கேரளத்தில் குருவாயூரப்பன் கோயிலைச் சுற்றி பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோமா?
முதலில் முக்கத்து பகவதி அம்மன் கோயில்:
ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த கோயில். இந்தப் பகுதிக்கு ஆதிசங்கரர் வந்தபோது, அவர் முன் ஒரு பேரொளி தோன்றியதாம். அது சிவபெருமானா, மஹா விஷ்ணுவா என்று அவர் யோசித்து கொண்டிருந்தபோது அந்த ஒளி அம்பிகையாக அவருக்குக் காட்சியளித்ததாம். ஆகவே இந்த ஸ்தலம் அம்பிகைக்கு உரியது என்று தீர்மானித்தாராம். இங்கேதான் நாராயணீயம் இயற்றிய நாராயண பட்டத்திரி சமாதி கொண்டிருக்கிறார். உள்பிராகாரத்தில் வலம் வரும்போது கீழக்காவு துர்க்கையையும் தரிசிக்கலாம்.
அடுத்ததாக கண்ணகாவு பகவதி அம்மன் தரிசனம்:
இங்கே கணபதி, சிவபூதம், ஐயப்பன், மஞ்சக்காட்டு பகவதி ஆகியோரையும் வழிபடலாம்.
பிறகு, செவளூர் சிவன் கோயில்:
இங்குள்ள இறைவனும் மகாதேவன்தான். பொதுவாகவே கேரளத்தில் சிவன் எல்லாம் மகாதேவன்தான்; அம்பிகை எல்லாம் பகவதிதான். பிற கோயில்களைப் போலவே இந்த சிவனும் நெய்தீபங்களுக்கு நடுவே ஜகஜ்ஜோதியாக ஒளிர்கிறார்.
இதையடுத்து நாம் தரிசிப்பது குருவாயூர் வெங்கடாசலபதி கோயில்:
பெருமாள் திவ்ய சொரூபினராகக் காட்சியளிக்கிறார். இங்கே தாயாருக்கும் தனி சந்நிதி உண்டு. தாயாரை திருவேங்கடத்தம்மா என்று அழைக்கிறார்கள்.
பெருமாளுக்கு அடுத்து, குருவாயூர் பார்த்தசாரதி கோயில்:
அர்ஜுனனுக்கு ரதம் ஓட்டிய கிருஷ்ணன் இங்கே தனியே பேரெழிலுடன் கொலுவிருக்கிறார். கோயிலுக்கு வெளியில் அவர் ரதம் செலுத்துவது, ம்யூரல் ஓவியங்களாக நம் கண்களைக் கவர்கின்றன (பொதுவாகவே எல்லா கேரளக் கோயில்களிலும், கருவறையைச் சுற்றிலும் அந்தந்த தெய்வங்களின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் அத்தகைய ஓவியங்கள் சிறந்து ஒளிர்கின்றன)
அடுத்தது மம்மியூர்:
குருவாயூரிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவுதான். கண்ணகாவு பகவதி கோவிலிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு. மகாதேவன், கோயில் கொண்டிருக்கும் தலம். சிவன் கோயில்தான் என்றாலும், பார்வதிக்குதான் இங்கே மகிமை அதிகம் என்றும், மூல ஸ்தானத்தில் தரிசனம் அளிக்கும் ஈஸ்வரனோடு, சக்தியும் ஐக்கியமாகியிருப்பதாகவும் சொல்கிறார்கள். மகிமை மிகுந்த ஊர் என்பதே மம்மியூர் என்று மாறிவிட்டதாக, தகவல் பலகை ஒன்று தெரிவிக்கிறது. பார்வதிக்கு மகிமை அதிகம் என்பதால் மம்மியூர்! (அதுவே சிவபெருமானுக்கு இங்கே மகிமை அதிகம் என்றால் இது 'டாடியூரா'கியிருக்குமோ!) பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி தேவையான உடல் உறுப்புகள் பொறித்த தகட்டை எடுத்து சுவாமிக்கு முன் காட்டலாம் என்பது இங்கே ஒரு வழிபாட்டு முறை.
அடுத்ததாக திருப்ரையார்:
மூலவராக ஸ்ரீராமர் கொலுவிருக்கிறார். இவர் நான்கு திருக்கரங்களுடன் விளங்குவது குறிப்பிடத்தக்கது. சீதை, லட்சுமணன், அனுமன் இன்றி, தனியாக விளங்குகிறார். ராமர் சந்நிதியில் ராமர் முன் வில்-அம்பு பிரதிமையை (ரூ. 175/- கட்டணம் செலுத்தி) சமர்ப்பிக்கலாம் – நம் பிரச்னைகள் எல்லாம் தூள்தூளாகி விடும் என்று நம்பிக்கை. ஸ்ரீராமரை தரிசித்துவிட்டு வலம்வந்து ஆலய தீர்த்தமான திருப்ரை ஆற்றங்கரைக்கு வரலாம். படித்துறையில் இறங்கிச் சென்று, நீரில் அலைந்து கொண்டிருக்கும் மீன்களுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி அரிசி போடலாம். தவிர இங்கே வெடி பிரார்த்தனையும் செலுத்தப்படுகிறது. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி சீட்டு வாங்கிக்கொண்டு, வெடிபகுதிக்கு வந்து கொடுத்தால், நம் சார்பில் பெருத்த ஒலியெழுப்பக் கூடிய வெடியை வெடிக்கிறார்கள். இதனால் தம் துன்பங்கள் தொலையும், எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை! கோயிலில் கிருஷ்ணருக்கென்று தனி சந்நிதி உள்ளது.
அடுத்து, கொடுங்களூர் பகவதி அம்மன் கோயில்:
இங்கேயும் வெடிசத்தம் காதைப் பிளக்கிறது. ஆமாம், இங்கேயும் அதே பிரார்த்தனை. மதுரையை எரித்த கண்ணகி ஆவேசம் தணியாமல் அலைந்தபோது இந்தப் பகுதிக்கும் வந்தாள் என்றும், அவளுடைய ஓர் அம்சமே இந்த பகவதி என்றும் சொல்லப்படுகிறது. அந்த காலத்திய கிராமத்து வீட்டினுள் நுழைவது போல தலைகுனிந்துதான் கோயிலினுள் செல்லவேண்டும். இங்கு கணபதி, மஹாதேவன், பகவதி, சப்தமாதர்கள் ஆகியோருக்குத் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன. மிகப்பெரிய உருவிலான பகவதியை தரிசித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் பக்கவாட்டில் உள்ள சிவன் சந்நதிக்கு முன்னே நின்றபடி தரிசிக்கும் பக்தர்கள் நம்மை நெருக்குவார்கள். ஆமாம், இரண்டு சந்நிதிகளும் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி அடுத்தடுத்து இருப்பதால் இரு சந்நிதி பக்தர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை.
பிராகாரத்தை வலம் வந்தால் வைசூரிமாலா என்ற மாரியம்மன், தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறாள். சாத்தப்பட்ட கதவின் கம்பிகளுக்கு ஊடே அம்மனை தரிசிக்க வேண்டும். கதவருகே ஒரு பெண்மணி நின்று கொண்டிருக்கிறார். இவரிடம் பத்து ரூபாய் தட்சணை செலுத்தினால், ஒரு பிடி மஞ்சள்பொடியை எடுத்து நம் தலையை மூன்று முறை சுற்றிவிட்டு கதவு கம்பிகளுக்குள் கைவிட்டு, அம்மன் சிலைமீது படும்படியாக வீசுகிறார். இதனால் நமக்கு அனைத்து திருஷ்டிகளும் விலகுவதோடு, உடல்நலக் குறை எதுவும் ஏற்படாதாம்.
திருவெம்பாடி கிருஷ்ணன் கோயில் அடுத்தது:
இந்த கிருஷ்ணன் பேரழகோடு திகழ்கிறார். மிகச்சிறப்பான அலங்காரம். அப்படியே கண்ணுக்குள் நிரந்தரமாக நிற்கும் எழில்மிகு தோற்றம். குருவாயூரப்பனை தரிசிக்க இயலாதவர்கள் இந்த கிருஷ்ணனை தரிசித்து அதே பலனைப் பெறலாம் என்கிறார்கள். கிருஷ்ணனுக்கு அருகிலேயே திருவம்பாடி பகவதிக்கும் தனிசந்நிதி உள்ளது. இந்தக் கோயிலின் பின்புறத்தில் கணபதிக்குத் தனி கோயில். பிரதானமாக பிள்ளையார் வீற்றிருக்க, முருகன், வைசூரிமாலா, நவகிரகங்கள், ஆஞ்சநேயர் ஆகியோரும் தனித்தனியே சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள்.
அடுத்த தரிசனம் – பரமக்காவு பகவதி அம்மன்:
இந்த அம்மனைப் போற்றி தேவி நாராயணீயம் இயற்றப்பட்டிருக்கிறது. (குருவாயூரப்பனுக்கு நாராயணீயம் போல) கோயிலில் நம்மை பிரமிக்க வைக்கின்றன, சுடர்விடும் விளக்குகள். எல்லாம் நெய் தீபங்கள். குறிப்பாக சுமார் 20 அடி உயரம் கொண்ட விளக்குத் தூண். இதில் 15 தட்டுகள். ஒவ்வொன்றிலும் எட்டு திசைகளையும் நோக்கியபடி எட்டு தீபங்கள் ஒளிர்கின்றன. பக்கவாட்டில் உள்ள ஏணி வழியாக ஏறிச்சென்று இந்த தீபங்களை ஏற்றுகிறார்கள். இந்த விளக்குத் தூணில் உள்ள அத்தனை தீபங்களும் ஒன்றுபோல, ஒரே சீராக ஒளிபரப்புகின்றன.
இதேபோல கோயில் முழுவதிலும், கர்ப்பகிரகம், மாடங்கள் முன்னால் எண்ணெய்-திரி இடப்பட்ட தொங்கும் விளக்குகள், கருவறையினுள் சரவிளக்குகள் என்று ஜகஜ்ஜோதியாக ஆலயம் திகழ்கிறது. இந்த விளக்குகளின் வெப்பம் நம்மை அரவணைத்து நம் துயரையெல்லாம் தான் கிரகித்துக் கொள்ள, நாம் பேரானந்தம் அடைகிறோம். பகவதி, வலது கரத்தில் தாமரையையும், இடது கரத்தில் பெரிய வாளையும் ஏந்தியிருக்கிறாள். நேரடி தரிசனம் தவிர, வலம் வந்து கருவறை சாளரம் வழியாக தாமரை-வாள் தரிசனத்தையும் நாம் பெறலாம். இந்த பகவதியை தரிசிப்பது, சோட்டானிக்கரா பகவதியை தரிசிப்பதற்குச் சமம் என்கிறார்கள்.