக்கு முன்பு சுற்ற வேண்டும்.
சங்கரன்கோவிலில் தனி சிறப்புக்கு ஒரு காரணம் இங்கிருக்கும் நாகராஜா கோவில் இந்த கோவிலில் பாம்பு புற்று காணப்படுகிறது அதைச் சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகராஜா கோவிலுக்கு பழம் பால் படைக்கிறார்கள் அதேபோல் இந்த புற்று மண் மிகவும் விசேஷமானது பல சர்ம நோய்களை குணமாக்க வல்ல மண்ணென்று பக்தர்கள் நம்புகிறார்கள். எனவேதான் இந்த புற்றிலிருந்து மண்ணை எடுத்து அருகில் உள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள். அம்பாள் சன்னதியிலும் புற்றுமண் இருக்கிறது இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிடுகிறார்கள் நெற்றியிலும் பொட்டாக வைத்துக் கொள்கிறார்கள் இந்த புற்று மண் பிரசாதம் பிணிகளுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெறும் கும்பாபிஷேகத்தை காண சங்கரன்கோவில் சென்று வாருங்கள். ஒரு கும்பாபிஷேகத்தை காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தை போக்க கூடியது.