
சூரிய பகவான் வஞ்சனையின்றி தன் வெப்பக் கதிர்களை வீசினாலும் அதை தங்களின் ஈரத்தாலும் வீரத்தாலும் குளிரச் செய்து தங்களுக்கென்று ஒரு சரித்திரம் கொண்டு மண் மணம் கமழும் திருவிழாக்கள் இன்னும் நம் தமிழ் மண்ணில் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அத்தகைய திருவிழாக்களுக்கு செல்லும் சமயம்தான் நம் ஆதித் தமிழனின் அன்பும் பண்பும் விருந்தோம்பலும் உணரக்கூடியதாக இருக்கிறது. நம் பண்பாட்டை மண் சார்ந்து மனம் சார்ந்து இன்று வரை உயிரோட்டமாய் வைத்திருப்பது கிராமப்புறங்கள்தான் என்பதை இங்கு பதிவு செய்தேயாக வேண்டும்.
அப்படியோர் திருவிழா, அதையொட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு ஆகிவற்றில் கலந்து கொள்ளும் அற்புத வாய்ப்பு ஒன்று கிட்டியது. பால்குடம், அன்னதானம், 'வள்ளித் திருமணம்' நாடகம் என விருந்தோம்பலுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தாலும் அந்த மகிழ்ச்சியுடன் வீரத்தையும் கலந்துதான் பரிமாறுவோம் என்பதாகத்தான் அந்த மஞ்சுவிரட்டு அமைந்திருந்தது. பிடிவீரர்கள் பத்து பேர் சுற்றி நிற்க அத்தனை பேரையும் சமாளிக்கும் ஒற்றைக்காளை. புழுதியும் விசிலும் உற்சாகமும் கரைபுரண்டோட வீரனோ காளையோ யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியால் களமே குலுங்குகிறது.
அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, சிவகங்கை மாவட்டம்.
சிவபெருமான் திருக்கண்களை விளையாட்டாகப் பொத்தினார் பராசக்தி. உலகங்களுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் கண்கள் மூடப்பட்டதால் எங்கும் இருள் சூழ்ந்தது. இந்தக் குற்றத்திற்காக கருப்பு நிறக் காளியாக அவதாரம் பெற்றார்.
சண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தினான். எனவே, காளியிடம் அபயம் வேண்ட, காளி சண்டாசுரனை வெற்றி கண்டாள். இச்சமயத்தில் தேவர்கள் தங்கிய இடம் தேவகோட்டை என்றும், தேவியைக் கண்ட இடம் கண்டதேவி என்றும், சண்டாசுரனின் தேர்க்கொடி முறிந்த இடம் கொடிக்குளம் என்றும், அவனை வெற்றி கண்ட இடம் வெற்றியூர் என்றும், தேவர்கள் பூ மழை பொழிந்த இடம் பூங்குடி என்றும், வழங்கப்பெற்றன. சண்டாசுரவதத்தின் பின் காளி, திருக்கானப்பேர் என்னும் காளையார் கோயிலை அடைந்து காளீஸ்வரரை வணங்கித் தவமிருந்து கரிய உருவம் நீங்கப் பெற்று உமாதேவியாக மாறினாள். காளையார்கோயில் செல்வதற்கு முன் அன்னை காளி வீற்றிருந்து அருள்புரிந்த திருத்தலமே அரியாகுறிச்சி எனப்படுகிறது.
இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளாக அய்யனார் கோயில் அமைந்திருந்தது. ஈச்சமரங்களும் காரைச்செடியும் சூழ்ந்திருந்த இப்பகுதியில் பலருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அய்யனாரை காரி வேளார் மற்றும் கருப்ப வேளார் ஆகியோர் வழிபாடு செய்து வந்தனர். அய்யனார் சந்நிதிக்கு முன் மண்ணில் சில எழுத்துக்கள் அழியாமல் இருந்ததை கண்ட அந்த மந்திர எழுத்துக்கள் காளிக்கு உரியவை என அறிந்து அந்த இடத்தில் காளியைத் தோற்றுவித்தனர். ஈச்சங் காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் பெற்ற அய்யனார் வெட்டி எடுக்கப்பெற்றவர் என்பதால் வெட்டுடைய அய்யானர் என்றும் அவருக்கருகில் நிலைபெற்ற காளி வெட்டுடைய காளி என்றும் பெயர் பெற்றனர்.
இந்த ஆலயத்தைப் பற்றி இன்னுமோர் வரலாறும் உள்ளது. சிவகங்கையில் 18-ம் நூற்றாண்டின் பின்பகுதியில் வாழ்ந்த மன்னர் முத்து வடுகநாதர் காளையார்கோயிலில் ஆங்கிலப் படைத் தளபதி பான்ஜோர் என்பவனால் கொல்லப்பட்டார். அவர் மனைவி வேலு நாச்சியார், மருதுபாண்டியரோடு காளையார்கோயிலுக்கு வந்து கணவனுக்கு மாலையீடு செய்துவிட்டு நாட்டரசன்கோட்டையில் இருந்த அமைச்சர் தாண்டவராயர் இல்லத்துக்கு, அரியாகுறிச்சிக் காட்டு வழியாக வருகிறார். அவரைப் பிடிக்க வந்த ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பித்துக் கீரனூர்க் கண்மாய்க் கரையைத் தாண்டிவிட்டார். வீரராணி வேலு நாச்சியாரை விடாமல் துரத்திக்கொண்டு வந்த கம்பெனிப் பட்டாளம் அரியாகுறிச்சி வந்தது.
அந்த காட்டுக்குள் உடையாள் எனும் இளம் பெண் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாள். சீறிவரும் குதிரையில் அமர்ந்திருந்த தனது மகாராணிக்கு அவர் செல்ல வேண்டிய பாதையை காட்டிவிட்டு பழைய நினைவுகளில் மூழ்கிப்போனாள்.
தனது கழுத்துக்குப் பதக்கச் சங்கிலி அணிவித்தது; கைகளில் வளையல்கள் பூட்டிவிட்டது; திருமணத்தை தாம் நடத்தி வைப்பதாகக் கூறியது; திருடுபோன மாடுகள் வீட்டிற்குத் திரும்பிவர ஏற்பாடு செய்தது என வேலு நாச்சியார் செய்த ஒவ்வொரு செயலும் உடையாள் நினைவில் வந்து உட்கார்ந்து கொண்டது.
பழைய நினைவுகளில் கட்டுண்டு அமர்ந்திருந்த உடையாளை குதிரைகளின் குளம்புச் சத்தம் திசை திருப்பியது. பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த வீரர்கள் நாச்சியாரைத்தேடி வந்துள்ளதை ஊகித்துக்கொண்டாள்.
அந்த உரையாடலை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன் அப்போதுதான் தமிழ் குருதியின் வீரம் உணரக்கூடியதாக இருக்கும் நட்புக்களே…
“காடு சூழ்ந்த பகுதியில் திசை தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றனர்... அவர்கள் கண்களுக்கு உடையாள் அகப்பட்டதும் அருகில் அழைத்தனர்..சென்றாள்.
"இந்தப் பக்கம் வேலு நாச்சியாரைப் பார்த்தாயா?" என்றான் ஒருவன்.
"பார்த்தேன்..."
வந்தவர்கள் முகங்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன...
''எந்தப் பக்கம் வேலுநாச்சியார் சென்றாள் என்று உனக்குத் தெரியுமா?" என்றான் மற்றொருவன்.
"சொல்லு" என்று துரிதப்படுத்தினான் வேறொருவன்,
"முடியாது!" என்று உடையாள் சொல்ல, ஒருவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்... அவன் கைவிரல்கள் பட்டு உடையாள் கன்னம் சிவந்தது... அடிதாங்க முடியாமல் அவள் கண்கள் கலங்கின...
உடையாள் உண்மையைச் சொல்லி விடுவாள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்...
''ஓராயிரம் அடிகொடுத்தாலும் வேலு நாச்சியார் எந்தப் பக்கம் போனார் என்ற உண்மையைச் சொல்ல முடியாது" என்றாள் உடையாள்.
ஒருவன் அவள் தலைமுடியைப் பற்றித் தரதரவென்று இழுத்தான்... மற்றொருவன் ஓங்கி அடி வயிற்றில் மிதித்தான்...
வைராக்கியம் உடையாள் நெஞ்சில் வளர்ந்து நின்றதால், அந்தக் கொடியவர்களைக் கண்டு சிரித்தாள். இவளிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஒருவன் வாளை உருவினான்.... கண்ணிமைக்கும் நேரத்தில் வாளை உடையாள் கழுத்தில் வீசினான்... தலை வேறு முண்டம் வேறாக உடையாள், மடிந்து மண்ணில் சாய்ந்தாள்...
உண்மையை அறிய முடியாத ஆத்திரத்தில் வெட்டுப்பட்ட உடையாள் தலையை காலால் எத்திவிட்டுச் சென்றனர்... வெட்டுப்பட்ட உடையாள் முகத்தில் கூட ஒருவிதக் கம்பீரம் காட்சி தந்தது!
தெய்வமாக மாறிய அந்த பெண் வெட்டப்பட்ட உடையாள் என்பதால் வெட்டுடையாள் என வழிபடப் பெற்றாள். பிற்காலத்தில் ராணி வேலுநாச்சியார் இந்த கோவிலுக்கு பல கிராமங்களை மானியமாக வழங்கி தன் திருமாங்கல்யமான வைரத்தாலியையே வெட்டுடையாளுக்கு காணிக்கையாக்கினார்.
அன்னையை நேரில் தரிசித்து வழிபட்டவர்களுக்கு மட்டுமில்லாமல் தங்கள் வீட்டிலிருந்து அன்னையை நினைத்து காசு முடிந்து வைப்பவர்களுக்கும் தீராத நோய் தீருகிறது. கணவன் உயிர் பிழைக்க மாங்கல்யம் நிலைக்கிறது. வீட்டில் குழந்தைகளை விளையாட வைக்கும் வெட்டுடை காளி அந்த வீட்டில் தானும் குழந்தையாய் தங்கியிருந்து தழைக்கச் செய்கிறாள்.
குறிப்பிட்ட சில கொடுமைகளை தாங்க முடியாமல் அன்னையிடம் முறையிட்டவர்கள் விரைவில் நல் வாழ்வு பெறுவதும் திருட்டு கொடுத்தவர்கள் பொருட்கள் தானே திரும்பி வருவதும் இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடக்கின்றன. அன்னையின் சன்னதிக்கு பின்புறம் உள்ள சிறிய பீடத்தில் வெட்டி போடப்பட்ட காசுகள் எண்ண முடியாதவை. ஒரு கூண்டுக்குள் நிறைந்து கிடைக்கும் காசுகளை தொடுவதற்கே மக்கள் அஞ்சுகிறார்கள்.
தாங்க முடியாத அளவுக்கு தொல்லைக் கொடுக்கும் எதிரிகளுக்காக யாராவது காசு வெட்டிபோட்டால் அந்தக் கொடியவர்கள் அதன் பலனை பெறுகிறார்கள். வறுமை மாறவும் தொழில் வளமுறவும் செய்யும் அன்னை கொடியவர்களைத் தண்டித்து கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிக்கிறார். இங்கு பொய்யாக சத்தியம் செய்தவர்கள் பிழைத்ததாகச் சரித்திரம் இல்லை. உலகத்திலேயே பெரிய நீதிமன்றம் அரியாக்குறிச்சியில் இருக்கிறது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அன்னை வெட்டுடைய காளி. இவள் ஏழைகளுக்காக இறங்கி வந்து இலவச நீதிமன்றம் நடத்தும் தாயானவள். சில சமயங்களில் நீதியை நிதி அசைத்துவிடக் காண்கிறோம். இவள் சன்னதியில் நிதியும் நீதியும் கைகட்டி நிற்கின்றன. பரிகாரம் கேட்டு நிற்பவரும் பலன் கிடைத்ததும் காணிக்கை செலுத்துபவருமாக இவர் சன்னதி எப்பொழுதும் நிறைந்துள்ளது.
இது ஒரு சிறப்பான பிரார்த்தனைக் களம். கணவன் உயிர் பிழைத்தால் தன் தாலியை கழற்றி வெட்டுடைய காளியம்மனுக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்று பிரார்த்தனை செய்வோர் பலர். திருமணம் முதலிய மங்கள நிகழ்வுகள் அய்யனார் சன்னதியில் நிகழ்கின்றன.
சித்த வைத்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் சித்த மருந்துகளில் முக்குரு எனப்படும் மருந்தை சேர்க்கிறார்கள். இந்த முக்குறு மூன்று வகையான மருந்துகளின் கலவையாகும். இந்த மூன்றில் ஒன்று 'பூ நீர்' எனப்படுகிறது. வெட்டுடைய காளியம்மன் ஆலய பகுதியில் இந்த பூ நீர் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் மண் மீது பூத்திருக்கிறது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மருந்தைத்தேடி வருகிறார்கள்.
வெற்றித்திருமகளாம் வெட்டுடைய காளியம்மன் மீது 'வெட்டுடையாள் வீரச்சக்கரம்' என்ற நூல் பாடப் பெற்றுள்ளது. சுமார் 64 நேரசை வெண்பாக்களால் அன்னையின் புகழ் அழகாக பதியப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் செயல்படுகிறது இத்திருக்கோயில் நிர்வாகம்.
திருக்கோயிலின் வழக்கப்படி நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றின் விவரம் பின்வருமாறு
விழா பூஜை காலை 6 .45 மணி
காலசந்தி காலை 8 மணி
உச்சிக்கால பூஜை பிற்பகல் 12 மணி
சாயரட்சை மாலை 6 மணி
இத்திருக்கோயிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறந்திருக்கும். பௌர்ணமி நாளில் இரவு 10:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். நாள்தோறும் அன்னதானம் உண்டு.
ஆன்மீகத்தையும் வரலாற்றையும் அறிவியலையும் பின்னிப் பிணைத்து தன்னுள்ளே பதித்துக் கொண்டிருக்கும் இத்தலத்தில் வாழ்வதும், தரிசிப்பதும் ஒரு வரமே…
நன்றி:
*அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் தல வரலாறு - பொற்கிழிக் கவிஞர் : பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம்.
* வேலு நாச்சியார் - கே. ஜீவபாரதி