
நம் குடும்பங்களில் ஏதாவது பிரச்சினையென்றால் பெரியோர்கள் சொல்வார்கள், "ஒரு மண்டலம் கோவிலுக்குப் போய் விநாயகருக்கு விளக்கேற்றி வேண்டிக் கொண்டு வா. உன் கவலை கரைந்து போய் விடும் பார்!" அதேபோல உடல் நலகோளாறு ஏதாவது இருந்து சித்த வைத்தியரிடம் போனால், "இந்த மருந்தை ஒரு மண்டலம் சாப்பிடுங்க. நல்ல பலன் தெரியும்!" என்பார். ஆலயங்களில் கும்பாபிஷேகம் ஆன பிற்பாடு ஒரு மண்டலம் பூஜை செய்து இறுதியில் மண்டலாபிஷேக நிறைவு என்று செய்து முடிப்பார்கள்.
இந்த மண்டலம் என்பது என்ன? ஏன் அது இவ்வளவு முக்கியமாகக் கூறப்படுகிறது?
நம் முன்னோர்கள் மாதத்தை இரண்டு பட்சமாக பிரித்து வைத்துள்ளனர். ஒரு பட்சத்திற்கு 15 நாட்கள்.பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 திதிகளும் அதனை ஒட்டி வருகின்ற பௌர்ணமி அல்லது அமாவாசை நாளும் சேர்ந்த 15 நாட்களை ஒரு பட்சம் என்று குறிப்பிடு கின்றனர். பௌர்ணமி வரை சுக்ல பட்சம் என்றும் பிறகு வரும் 14 திதிகளும் அமாவாசையும் சேர்ந்தது கிருஷ்ணபட்சம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான மூன்று பட்சங்கள் சேர்ந்ததே ஒரு மண்டல கால அளவு ஆகும். இது 45 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை இருக்கும். ஒரு மண்டலம் என்பது இந்துக்களால் பக்தியிலும், ஆன்மிகத்திலும், ஆயுர்வேதத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய கால அளவாகும்.
எவ்வாறு ஒரு தமிழ் மாதம் என்பது 29, 30, 31 அல்லது 32 நாட்களைக் கொண்டதாக அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு சூரியனின் சுழற்சிக்கேற்ப மாறுபடுகிறதோ, அவ்வாறே ஒரு மண்டலம் என்பதும் அது இடம் பிடிக்கின்ற காலத்திற்கு ஏற்றவாறு அதன் அளவும் மாறுபடுகிறது. இந்த அளவானது 42 முதல் 48 நாட்கள் வரை வரக்கூடும். சராசரியாக கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு மண்டலம் என்பது 45 நாட்கள் ஆகும்.
நாட்காட்டி இல்லாத அந்த நாட்களில் மண்டலம் என்பதை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக, ஒரு அமாவாசை அல்லது பௌர்ணமியில் ஆரம்பித்து இரண்டாவது பௌர்ணமி அல்லது அமாவாசையில் முடிவடையும் காலம் ஒரு மண்டலமாகக் கணக்கிடப்பட்டது.
உதாரணமாக சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம் மருந்து சாப்பிடுதல் என்றால் ஒரு பௌர்ணமியில் ஆரம்பித்து அடுத்துவரும் அமாவாசை போன பின்னர் அதற்கடுத்த அமாவாசை வரை மருந்து சாப்பிட வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்வதற்காக கூறப்படும் அறிவுரை ஆகும்.
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூடினால் 48 வரும். எப்படி சூரியனின் கதிர்வீச்சு, ஒளி இல்லாமல் உலகில் எவ்வுயிரும் வாழ முடியாதோ, அதேபோல இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம் செயல்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பது அறிவியல் சார்ந்த உண்மை. எனவே தான் 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) தொடர்ந்து செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.
ஒரு பாழடைந்த ஆலயம் கூட கும்பாபிஷேகம் செய்து 48 நாட்கள் மண்டல பூஜை செய்தால் மீண்டும் தெய்வ சாந்நித்தியம் பெறும். அதே போல 48 நாட்கள் தொடர்ந்து நம் வீட்டுக்கருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று தொழுது விட்டு வந்தாலே நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணலாம். ஏதாவது ஒரு செயலையோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் (ஒரு மண்டலம்) நம்பிக்கையோடு தொடர்ந்து செய்து தான் பாருங்களேன். நிச்சயம் வாழ்வில் ஒரு மாறுதல் வரும், வெற்றி கிட்டும்!