பணிவுக்குத்தான் பெரும் பதவி! எப்படி?

crown and slippers
crown and slippers
Published on

விடிந்தால் ராமருக்குப் பட்டாபிஷேகம்! அயோத்தி அரண்மனை அலங்காரங்களுடன் ஜொலிக்கிறது! ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன! அரண்மனைப் பணியாளர்கள் பட்டாபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை, அந்த அறையில் அழகாக அடுக்கி வைத்துள்ளார்கள்!

அடுத்த நாள், ராமரின் தலையில் தான் அமரப்போவதையும், இந்த உலகமே நாளையிலிருந்து தன்னை வணங்கப் போவதையும் எண்ணி, இறுமாப்பு கலந்த இன்பமுடன் அமர்ந்திருக்கிறது அந்தத் தங்கக் கிரீடம்! அதனால் மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! யாரிடமாவது அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் என்ற மனநிலையில், 'சரி! பக்கத்தில் இருப்பவரிடம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே!' என்று எண்ணிப் பக்கத்தில் திரும்பிப் பார்த்த அதற்கு, கோபமும் எரிச்சலும் ஒருசேரத் தலைக்கேற, "அட அற்பப் பாதுகைகளே! உங்களுக்குக் கொஞ்சமேனும் அறிவிருக்கிறதா? எப்படி நீங்கள் இருவரும் எனக்கு இணையாக அமரலாம்? ராமன் தலையை அலங்கரிக்கப் போகும் நானும், அவர் கால்களில் கிடக்கப் போகும் நீங்களும் ஒன்றா? என்ன துணிச்சல் உங்களுக்கு?" என்று கோபத்தில் எகிறிக் குதிக்க....

பாதுகைகளோ மிகச் சாந்தமாக "மன்னிக்க வேண்டும் கிரீடத் தலைவரே! நாங்கள் எவ்வாறு உங்களுக்கு இணையாக முடியும்? ஆனாலும், தவறு எங்களுடையது அல்லவே! எங்களை இங்கு கொண்டு வந்து வைத்த பணியாளர்கள் செய்த தவறல்லவா அது! அவர்கள் சார்பில் நாங்கள் மீண்டும் வேண்டுமானால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்! நீங்கள் கோபம் தனிந்து சாந்தமடையுங்கள்!" என்றன.

இதையும் படியுங்கள்:
மஹாபலியின் ஆச்சரியமூட்டும் ஆசார்ய பக்தி!
crown and slippers

விடிந்ததும், கைகேயி சூழ்ச்சியால் ராமன் காட்டுக்குப் புறப்பட, ராமனிடம் மன்றாடியும் அவனைத் தடுக்க முடியாத பரதன் ஓடி வந்து, முன்பாக இருந்த தங்கக் கிரீடத்தைத் தட்டிவிட்டு, இரண்டு பாதுகைகளையும் எடுத்துத் தன் மார்போடு அணைத்தபடி அரச சபைக்கு ஓடினான்! பாதுகைகள்தான் 14 ஆண்டுகள் பதவி வகித்தன அரசனாக என்பது நாம் அறிந்ததுதானே! பணிவுக்குத்தான் எவ்வளவு பெரும் பதவி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com