இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட மலபார் கீரை சிலோன் கீரை, கொடிக்கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன.
இந்தக் கீரையில் வைட்டமின் ஏ, மெக்னீசியம், புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றிகளும் உள்ளன.
இதில் உள்ள ஃபோலேட்டுகள் இருதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது. பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளை பெருமளவில் குறைக்க மலபார் கீரை உதவுகிறது.
இந்தக் கீரையில் இயற்கையாகவே மனச்சோர்வுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மன அழுத்தம், மன இறுக்கத்தை வெகுவாக இது குறைக்கிறது.
டிமென்சியா மற்றும் அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மலபார் கீரையை அடிக்கடி சாப்பிடக் கொடுத்தால் அவர்களுக்கு நல்ல குணம் கிடைக்கும்.
இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை பெருங்குடல், மார்பகம், நுரையீரல், கர்ப்பப்பை மற்றும் மூளை புற்றுநோய்க்கான அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
இரும்புச் சத்துக் குறைபாட்டால் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது. ஆனால், மலபார் கீரையை அடிக்கடி உட்கொள்வதால் இது இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை நோயை குணமாக்குகிறது.
மலபார் கீரையை பயன்படுத்தும் விதம்: மற்ற கீரைகளைப் போல மலபார் கீரையின் இலைகள் மெல்லியதாக இருக்காது. இதை பொடிப்பொடியாக நறுக்கி சூப்புகளில் சேர்க்கலாம். பொரியலாக செய்தும் சாப்பிடலாம். இது எளிதில் வாடாது. சாலடுகளிலும் இதைப் பயன்படுத்தி நலம் பெறலாம்.