
கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முருதேஸ்வரர் கோவில் ஒன்று. உத்தர கன்னடா கார்வார் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோவில் உள்ளது. இந்த மலையின் மூன்று பகுதிகளை அரபிக் கடல் சூழ்ந்து இருப்பது இதன் சிறப்பு.
சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் 20 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலை நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் இரண்டு பிரம்மாண்டமான யானை சிலைகள் உள்ளன. இந்த கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என்று கருதப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆலயத்தின் ராஜகோபுரமானது 3, 5 ,7 11 ஆகிய நிலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆனால் இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 20 நிலைகளைக் கொண்டிருக்கிறது.
இங்கு சிறிய குன்றின் மீது 123 அடி உயரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சிவன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிவன் சிலை அமைந்த குன்றின் அடிவாரத்தில் ராமேஸ்வரர் என்ற சிவலிங்கம் அமைந்த ஆலயம் இருக்கிறது. இதில் உள்ள லிங்கத்திற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம்.
பெரிய சிவன் சிலை வீற்றிருக்கும் குன்றின் ஒரு பகுதியில் ராவணனின் சிலையும் இருக்கிறது. சிவபெருமானுக்கு முன்பாக நந்தி சிலை அமைந்துள்ளது. சனி பகவானுக்கு தனி கோவில் இருக்கிறது.
சிவபெருமானிடமிருந்து பிராண லிங்கத்தை பெற்ற ராவணன் அதை இலங்கைக்கு கொண்டு சென்று ஸ்தாபிக்க தென்திசை நோக்கி பயணமானார். இந்த பிராண லிங்கத்தை இலங்கைக்கு ராவணன் கொண்டு சென்று ஸ்தாபிப்பதை தடுக்க ராவணன் சந்தியா கால பூஜை செய்யும் வேளையில் அந்தண இளைஞன் வேடத்தில் வந்த விநாயகர் இந்த லிங்கத்தை இப்பகுதியில் ஸ்தாபித்து விட்டார். பூஜை முடிந்து திரும்பி வந்த ராவணன் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து தனது இருபது கைகளால் இந்த லிங்கத்தை எடுக்க முயன்றபோது அச்சிவலிங்கம் நான்காக உடைந்தது. அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்கிரக மானதாக கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் சர்வதேவ பூஜை என்ற சக்தி வாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது இப்பஜையின் போது நெய்வேத்தியமாக எள், நெய் வெல்லம், பச்சை பயிறு, ஏலக்காய் பொடி கலந்த கஜ்ஜாய பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.
எமன் பயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு ருத்ர அபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி நாணயங்களை போட்டு தங்களின் முகத்தோற்றம் வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
அமைவிடம்: ஸ்ரீ முருதேஸ்வர் கோவில் கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் படகல் என்ற ஊரில் அமைந்துள்ளது.