

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 54-வது ஆண்டு திருவிழா நாளை (29-ம்தேதி) சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை பெசன்ட்நகரில் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் 'ஆரோக்கிய அன்னை' (Our Lady of Good Health) என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அழகான இந்த ஆலயம் 1972-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 1971-ஆம் ஆண்டு வரை இது புனித லூயிஸ் ஆலயத்தின் ஒரு கிளை ஆலயமாய் (Sub Shrine) இருந்தது. அப்போதைய சென்னை மறைமாவட்ட ஆயர் அருள்திரு டாக்டர் ஆர். அருளப்பா அவர்கள், இந்த ஆலயத்தைத் தனிப் பங்குக் கோவிலாக (Parish Church) உயர்த்தினார். பெசன்ட் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்காக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினமும் மூன்று திருப்பலிகள் நடைபெறுகின்றன; தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், புனித அன்னையின் திருவுருவச் சிலையின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்காக, பிரார்த்தனையின் போது நாள் முழுவதும் நின்று கொண்டே காத்திருக்கின்றனர்.
இவ்வளவு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 54-வது திருவிழா நாளை (ஆகஸ்ட் 29, சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது.
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழா நாளை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, 75 அடி உயர கொடிக்கம்பத்தில் 12 அடி நீளம் கொண்ட அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி, கூட்டு திருப்பலியை நடத்துகிறார்.
அடுத்த மாதம் 8-ம்தேதி வரையிலான 11 நாட்களுக்கு இந்த திருவிழா நடக்கிறது.
அடுத்த மாதம் 7-ம்தேதி மாலை 5 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலியும், தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதில், பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
8-ம்தேதி அன்னையின் பிறந்தநாளையொட்டி அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெற உள்ளன. காலை 7.45 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9.30 மணிக்கு நடைபெறும் தமிழ் திருப்பலிக்கு அன்னைக்கு மணிமுடி சூட்டும் விழாவும் நடைபெறும். அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா கொடி இறக்க நிகழ்வுடன் நிறைவடைகிறது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நடக்கும் நாளில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரோக்கிய மாதா பேராலயங்களிளும் திருவிழா தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் 500 ஆண்டு கால வரலாற்று பெருமை கொண்ட உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ திருத்தலமாகும். இவ்வாலயம் "கிழக்கின் லூர்து" என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை திருவிழா நடக்கும். அந்தவகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவும் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா செப்டம்பர் 8-ம்தேதி நிறைவடைகிறது.
நாளை தொடங்கவுள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேராலயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பேராலய நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு 4,230 சிறப்பு பேருந்துகள் இன்று (ஆகஸ்ட் 28) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.