
முப்பெரும் தேவியர் என்று போற்றி வணங்கப்படும் மூன்று சக்திகளான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் தனித்தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கும் தலம் போரூரில் மதனந்தபுரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ துர்கா, லட்சுமி, சரஸ்வதி கோவில் .
இக்கோவில் துணிச்சல், செல்வம் மற்றும் ஞானத்தின் அடையாளமாக துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய தெய்வங்களை கொண்டுள்ளது. அவை தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.
கோயில் அமைப்பு :
26000 சதுர அடியில் அமைந்துள்ள இக்கோவிலின் கருவறை கோபுரங்கள், சோழர் காலத்தை நினைவூட்டும் வகையில் நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முகப்பின் இடது புறத்தில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் சக்தி கணபதி ஆக வீற்றிருக்கிறார். இப்பெருமானுக்கு மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
விநாயகர் பெருமானை தரிசித்துவிட்டு திரும்பும் போது அவருக்கு பின்புறம் இத்திருக்கோவிலின் முக்கிய கடவுள்களான வீரத்திற்கு அதிபதியான பட்டீஸ்வரம் துர்க்கையும், செல்வத்திற்கு
அதிபதியான மும்பை லட்சுமியும், கல்விக்கு அதிபதியான கூத்தனூர் சரஸ்வதியும் மிக அழகாய் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
இம்மூன்று சக்திகளையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தரிசிப்பதால் நம் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கின்றன.
இச்சன்னதிக்கு பின்புறம் தமிழ் கடவுளான முருகப்பெருமான் பிரம்மாண்டமான தனிச்சன்னதியில் செந்தில் ஆண்டவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு வளர்பிறையில் வரும் சஷ்டி அன்று ஆறுவிதமான பழங்கள், பூக்கள் மற்றும் பிரசாதத்துடன் சிறப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. வருடந்தோறும் கந்த சஷ்டி அன்று இங்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
பிரகாரத்தைச் சுற்றி வரும்போது கோஷ்ட மூர்த்தியாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகர், பழனி ஆண்டவர் மற்றும் பாலமுருகன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். முருகன் சன்னதிக்கு நேர் எதிர்ப்புறம் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது.
இங்கு சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகின்றன. இக்கோவிலில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் ராதா கல்யாணம் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. திருமணத்திற்கு காத்திருப்போர் கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .
வருடந்தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆண்டவருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுகிறது. அதுபோல் கோவிலில் தினப்படி பூஜையாக செவ்வாய் அன்று ராகு காலத்தில் துர்கைக்கும், புதன் அன்று சரஸ்வதிக்கும், வெள்ளியன்று லட்சுமிக்கும் சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நவராத்திரி விழா :
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் (தேவி மகேஸ்வரி, கௌமாரி, வராஹி )
அடுத்த மூன்று நாட்கள் லஷ்மிக்கும் (மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி)
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் (சரஸ்வதி நரசிம்மை, சாமுண்டீ ) சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய பூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திரியில் இந்த கோவிலில் மிகப்பெரிய கொலுப்படிகள் அமைக்கப்பட்டு பலதரப்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வெகு விமரிசையான விழாவாக கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான விஜயதசமி அன்று நவசண்டி ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், அட்சராபியாஸம். இது குழந்தைகளின் கல்வி செல்வத்திற்காக செய்யப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வியில் மேலோங்கி நிற்க இந்த பூஜை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு நடத்தப்படுகிறது.
இக்கோவில் சென்னை போரூர் ஜங்ஷனிலிருந்து 2 கி.மீ தொலைவில் குன்றத்தூர் செல்லும் வழியில் மதனந்தபுரம் என்ற இடத்தில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் :
காலை - 6.30 மணி முதல் 10.30 வரை.
மாலை 5.30 மணி முதல் 8.30 வரை.
பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று மூன்று தேவியரை தரிசித்து அருளைப் பெறலாம்.