குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் தேதி அன்று சிரசு திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்துதம் லட்சக்கணக்கான பக்தர்கள் குடியாத்தத்தில் நடைபெறும் இவ்விழாவில் பக்திப் பரவசத்தோடு கலந்து கொண்டு கெங்கையம்மனின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நன்நாளில் குடியாத்தம் நகரே விழாக்கோலம் பூணுகிறது.
கெங்கையம்மன் வரலாறு
முன்னொரு காலத்தில் விதர்ப்ப தேசத்தை ஆண்டு வந்த விஜரவத மகாராஜனுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. குழந்தைப்பேறு வேண்டி மன்னர் பிரம்மதேவனை வழிபட்டார். இதன் பயனாக ரேணுகாதேவியை அதாவது கெங்கையம்மனை மகளாகப் பெறும் பாக்கியத்தை பிரம்மதேவன் வரமாக வழங்கினார். மகள் ரேணுகாதேவியை விஜரவத மகாராஜன் சீரும் சிறப்புமாக வளர்த்தார்.
ரேணுகாதேவிக்கும் ஜமத்கனி முனிவருக்கும் திருமணம் நடந்தது. ஜமத்கனி ரேணுகாதேவி தம்பதியருக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உட்பட நான்கு குழந்தைகள் பிறந்தனர். கெங்கையம்மன் நாள்தோறும் தாமரைக் குளத்தில் நீராட செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தினமும் நீராடச் செல்லும் போது மண்ணால் குடத்தை உருவாக்கி திரும்பி வரும் சமயத்தில் அந்த மண்குடத்தில் நீரை நிரப்பி எடுத்துக் கொண்டு திரும்புவார். ஒருநாள் நீராடச் சென்ற போது கந்தர்வன் வடிவில் கெங்கையம்மனுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. குளத்தில் கெங்கையம்மன் நீராடிக் கொண்டிருந்த போது குளத்தில் கந்தர்வனின் நிழல் விழுந்தது. கந்தர்வனின் அழகில் சில நொடிகள் கெங்கையம்மன் மயங்கினார். கடும் தவத்தில் இருந்த ஜமத்கனி முனிவர் இதை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். கோபமடைந்த ஜமத்கனி முனிவர் கெங்கையம்மன் கற்பு நெறி தவறி விட்டதாக உணர்ந்து தண்டனை வழங்கவும் முடிவு செய்தார். கோபத்தில் தனது மகன் பரசுராமனை அழைத்து “உன் தாயின் தலையை வெட்டி எடுத்துவா” என்றார். தந்தையின் சொல்லை மீறாத பரசுராமன் உடனே தாயின் தலையை வெட்டப் புறப்பட்டான். தன் மகனே தன் தலையை வெட்ட வருவதை அறிந்த கெங்கையம்மன் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றார்.
தன் உயிரைக் காத்துக் கொள்ள நெடுந்தூரம் ஓடினார். பரசுராமனும் விடாது துரத்திச் சென்றான். களைப்பு மிகுதியின் காரணமாக சலவைத் தொழிலாளி ஒருவரின் வீட்டில் கெங்கையம்மன் மறைந்து கொண்டார். பரசுராமன் சலவைத் தொழிலாளி வீட்டுக்குச் சென்றான். தன் மகன் கையால் வெட்டுப்பட்டு இறப்பதைவிட கடலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்வது மேல் என முடிவெடுத்த கங்கையம்மன் கடலை நோக்கி ஓடினார். கடலுக்குச் செல்லும் வழியில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைப் பார்த்து அதன் பின்னால் கெங்கையம்மன் மறைந்து கொண்டார்.
அப்பகுதியில் இருந்த மீனவர்கள் நடனமாடி பரசுராமனின் கவனத்தை திசை திருப்பி கெங்கையம்மனை காப்பாற்றினார்கள். பின்னர் கெங்கையம்மன் ஒரு வெட்டியான் வீட்டில் நுழைந்து பதுங்கிக் கொண்டார். இதை அறிந்த பரசுராமன் அங்கு வந்து தனது தாய் கெங்கையம்மனை வெட்ட முயன்றான். வெட்டியான் பரசுராமனைத் தடுத்து கெங்கையம்மனைக் காப்பாற்ற முயல கோபமடைந்த பரசுராமன் தன்னைத் தடுத்த வெட்டியானின் மனைவியான சண்டாளச்சியின் தலையை வெட்டினான். அதே வேகத்தில் தாய் கெங்கையம்மனையும் பரசுராமன் வெட்டினான். வெட்டியானின் மனைவி சண்டாளச்சி பரசுராமனின் தாய் கெங்கையம்மன் ஆகிய இருவரின் தலைகளும் உடல்களும் இரண்டு துண்டுகளாக விழுந்தன.
தன் மனைவியின் நிலையைக் கண்டு வெட்டியான் கண்ணீர் விட்டு கதறி அழுதான். பரசுராமனோ தந்தை ஜமத்கனி முனிவரிடம் சென்று ”தந்தையே தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என்றான். மகிழ்ந்த ஜமத்கனி முனிவர் “உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்” என்றார். “தந்தையே. உங்கள் கட்டளையை ஏற்று என்னை பெற்ற தாயையே நான் கொன்று விட்டேன். என் தாயை தயவு செய்து உயிர்பித்து கொடுங்கள். இதுவே நான் தங்களிடம் வேண்டும் வரம்” என்று கண்ணீருடன் கேட்டான்.
ஜமத்கனி முனிவர் பரசுராமனிடம் ஒரு பாத்திரத்தில் புனித நீரைத் தந்து “வெட்டுபட்டு இறந்து கிடக்கும் உன் தாயின் மீது தெளித்து உயிர்பித்துக் கொள்” என்றார்.
தாயை உயிர்பிக்க அசுர வேகத்தில் சென்ற பரசுராமன் அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் கெங்கையம்மனின் தலையையும் கெங்கையம்மனின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் தவறுதலாக மாற்றி வைத்து புனித நீரைத் தெளித்தான். இறந்து போன கெங்கையம்மனும் சண்டாளச்சியும் உயிர் பெற்றனர்.
இந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டே குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் தேதி அன்று “சிரசு திருவிழா” சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியாத்தம் நகரில் நடைபெறும் இந்த திருவிழாவின் போது வேறெங்கும் இல்லாத விதமாக கெங்கையம்மனின் சிரசு பல கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கெங்கையம்மன் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்கி அவர்கள் அனைவரையும் காத்து வருகிறாள். நாமும் குடியாத்தம்
கெங்கையம்மனை வணங்கி வரம் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவோமாக!