மாரியம்மன் கோவில்களில் தீச்சட்டி வழிபாடும், தீமிதி விழாவும், கூடை கூடையாய் மலர்களைத் தூவி பூச்சொரிதல் வழிபாடும் இந்த ஆடி மாதத்தில் தான் மிகச் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம் தேவர்களின் இரவு காலமாக இதனை கருதுவர். ஜோதிட நூல்கள் இந்த மாதத்தை சக்தி மாதம் என்று குறிப்பிடுகிறது.
ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். எல்லா மாரியம்மன் கோவில்களிலும் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பாக போற்றப்படுகிறது. அந்நாட்களில் அம்மன் கோயில்களில் கூட்டம் அலைமோதும். ஆடி மாதம் புண்ணிய காலங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் மாதம் என்பார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜையும், மாவிளக்கு போடுதலும் சிறப்பாக நடைபெறும். ஆடி வெள்ளியில் பாம்பு புற்றுக்கு பால் தெளிப்பதும் விசேஷ பூஜைகள் செய்வதும் உண்டு.ஆடி மாதத்தில் தான் பூச்சட்டி எடுக்கும் விழா நடைபெறும். இதை அக்னி சட்டி வழிபாடு என்றும் அழைப்பார்கள். அம்மனுக்கு வேண்டிக்கொண்டு அக்னிசட்டி எடுப்பவர்கள் முறையாக விரதம் இருந்து எடுப்பார்கள். மண் சட்டியில் உமியுடன் பன்னீர் கலந்து அதன் மேல் மா, அரசு, வேம்பு போன்ற குச்சிகளை அடுக்கி பசு நெய் விட்டு அதற்கு மேல் கற்பூரம் வைத்து நெருப்பை ஏற்றி அக்னி சட்டியை தயார் செய்து வேண்டிக் கொண்ட பக்தர்கள் இந்த அக்னி சட்டியுடன் கோவிலை வலம் வருவார்கள்.
ஆடி மாதம் எல்லா வைணவ தலங்களிலும் "கஜேந்திர மோட்சம்" என்ற வைபவம் சிறப்பாக நடைபெறும். கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்விய போது யானை "ஆதி மூலமே" என்று அலற திருமால் சக்ராயுதத்தை ஏந்தி யானையை காப்பாற்றினார். இதை நினைவுபடுத்தும் வகையில் ஆடி மாதம் வைணவ தலங்களில் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறும்.
ஆடி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைப்பது மிகவும் விசேஷம். பொங்கல் வைக்க பயன்படுத்தும் வறட்டியின் சாம்பல்தான் கோவிலில் அம்மனின் பிரசாதமாக தரப்படுகிறது.
ஆடி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது. இந்நாளில் முன்னோர்கள் வழிபாடு நடைபெறும். கடல் நீராடுதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற கடல்களில் நீராடி முன்னோர்களை வழிபடுவதும், புனிதமான கடல் நீரை எடுத்து வந்து வீட்டில் தெளிக்க தீய சக்திகள் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
கோவில்பட்டி அம்மனுக்கும், நெல்லை காந்திமதி அம்மனுக்கும் ஆடிப்பூரம் திருவிழாவில் வளைகாப்பும் சீமந்தமும் நடைபெறும். அம்மனுக்கு அணிவித்து பிரசாதமாக தரப்படும் வளையல்களை அணிந்து கொள்ள பிள்ளைப்பேறு வாய்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.