
“கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த!”
மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில் சிவபெருமானை "நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்" என்று குறிப்பிடுகிறார். அதுபோல் சிவனின் லிங்கத் திருமேனி ஒரே நாளில் வெவ்வேறு ஐந்து நிறங்களில் காட்சி அளிப்பதை நம்ப முடிகிறதா?
ஆறு நாழிகைக்கு ஒருமுறை என ஐந்து தடவை வண்ணம் மாறுகிறார் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் (Thirunallur Panchavarneswarar Temple) சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் பஞ்சவர்ணேஸ்வரர்.
காலை எட்டு மணி வரை தாமிர வண்ணத்திலும், அதன்பிறகு இளஞ்சிவப்பு நிறத்திலும், மதியம் இரண்டரை மணி வரை பொன் நிறத்திலும், அதன்பிறகு உருகிய தங்க நிறத்திலும், பின் நவரத்தின பச்சை நிறத்திலும் என ஐந்து வண்ணங்களில் தினமும் அருள்கிறார் பஞ்சவர்ணேஸ்வரர். இவருக்கு கல்யாணசுந்தரர், பெரியாண்டவர் என்ற திருநாமங்களும் உள்ளன.
வைணவத் திருத்தலங்களில் பக்தர்களுக்கு சடாரி வைப்பதுபோல், பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலிலும் சடாரி வைக்கிறார்கள். அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போமா?
திருநாவுக்கரசர் (அப்பர்) திருச்சத்திமுற்றத்தில் இறைவனை வணங்கி, “கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவாரடிகள் என் தலைமேல் பொறித்து வைப்பாய்,” என்று பதிகம் பாடி வேண்டினார். அதாவது, மரணம் வந்து தழுவும்முன் ஈசனின் திருவடியை தன் தலைமேல் வைத்து அருள வேண்டும்,” என்று வேண்டி நின்றார்.
“திருநல்லூருக்கு வா,” என்று இறைவன் அருளினார். அப்பரும் திருநல்லூர் வந்தடைந்து, இறைவனை வணங்கினார்.
“உன் நினைப்பை முடிக்கின்றோம்,” என்று சிவபெருமான் தன் பாதக் கமலத்தை நாவுக்கரசரின் சிரத்தின் மீது வைத்து அருளினார்.
“நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழுந்து மதுவாய்ப் பல்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே,” என்று தொடங்கும் பதிகம் பாடினார் நாவுக்கரசர்.
அப்பர் பெருமானுக்கு இறைவன் திருவடி சூட்டிய தலமாதலால், இப்போதும் பக்தர்களுக்கு சடாரி சாற்றும் பழக்கம் பின்பற்றப்படுகிறது.
அகத்திய முனிவருக்கு ஈசன் திருமணக் கோலம் காட்டி அருளிய தலங்களில் திருநல்லூர் தலமும் ஒன்று. அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை, கருவறையில் மூல லிங்கத்தின் பின்புறம் இப்போதும் காணலாம். இறைவனின் மணக்கோலத்தைத் தரிசித்து மகிழ்ந்த அகத்தியர், பஞ்சவர்ணேஸ்வரரின் வலதுபுறம் அதே ஆவுடையாரில் மற்றொரு சிறிய லிங்கத்தை வைத்து பூஜைத்தார்.
பிருங்கி முனிவர் வண்டு வடிவில் இறைவனை ஆராதித்ததால் லிங்கத் திருமேனியில் துளைகள் காணப்படுகின்றன.
அமர்நீதி நாயனாரை ஈசன் ஆட்கொண்ட தலம் இது.
பழையாறையில் வாழ்ந்த அமர்நீதியார் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். திருநல்லூரில் அன்னதானம் செய்வதற்காக ஒரு மடம் கட்டி இறைத் தொண்டாற்றி வந்தார். ( இந்த மடம் இப்போதும் இருக்கிறது).
ஒருமுறை பிறைசூடிய பெருமான் வேதியர் வடிவில் அங்கு வந்தார். அவரை வரவேற்று அமுதுண்ண உபசரித்தார் அமர்நீதி நாயனார்.
“நான் காவிரியில் நீராடி வருகிறேன். மழை வரும்போல இருக்கிறது. இந்த உலர்ந்த கோவணத்தைத் தருகிறேன். பத்திரமாக வைத்திருக்கவும்.
