
தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள சிவன் கோவில் இது. தஞ்சை பெரிய கோவிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் ஒன்று.
கொங்கண முனிவர் வழிபட்ட ஈசனான கொங்கணேஸ்வரரைப் பற்றிய புராண செய்திகள் பவிஷ்யோத்தர புராணத்தில் உள்ளன. கொங்கணச் சித்தர் அத்ரி மகரிஷியின் சீடரான தத்தாத்ரேயரிடமிருந்து மறைநூல் கற்றவர். வடபுலத்தில் இருந்து தென்னகம் வந்தவர்.
புராணக்கதை:
புராணத்தின் படி கொங்கண சித்தர் சோழமண்டலத்திற்கு வந்து இங்குள்ள தலத்தில் அமர்ந்து தவம் செய்தார். அதனால் இறைவன் இவரது சடை முடிக்குள் வந்து தங்கிக் கொண்டார். சிவன் இல்லாமல் பிரபஞ்சத்தின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், இந்திரன் ஒரு புலியின் வடிவத்தை எடுத்து சித்தரிடம் வந்து சிவனை விடுவிக்க முயன்றார்.
ஆனால் துறவி புலியை முத்திரை குத்தி அதை அசைய விடாமல் செய்ததுடன், அதைத் தனது வாகனமாகக் கொண்டு தன்னுடைய தவத்தை தொடர்ந்தார். சப்தரிஷிகள் சிவனை மட்டுமல்ல இந்திரனையும் சித்தரிடமிருந்து விடுவிக்கும் பொருட்டு மனமுருக வேண்டினர். இதனால் மனம் இறங்கிய கொங்கணர், "ஒரு ஆண்டுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்; உங்கள் எண்ணம் ஈடேறும்," என்று கூறினார். அதன்படி தேவர்களும் வழிபடவே, கொங்கணரின் சடைமுடிக்குள் இருந்து சிவபெருமான் தோன்றினார். கொங்கணர் சிவலிங்கத்தை இங்கே நிறுவி வழிபட்டார். ஈசன் ஜோதி வடிவில் வெளியே வந்தார்.
இன்றும் கோவிலில் சப்த ரிஷிகளுடன், சித்தரின் சிலை மற்றும் 11 அடுக்கு விளக்கு ஏற்றுவதற்கான வசதியும் உள்ளது.
ஞானாம்பிகை என்ற பெயரில் அம்மன் இங்கு அருள் பாலிக்கிறார். இறைவனுடைய அதே சக்தியை அம்மன் இத்தலத்தில் பெற்றிருக்கிறாள். கல்வி கேள்விக்கு இத்தலம் உரியது.
கோவில் அமைப்பு:
நகரின் மையப் பகுதியில் மேற்கு பிரதான வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் புதுப்பித்தல் பணிகள் காரணமாக அதன் பழமையான தோற்றத்தை இழந்து கோவிலை கட்டியது யார், கோவிலின் காலம் போன்றவை தெரியாமல் போய்விட்டது. இக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டுள்ளது. எதிர் திசையில் அய்யன்குளம் என்னும் அழகான குளம் ஒன்றும் அமைந்துள்ளது.
சிறப்புகள்:
சிவலிங்கம் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் சிவன் கொங்கணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மான் மழு ஏந்திய அம்பிகை:
தெற்கு நோக்கி தனி சன்னதியில் ஞானாம்பாள் அம்பிகை வீற்றிருக்கிறாள். நான்கு கைகளுடன் காட்சி தரும் இவள் சிவனைப் போலவே மேல் கைகளில் மான் மற்றும் மழு ஏந்தி மிகவும் அரிதான கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தருகிறாள். யோக விநாயகர், தனி சன்னதியில் அன்னபூர்ணேஸ்வரியும் உள்ளனர்.
அன்னபூரணி சன்னதி:
தஞ்சை செட்டியாரின் வளர்ப்பு மகள் அன்னபூரணி, இறைவனையே மணந்து கொள்ள நினைத்து பக்தி செலுத்தியதால் இத்தலத்தில் அவருக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. மராட்டிய மன்னர்கள் காலத்தில் (1832-1855) எழுதப்பட்ட தெலுங்கு மொழிக் காவியமான 'அன்னபூர்ணா பரிணயமு' என்ற நூலில் தஞ்சை நகர செட்டியார் ஒருவரின் வளர்ப்பு மகளான அன்னபூரணா தேவி என்பவள் கொங்கணேஸ்வரரிடம் அளவற்ற பக்தி கொண்டு அவரையே மணந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
கோவிலின் புராணத்தை சித்தரிக்கும் கோலத்தில் உள் பிரகாரத்தில் கொங்கண சித்தரின் சிலை, சப்தரிஷிகள் மற்றும் 11 அடுக்கு விளக்குகள் ஆகியவை காணப்படுகின்றன. இங்கு சில கல்வெட்டுகளும், இரண்டாம் ஏகோஜி மன்னரின் இரண்டு செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.