எனக்கு ராஜாவாக நான் வாழ்வது எப்படி?

Anmiga katturai
Anmiga katturaiImage credit - pixabay
Published on

மீபத்தில் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில், எனக்கு ராஜாவாக வாழறேன் என்று ஒரு பாடலைப் பாடியிருந்தார். உண்மையில், எப்படி அவ்வாறு வாழ்வது என்ற கேள்வி வரலாம். 

நீங்கள் உங்களுக்கு ராஜாவாக இருக்க, உங்களது மனத்தின் ராஜாவாக நீங்கள் இருக்கவேண்டும். மனதை உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அது எளிதான விஷயமல்ல. அதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பின்வரும் கவியில் கூறுகிறார்கள்.

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு.

அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு - வேதாத்திரி மகரிஷி

பொதுவாக, மனிதன் மூன்று விதங்களில் தவறு செய்கிறான்.

1. அறியாமை - செயலின் விளைவினை அறியாமல் செய்வது

2. அலட்சியம் - செயலின் விளைவினை அலட்சியம் செய்வது

3. உணர்ச்சிவயம் - செயலின் பால் உணர்ச்சிவயப்பட்டு செய்வது

ஒரு உதாரணத்தோடு இவற்றை பார்க்கலாம்.

அறியாமை - சர்க்கரை நோயாளி ஒருவருக்கு, தனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவில்லை. அவர் ஜாங்கிரி சாப்பிடுகிறார். ஜாங்கிரி சாப்பிட்ட பின், துன்பம் வருகிறது. மருத்துவரை ஆலோசித்தபோது, அவருக்கு சர்க்கரைநோய் இருப்பது தெரியவருகிறது. அவர் அறியாமையினால் ஜாங்கிரி சாப்பிட்டுவிட்டார்.

அலட்சியம்- அவர் மறுபடி ஜாங்கிரி பார்க்கிறார். அவருக்கு அது ஒவ்வாது என்று தெரியும். இருந்தபோதிலும், என்ன நடந்துவிடும் என்று அலட்சியப்படுத்திவிட்டு, ஜாங்கிரி சாப்பிடுகிறார். துன்பத்திற்கு ஆளாகிறார். அவர் அலட்சியத்தினால் ஜாங்கிரி சாப்பிட்டுவிட்டார்.

உணர்ச்சிவயம் - அவர் மறுபடி ஜாங்கிரி பார்க்கிறார். அலட்சியப்படுத்தினால் என்ன விளைவு வருமென்று தெரியும். ஆனால், ஜாங்கிரியின் சுவை மீதுள்ள ஆசையினால், உணர்ச்சிவயப்பட்டு, ஜாங்கிரி சாப்பிடுகிறார். துன்பத்திற்கு ஆளாகிறார். அவர் உணர்ச்சிவயத்தினால், ஜாங்கிரி சாப்பிட்டுவிட்டார்.

நீங்கள் உங்களுக்கு ராஜாவாக இருந்தால், செயல் விளைவு அறியாமலோ, அலட்சியப்படுத்தவோ அல்லது உணர்ச்சிவயப்படவோ மாட்டீர்கள். மனம்போன போக்கில், செயல்படமாட்டீர்கள். உங்கள் அறிவின்படி வாழ்க்கை நடத்துவீர்கள். மனம் உங்கள் கட்டுக்குள் இருக்கும்.

மனதை கட்டுக்குள் வைத்திருப்பது அரிது;

ஆனால், மனத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அரிதான விஷயம். தாயுமானவர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே - தாயுமானவர்

மதம் கொண்ட யானையை கட்டுக்குள் கொண்டுவரலாம். சிங்கத்தின் மீதமர்ந்து பவனி வரலாம். நீரின் மேல் நடக்கலாம் என பலவற்றை எளிதாக செய்யலாம் என்கிறார். ஆனால், சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது என்கிறார். 

இதையும் படியுங்கள்:
புரட்டாசியில் பிரம்மோற்சவம் காணும் ஒப்பிலியப்பன் கோவில்!
Anmiga katturai

மனதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது?

அத்தகைய அலைபாயும் மனத்தினை தியானத்தின் மூலமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். அலைபாயும் மனதிற்கு தியானத்தில் வேலை கொடுக்கப்படுகிறது. ஒருமுகப்படுத்த வேலை.

மனம் எதை நினைக்கிறதோ, அதைப் போலவே வடிவம் எடுக்கிறது. தியானத்தில் இறைவனை நினைப்பதால், இறைவனின் குணாதிசயங்களும், இறைவனே ஓரறிவு முதல் ஆறறிவு வரை பரிணமித்து உள்ளதை அறிய முடிகிறது. தன்னைப் போலவே மற்ற உயிர்களையும் காணும் மாண்பு மிளிர்கிறது. அன்பும் கருணையும் மலர்கிறது. இறைவனே தானாக இருக்கிறான் என்று உணர்ந்த மனம் அவனது கட்டுக்குள் வருகிறது. இதைத்தான் சும்மா இருத்தலே சுகம் என்று மெய்ஞ்ஞானிகள் அழைத்தனர்.

இந்த சும்மா இருக்கும் நிலையைப் பற்றி பின்வரும் கவியை வேதாத்திரி மகரிஷி எழுதியுள்ளார்.

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற சீர் அறியச் செய்த குருவே!

அந்த நிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும் ஆனந்தம் பொங்கு தங்கே!

இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பலபிறவிகளின் இறுதிப்பயன் ஆகிய சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என் சந்தோஷச் செய்தி இதுவே. - வேதாத்திரி மகரிஷி.

தியானத்தை பயின்றால், நீங்கள் தேர்ச்சி அடைந்தால், நீங்கள் உங்களுக்கு ராஜாவாக இருக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com