திருவோண திருநாள் வந்துகொண்டே இருக்கிறது. திருமாலின் வாமன அவதாரத்தை கொண்டாடும் தினம்தானே திருவோண திருநாள்? ஆவணி மாதம், சுக்லபட்ச துவாதசி (விஜய துவாதசி) அன்று திருவோண திருநட்சத்திரம் கூடிய திருநாளில் அபிஜித் முகூர்த்த வேளையில், நண்பகல் 12 மணிக்கு, கஸ்யப மஹரிஷிக்கும், அதிதிக்கும் வாமனனாக அவதாரம் செய்தார் ஸ்ரீமண் நாராயணன்.
பக்திக்கு இலக்கணமாய் திகழ்ந்த பிரஹ்லாதனின் பேரன்தான், பெருமாள் வாமன அவதாரம் எடுக்க காரணமான மஹாபலி சக்ரவர்த்தி. ஸ்ரீமத் பாகவதத்தில், ‘வாமன அவதாரம்’ மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அசுரர்களுக்கெல்லாம் தலைவனான மஹாபலி, ஆசார்ய பக்தி அதிகம் கொண்டவன். ஒரு முறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கடும் போர் ஏற்பட்டபோது, தேவர்களின் தலைவனான இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாக்க அதில் மஹாபலி இறந்து விட நேர்ந்தது.
அப்போது அங்கே வந்த நாரத மஹரிஷி, “உங்கள் குருவான சுக்ராச்சார்யார் அஸ்தமனகிரி எனும் மலையில் தவத்தில் இருக்கிறார். அவரிடம் சென்று மஹாபலியை உயிர்ப்பிக்க செய்ய வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறிச் சென்று விட, அப்படி சுக்ராச்சார்யார் தன் மீது அதீத பக்தி கொண்ட மஹாபலி மீண்டும் உயிர் கொண்டு எழ, சஞ்ஜீவினி மந்திரம் சொல்லி மஹாபலியை உயிர்ப்பிக்கச் செய்தார்.
தன்னை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்த ஆசார்யனை பக்தி சிரத்தையோடு பூஜித்தான் மஹாபலி. மஹாபலியின் உண்மையான பக்தியால் மனமகிழ்ந்த சுக்ராச்சாரியாரும் மற்றும் பிற மஹரிஷிகளும் சேர்ந்து மஹாபலிக்காக, ‘விஷ்வஜித்’ யாகத்தை நடத்தினர். அந்த யாகத் தீயிலிருந்து மஹாபலிக்காக தங்க ரதமும், தேரை இழுப்பதற்காக பச்சை குதிரைகளும், சிங்கக் கொடி, தங்க வில், எடுக்க எடுக்க குறையாத அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணி என்று போருக்குத் தேவையான அத்தனை பொருட்களும் வந்தன. விஷ்வஜித் யாகத்தை செய்பவர்களை இவ்வுலகில் யாருமே வெல்ல முடியாது என்பதே இந்த யாகத்தின் தனிச் சிறப்பு.
தனது தாத்தா பிரஹ்லாதன் தமக்கு அளித்த மாலையை அணிந்து கொண்டு போருக்கு புறப்படத் தயாரானான் மஹாபலி. அந்த சமயத்தில் சுக்ராச்சார்யார் ஒரு சங்கை மஹாபலியிடம் கொடுத்து, “இந்த சங்கைக் கொண்டு சத்தம் செய்து, நீ போருக்கு உன் எதிரியை அழைக்கலாம்” என்று கூறினார். இந்திரனோடு போரிட, சந்தோஷமாக புறப்பட்டான் மஹாபலி. சுக்ராச்சார்யார் தந்த சங்கு கொண்டு சத்தம் எழுப்பி, இந்திரனின் அமராவதிக்கு தம் சேனையோடு சென்று போர் தொடுக்க தயாரானான் மஹாபலி.
அந்த சங்க நாதத்தை கேட்டதுமே இந்திரன் பயந்து நடுங்கி தனது குருவான பிரஹஸ்பதியிடம் சென்று, “மஹாபலி தனது சேனைகளோடு புறப்பட்டு வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இவ்வளவு வலிமை வந்தது” என்று இந்திரன் கேட்க, அதற்கு அவரோ, “மஹாபலியின் வலிமை என்பது அவன் ஆசார்யன் அவனுக்குக் கொடுத்த பரிசு. அவனது ஆசார்ய பக்தியை மெச்சி, ஆசார்ய கடாக்ஷத்தால் கிடைத்த வலிமை அது. ஆசார்ய அருளோடு இழந்த உயிரையும், வலிமையும் திரும்பப் பெற்று வந்திருக்கும் அவனை உன்னால் வெல்ல முடியாது இந்திரா. அதனால் நீயும் தேவர்களும் சென்று எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள்” என்றே இந்திரனுக்கு பிரஹஸ்பதி சொல்லி விட்டார்.
“மஹாபலியை வெல்வது என்பது நடக்கவே நடக்காதா?” என்று இந்திரன் கேட்க, “எந்த குரு அருளால் மஹாபலி இவ்வளவு மேன்மைகளை அடைந்திருக்கிறானோ, அதே குருவிடம் தம் செருக்கால், குருவின் மனக்கசப்பிற்கும் ஒரு நாள் மஹாபலி ஆளாவான். குருவிடமிருந்து பெற்ற சாபத்தால், இவன் வீழக்கூடிய காலம் வரும். அப்படி குருவின் அருள் என்பது மஹாபலியிடமிருந்து விலகி இருக்கும் காலத்தில் நீ அவனை வெல்வாய்” என்று இந்திரனிடம் சொன்னார் பிரஹஸ்பதி.
இந்திரனும் மற்ற தேவர்களும் ஒளிந்து கொண்டதால், ‘இனி மூவுலகையும் நானே ஆட்சி செய்யப் போகிறேன்’ என்று இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தான். தேவர்களின் தாயான அதிதி, நாராயணனை நோக்கி கடும் விரதம் இருந்து அதன் பலனாக பெருமாளையே நேராக பார்த்து அவரிடம், தேவர்களுக்கு மீண்டும் ராஜ்யத்தை மீட்டுத் தரும்படி கேட்டாள். அதற்கு பகவான், ‘அனுகூல ஈஷ்வர விப்ரகுப்த:’ என்றார். “அது எனக்கு சாத்தியமில்லை. மஹாபலியிடம் அவனின் ஆசார்யனின் அனுக்ரஹம் என்பது பரிபூரணமாக இருக்கிறது. அதனால் என்னால் அவனை எதுவுமே செய்ய முடியாது” என்றார்.
திருமால் தனது திருவாக்கால் உணர்த்திய ஒரு மிகப் பெரிய விஷயம் இதுவல்லவா? யாரிடம் ஆசார்ய பக்தி என்பதும் ஆசார்ய கடாக்ஷம் என்பதும் இருக்கிறதோ அவர்களை நானும் சேர்ந்து கடாக்ஷிப்பேன் என்பதுதானே? வாமனனாக வந்திருப்பது சாக்ஷாத் மஹாவிஷ்ணுவேதான். அதனால் மூவடி மண் தானம் செய்ய ஒப்புக்கொள்ளாதே என்று சுக்ராச்சார்யார் எச்சரித்தபோது ஆசார்யன் வாக்கை மீறி தானம் கொடுக்க மஹாபலி முன் வந்ததாலன்றோ ஆசார்யரிடம் அபச்சாரம் பட்டு, அவரின் திருவருளையும் அதனால் திருமாலின் திருவருளையும் இழந்தான்?
மஹாபலியின் கதை எத்தனை எத்தனையோ விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது என்றாலும், மஹாபலி மூவுலகிற்கு அரசனாவதற்கு முன் காட்டிய ஆசார்ய பக்தியை நாமும் பின்பற்றி மஹாபலியையும், திருவோண திருநாளையும் சேர்த்தே கொண்டாடுவோம்.