நான் குளித்து வந்ததும் வாங்கிக் கொள்கிறேன்,” என்று அவர் கையில் வைத்திருந்த கோலின் ஒரு முனையில் கட்டியிருந்த இரண்டு கோவண ஆடைகளில் ஒன்றை எடுத்து அமர்நீதியாரிடம் கொடுத்தார் இறைவன்.
“இதை சாதாரணக் கோவணத் துணியாக நினைத்து மற்ற வஸ்திரங்களோடு போட்டுவிடாதீர்கள். பத்திரமாக வைத்திருக்கவும்,” என்று அழுத்தம் திருத்தமாக எச்சரித்துச் சென்றார் வேதியர் வடிவில் இருந்த ஈசன்.
அமர்நீதியார் அதை பத்திரமாக ஒரு பேழையில் வைத்து மூடினார். இறைவனின் திருவிளையாடலால் மழையும் வந்தது. சிவ வேதியர் நனைந்தபடியே திரும்பி வந்தார்.
“நான் உம்மிடம் கொடுத்துச் சென்ற உலர்ந்த கோவணத்தை எடுத்து வாரும்,” என்று மழையில் நனைந்ததால் நடுங்கியபடியே கேட்டார்.
அமர்நீதியார் ஓடிச்சென்று கோவணத்தை வைத்திருந்த பேழையை எடுத்தார். ஆனால் அந்தப் பேழைக்குள், பத்திரமாக இருக்கட்டும் என்று அவர் வைத்த அந்த வஸ்திரம் இல்லை. கை தவறுதலாக வேறு எங்காவது வைத்திருப்போமோ என்று வெகு நேரம் அங்கும் இங்கும் தேடிவிட்டு, தளர்ந்து நின்றார்.
என்ன செய்வது என்று தெரியாமல், அவரிடம் இருந்த வெண்கிழி கோவணம் ஒன்றை எடுத்து வந்து, அதை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றார்.
ஈசன் விடுவாரா…
“இதுதான் நீர் பாதுகாத்த லட்சணமா? பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு சென்றால் இப்படித்தான் தவறவிடுவதா?” என்று கடிந்துகொண்டார் சிவபெருமான்.
தொலைந்த கோவணத்திற்கு ஈடாக வேறு எது கேட்டாலும் தருவதாகக் கெஞ்சினார் அமர்நீதியார். திருவிளையாடல் என்று ஆரம்பித்த பிறகு சிவபெருமானும் லேசில் விடுவாரா?
“ஒரு தராசு கொண்டு வாருங்கள். ஒரு தட்டில் என் கையிலிருக்கும் தண்டில் உள்ள மற்றொரு கோவணத்தை வைக்கிறேன். அதற்கு சமமான கோவணத்தைக் கொடுத்தால் போதும்,” என்றார் வேதியர்.
அமர்நீதியாருக்கு மகிழ்ச்சி. கோணத்துக்கு ஈடாக வேறொரு கோவணம்தானே, இதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது என்று ஒரு தராசைக் கொண்டு வந்தார்.
வேதியர் தன் தண்டிலிருந்த கோவணத்தை எடுத்து தட்டில் வைக்க, அமர்நீதியார் தானம் செய்வதற்காக வைத்திருந்த ஒவ்வொரு வஸ்திரங்களையும் எடுத்து வைத்தார். எல்லாவற்றையும் வைத்தபிறகும் தட்டுகள் சமமாகவில்லை.
அடுத்து, தன்னிடம் இருந்த பட்டாடைகளை வைத்தார். அதன்பின் வெள்ளி நவரத்தின அணிகலன்களை வைத்துப் பார்த்தார். எதற்கும் தராசு சமமாகவில்லை.
கடைசியில் மனைவி பிள்ளையுடன் அவரும் தராசு ஏறினார். வேதியர் சட்டென்று மறைந்தார். பஞ்சவர்ணேஸ்வரர் கல்யாண சுந்தரியோடு வானவெளியில் காட்சி அளித்தார்.
குடும்பத்தோடு நின்ற தராசு ஆகாயத்தை நோக்கிப் பறந்து கைலாயம் சென்றது. அத்தகைய பெருமைமிக்க, புண்ணியம் மிக்க க்ஷேத்திரம் இது. அமர்நீதியார், அவரின் மனைவி மகன் வடிவங்களையும் இந்தத் திருநல்லூர் கோவிலில் நாம் தரிசிக்கலாம்.
இப்படி, பஞ்சவர்ணேஸ்வரரின் சிறப்புகள் ஏராளம் உள்ளன.