புரட்டாசியில் பிரம்மோற்சவம் காணும் ஒப்பிலியப்பன் கோவில்!

Oppiliyappan Temple festival
Anmiga katturai...
Published on

108 திவ்ய தேசங்களில் விண்ணகரம் என்று சிறப்பிக்கப்படும் வைணவ தலங்கள் ஆறு. அவற்றில் ஒன்றுதான் உப்பிலியப்பன் கோவில். மற்றவை சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுரம் விண்ணகரம், பரமேஸ்வர விண்ணகரம்.

ஐந்து நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் தங்க குடம் கொண்டே திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அனுமனுக்கு தங்கவால், வைர கிரீடம் அணிவிக்கப்படுகிறது.

 திருவிண்ணகரப்பன் எனப் போற்றப்படும் உப்பிலியப்பன் மூலவராகவும், பொன்னப்பன் என்ற திருநாமத்துடன் உற்சவராகவும் பூமாதேவி தாயாருடன் காட்சி தரும் பெருமாள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார்.

இங்கு புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசமாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. "தென்திருப்பதி" என அழைக்கப்படும் இத்தலம் திருப்பதிக்கு வேண்டிக் கொண்டதை செய்ய முடியாமல் போகும்பொழுது இத்தலத்தில் வந்து செய்து முடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவிலின் தனிச்சிறப்பு:

*உப்பில்லாமல் நிவேதனம் செய்யப்படும் ஒரே கோவில். 

*ஒரே கருவறையில் பெருமாளுக்கு வலப்புறத்தில் திருமண கோலத்துடன் வீற்றிருக்கும் தாயார் மற்றும் மார்க்கண்டேய மகரிஷி.

*திருப்பதி போல் தனி சுப்ரபாதம் பாடப்படும் கோவில்.

இங்கு பெருமாள் பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான "மாம் ஏகம் சரணம் விரஜ" என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கான பொருள் "என்னை சரணடைப்பவர்களை காப்பேன்" என்பது. நம்மாழ்வார் இவரை யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர் எனும் பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்மாழ்வாருக்கு திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்து அருளினார். இந்த கோவிலில் நைவேத்தியங்கள் உப்பில்லாமலே தயாரிக்கப்படுகிறது. அத்துடன் உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் கூறப்படுகிறது.

தல வரலாறு:

மார்க்கண்டேய மகரிஷி மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி தவம் இருந்தார். லட்சுமி அம்சமான பூமாதேவி குழந்தை வடிவில் துளசி செடிக்கு கீழே இருப்பதைக் கண்டு தன் ஞான திருஷ்டியில் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்தார். அவளுக்கு துளசி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது திருமால் ஒரு முதியவர் வேடத்தில் வந்து பெண் கேட்க, மார்கண்டேய மகரிஷி சம்மதிக்கவில்லை. "சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படிப்பட்டவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது" என்று கூற திருமாலோ உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். மகரிஷி தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்து தன் மகளை மணம் செய்து வைத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் "உப்பிலியப்பன்" என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் "ஒப்பிலியப்பன்" என்றும் திருநாமம் கொண்டு இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வருடத்தில் இருமுறை சூரிய பகவான் வழிபடும் ஸ்ரீமுக்தீஸ்வரர்!
Oppiliyappan Temple festival

மார்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால் இங்கு மிருத்யுஞ்சய ஹோமம் ஆயுள் விருத்திக்கு நடைபெறுகிறது. இங்குள்ள புஷ்கரணிக்கு "பகலிராப்பொய்கை" என்று பெயர். அதாவது இந்த குளத்தில் இரவு பகல் என எந்த நேரமும் நீராடலாம் என்பதே இக்குளத்தின் சிறப்பு.

பெருமாள் இங்கு திருமணம் முடித்த தலம் என்பதால் சுவாமிக்கு வலப்புறம் பூமாதேவி காணப்படுகிறார். மார்க்கண்டேய மகரிஷி பெருமாளுக்கு தன் மகளை மணம் செய்து கொடுக்கும்பொழுது அவளை விட்டு ஒருபோதும் பிரிய கூடாது என்று நிபந்தனை விதித்ததால் இன்றும் பெருமாள் பவனி வரும்பொழுது தாயாருடன் இணைந்தே பவனி வருவார். 

இங்கு திருவோண தினத்தில் பெருமாள் சன்னதியில் அகண்ட தீபம், வால் தீபம் ஏற்றப்படுகிறது. கோவில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com