

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உள்ளது. இத்தல கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும், சுதர்சன சக்கரத்தையும், கௌமோதகி எனப்படும் கதையையும், தாமரை மலரையும் ஏந்தி குழந்தை வடிவில் திருவருள் புரிகிறார். இக்கண்ணனை பக்தர்கள் உண்ணிக் கண்ணன், உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் அழைத்து பரவசம் அடைகின்றனர்.
குருவாயூர் ஆலயத்தின் விளக்கு பூஜை மிகவும் புகழ்பெற்றது. வருடம் 365 நாட்களும் மாலையில் நடைபெறும் இந்த விளக்கு பூஜையைக் காண கண் கோடி வேண்டும். ஆலயத்தில் தினமும் சாயங்காலம் ஆறு மணிக்கு குருவாயூரப்பன் கருவறையை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான தீபங்களை ஆலய ஊழியர்கள் மிகவும் நீளமான தீப்பந்தங்கள் மூலம் ஏற்றுகின்றனர். பிறகு அலங்கரிக்கப்பட்ட யானை மீது குருவாயூரப்பன் ஆரோகணிப்பார்.
இருபுறமும் பூப்பெய்தாத சிறுமிகள் தீபங்கள் ஏந்திய தாலத்தட்டு ஏந்தி அணிவகுக்க, பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை குருவாயூரப்பன் ஐந்து முறை வலம் வருவார். இதை சீவேலி பூஜை என்று போற்றுகின்றனர்.
இந்த சமயத்தில் ஆலயத்தில் நிற பணி எனப்படும் பெரிய படியில் அரிசியை நிரப்பி, தென்னங்குருத்தால் அலங்கரித்து, இருபுறங்களிலும் மலையாள குத்து விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர். படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அளித்தல் போன்ற ஐந்தொழில்கள் புரியும் தேவதைகளின் வடிவமாக குத்துவிளக்கு போற்றப்படுகிறது. ஆசனம் ஆகிய அடிப்பாகம் பிரம்மஸ்வரூபம், நடுத்தண்டமாகிய மத்தியபாகம் விஷ்ணு ஸ்வரூபம், நெய் ஏந்திய அகல் பகுதி சிவ ஸ்வரூபம் என்றும் அதற்கு மேலே சிகரமாக உள்ள உச்சிப்பகுதி மகேஸ்வரன், நெய் நாதமாகவும், திரை பிந்துவாகவும், சுடர் திருமகளாகவும், தீப்பிழம்பு கலைமகள் ஆகவும், தீ சக்தி வடிவமாகவும் திகழ்கிறது.
குருவாயூர் ஆலயத்தில் கருவறையை சுற்றி ஆயிரக்கணக்கான தீபங்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். தினமும் மாலை 6.15 முதல் 6.45 மணிக்குள் ஆலய விளக்குகளை ஏற்றி, கற்பூர தீபம் காண்பித்து ,குருவாயூரப்பனை ஆராதிக்கின்றனர். கோவிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாக பட விளக்கு, ஒற்றைத் திரிவிளக்கு என பல விளக்குகளை ஏற்றி கண்ணனை ஆராதிக்கின்றனர். இறுதியில் கற்பூர ஆரத்தியின்போது வலம்புரி சங்கை ஊதி, மத்தளமேள, பஞ்ச வாத்தியங்கள் முழங்க குருவாயூரப்பனின் அழகே உருவான திருவடியை ஆராதிக்கின்றனர். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் பிரகாசமான வடிவில் ஜொலிக்கும் குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்க முடிவது இதன் சிறப்பு.
சர்வாலங்காரங்களுடன் தலையில் கிரீடம், கழுத்தில் மரகதம், இடுப்பில் சிவப்புப் பட்டு, கௌபீனம் தரித்து குருவாயூரப்பன் அருட்கோலம் காட்டுவார்.
சீவேலி முடிந்ததும், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெறும். அப்போது நெய்யப்பம், இலை அடை, பால் பிரதமன் போன்றவை குருவாயூரப்பனுக்கு நிவேதிக்கப்பட்டு பின், சுற்றும் விளக்கு பிரார்த்தனை நடைபெறும். ஆலயம் எங்கும் விளக்குகள் எரிய பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மூன்று அல்லது 5 யானைகளுடன் குருவாயூரப்பன் பக்தர்களுடன் ஆலய வலம் வருவார்.
இவ்வளவு மகிமை வாய்ந்த தீபத்தை தினமும் போற்றி ஆராதிக்கும் குருவாயூர் தலத்தில், நம் அக இருளைப் போக்கி வாழ்வில் வெளிச்சம் தந்து நம்மைக் காக்கும் குருவாயூரப்பனின் பூஜையை தரிசித்து, குருவருளுடன் திருவருளும் பெற 'மாலை நேரத்தில் சீவேலி மாளிகை முழுவதும் நெய் வேலி' என்ற இந்த தீப அலங்காரத்தை வாழ்வில் ஒரு முறையேனும் கண்டுக்களிக்க அங்கு சென்று குருவாயூரப்பனை தரிசித்து வாருங்கள். அவன் அருளைப் பெறுங்கள்.