
108 வைணவ திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமான கூடலூர் வையம் காத்த பெருமாள் கோவில் திருவையாற்றில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இதை 'சங்கம் தலம்' என்றும் கூறுவார்கள். திருமங்கை ஆழ்வார் இத்தலம் குறித்து 10 பாடல்கள் இயற்றியுள்ளார். இரண்யாட்சகன் என்ற அசுரன் மக்களுக்குப் பல துன்பங்கள் தந்தான்.
பூமிதேவியை ஒருசமயம் பாதாள லோகத்தில் மறைத்து விட்டான். பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்துக்குள் சென்று பூமித்தாயை இங்கு மீட்டார். பூமியை மீட்டு வந்ததால், இந்த பெருமாள் 'வையம் காத்த பெருமாள்' என்று பெயர் பெற்றார். ஜகத் ரட்சகன் என்ற பெயரும் உண்டு.
நந்தி முனிவர் மற்றும் தேவர்கள் முதலானோர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இவ்வூர் கூடலூர் என்று அழைக்கப்படுகிறது. ஒருசமயம் காவிரி வெள்ளத்தால் இக்கோவில் மூழ்கி மணலால் சூழப்பட்டது. பெருமாள், ராணி மங்கம்மாள் கனவில் தோன்றி, இக்கோவிலை புதுப்பிக்கும் படி கூற, அரசி இக்கோவிலை புதுப்பித்தாராம்.
அரசன் அம்பரீஷன், திருமால் மீது பக்தி கொண்டு தன் படைகள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். எதிரிகளிடம் நாட்டை இழந்தார். திருமால் பக்தியால் அவருக்காக விரதங்கள் மேற்கொண்டார்.
ஒரு சமயம் ஏகாதசி விரதம்போது வந்த துர்வாசரை அவர் கவனிக்கவில்லை. கடுங்கோபம் கொண்ட முனிவர் அவரை சபிக்க, வருந்திய மன்னன் திருமாலிடம் வேண்ட, திருமால் சக்ராயுதத்தை முனிவர் மீது ஏவ, முனிவரே திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். அம்பரீஷன் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருமாளுக்கு கோவில் கட்டினார். தன் பக்தனை காக்க பகவான் சக்ராயுதம் கொண்டு உதவியதால் இந்த பெருமாளை வழிபடுபவர்களுக்கு சக்கரம் பாதுகாப்பு தரும் என்று நம்பப்படுகிறது. இந்த பெருமாளுக்கு 'அம்பரீஷ வரதர்' என்றும் பெயர் உண்டு.
ஜகத் ரட்சகன் என்று அழைக்கப்படும் பெருமாள் கையில் பிரயோக சக்கரம் உள்ளது. கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளளைக் கொண்டது. கிழக்கில் நின்ற கோலத்தில் வையம் காத்த பெருமாள் செங்கோல் கையில் ஏந்தி காட்சி தருகிறார்.
தாயார் பத்மாசினி தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறாள். வரதராஜபெருமாள், ஆண்டாள் சன்னதிகளும் உள்ளன. கோவில் மண்டபத்தில் ராணி மங்கம்மா அவரது அமைச்சர்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறைக்குள் பின்புறம் உள்ள பலாமரத்தில் சங்கு வடிவம் உள்ளது. துர்வாச முனிவரை ஏவிய சங்கு தோன்றியதை உணர்த்த தலவிருட்சத்தில் சங்கு வடிவம் உள்ளது.
பெருமாளுக்கு கற்கண்டும், வெண்ணையும் படைத்து வணங்க செல்வம் பெருகும். இத்தலத்தில் பௌர்ணமியன்று 108 தாமரைகளுடன் ஸ்ரீ சுத்த ஹோமம் நடைபெறுகிறது. இக்கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நன்றாக நடைபெறுகிறது.