ராமன் 'சாப்பாட்டு ராமன்' ஆன கதை தெரியுமா மக்களே!

Saapattu Raman
Saapattu RamanImg Ccredit: Pinterest
Published on

நாம் அனைவரும் அதிகமாக சாப்பிடுபவர்களையோ அல்லது அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களையோ பார்த்து சாப்பாட்டு ராமன் என அடிக்கடி கிண்டல் செய்வது உண்டு. ராமனுக்கும் சாப்பாட்டுக்கும் அப்படி என்னதான் தொடர்பு, ராமன் சாப்பாட்டு ராமன் ஆனதுக்கு பின் உள்ள வரலாற்று பின்னணி என்ன? என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமன் தன்னுடைய பயணத்தை முடித்து நாட்டிற்கு திரும்புவதற்கு தயாராகி கொண்டிருந்தார். அவ்வாறு காட்டு வழியே பயணத்தை தொடங்கும் போது அவருக்கு தனது குருவான பரத்வாஜ் முனிவரின் நினைவு வந்தது. வனவாசத்தை தொடங்குவதற்கு முன்பு பரத்வாஜ் முனிவரிடம் சென்று ஆசி பெற்று வந்தோம், அதேபோல் வனவாசத்தை நிறைவு செய்த பிறகும் அவரிடம் சொல்லிவிட்டு ஆசி வாங்கி செல்வதே நன்று என நினைத்த ராமன் பரத்வாஜ் முனிவரை சந்திக்க சென்றார். காட்டின் மையப் பகுதியில் உள்ள பரத்வாஜ் முனிவரின் குடிசைக்கு சென்ற ராமனை கண்டதும் பரத்வாஜ் முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நீங்கள் அனைவரும் இன்று வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தி புறப்படுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும், அதனால் நானே நாளைக்கு வந்து அயோத்தியில் உங்களை சந்திக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி! என்று பரத்வாஜ் முனிவர் அவர்களிடம் கூறி, அவர்களை அன்போடு வரவேற்றார்.

ராமனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் சேர்த்து அறுசுவை விருந்து ஒன்றை பரத்வாஜ முனிவர் தயார் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு தயார் செய்து கொண்டிருக்கும் போது முனிவர் ராமனிடம் வந்து ராமா! இன்று ஒரு நாள் இங்கு  நன்கு சாப்பிட்டு, இரவு என் வீட்டில் நீங்கள் அனைவரும் இளைப்பாறி  விட்டு காலையில் அயோத்தி செல்லுங்கள்!  என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். முனிவரின் வேண்டுதலை கேட்ட ராமனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு உடனே அயோத்திக்கு செல்ல வேண்டிய  நிர்பந்தம் ஒன்றும் இருந்தது.

அதற்குக் காரணம் ராமனின் தம்பி பரதன். ராமனை வனவாசம் செல்லவிடாமல் எவ்வளவோ தடுக்க முயன்றவன் பரதன். ஆனால் ராமனோ தனது தந்தையின் வாக்கினை நிறைவேற்றுவதற்காக பரதனையும் தாண்டி வனவாசம் சென்றார். எனவே பரதன் அண்ணா! நீங்கள் வரும் வரை உங்களது பாதணிகளை வைத்தே நான் ஆட்சி செய்வேன், இன்றிலிருந்து ஒவ்வொரு நாட்களாக நான் எண்ணிக் கொண்டே இருப்பேன், என்றைக்கு 14 நான்கு ஆண்டுகள் முடிகிறதோ அன்று நீங்கள் அயோத்தி வந்தடைய வேண்டும். அவ்வாறு நீங்கள் வர தாமதமானால் நான் வேள்வி மூட்டி அதில் பாய்ந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கூறினான். எனவே வனவாசம் முடிந்து இன்றோடு 14 ஆண்டுகள் முடிவடைகிறது. ஒருவேளை தான் உரிய நேரத்தில் செல்லாவிட்டால் தனது தம்பி பரதன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடும் என எண்ணிய ராமன் கலக்கமடைந்தார். இவ்வாறு ராமன் தனது தம்பியை நினைத்து கலக்கமடையும் போது வானில் ராம்! ராம்!  என்று ஒரு அசரீரி கேட்டது. உடனே இராமன் வந்திருப்பவர் அனுமன் தான் என்பதை புரிந்து கொண்டு அனுமனை அழைத்து இன்று ஒரு நாள் பரத்வாஜ் முனிவர் வீட்டில் தங்கியிருந்து நாளை அயோத்திக்கு புறப்பட்டு வருவதாக  உடனடியாக சென்று பரதனிடம் சொல்லி வருமாறு அனுமனை அனுப்பி வைத்தார்.

இதையும் படியுங்கள்:
50,000 சிற்பங்களைக் கொண்டு காலம் கடந்து நிற்கும் கற்கோவில்!
Saapattu Raman

அதன் பின் சற்றே நிம்மதி அடைந்த ராமன் பரத்வாஜ் முனிவர் வீட்டில் தங்க முடிவெடுத்தார். அனுமன் அயோத்திக்கு சென்றதை அறிந்த பரத்வாஜ் முனிவர் உணவு தயாரிக்கும் போது அனுமனுக்கு என்று எதையும் தயாரிக்கவில்லை. தயாரித்த உணவில் அனுமனுக்கு என்று தனியாக எடுத்து வைக்கவும் இல்லை.  தலைவாழை இலை போட்டு ராமனுக்கும் ராமனோடு வந்தவர்களுக்கும் பரிமாற ஆரம்பித்தார். அப்போது ராமன் இலையில் பரிமாறும் போது ராமன்  இலையில் தனக்கு பக்கத்தில் உள்ள பகுதியில் மட்டும் சாப்பாட்டினை வைத்து விட்டு கோட்டுக்கு அந்தப்புறம் உள்ள பகுதியில் காய் மற்றும் பழங்களை எல்லாம் வைக்குமாறு முனிவரிடம் கேட்டுக் கொண்டார். பரத்வாஜ்  முனிவரும் ராமன் கூறுவதில் ஏதாவது காரணம் இருக்கும் என நினைத்து ராமன் கூறியவாறே உணவுகளை பரிமாறினார்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் வானத்தில் ராம்! ராம்! என்று அசரீரி கேட்டது. வந்திருப்பது அனுமன் தான் என்பதை  அறிந்து கொண்ட பரத்வாஜ் முனிவர் மிகவும் கலக்கமடைந்தார். எப்படியும் அனுமன் அயோத்தி சென்று திரும்ப காலதாமதம் ஏற்படும் என்பதால் அனுமனுக்கென்று எந்த ஒரு உணவையும் அவர் தயார் செய்யவும் இல்லை, தயார் செய்ததில் அவருக்கென்று தனியாக எடுத்து வைக்கவும் இல்லை. இப்பொழுது திடீரென அனுமன் வந்து விட்டதால் அவருக்கு எந்த உணவை பரிமாறுவது? என எண்ணி மிகவும் கவலையுற்றார்.

இதையும் படியுங்கள்:
‘நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!’
Saapattu Raman

அந்த நேரத்தில் அங்கு வந்த அனுமனை ராமன் அன்புடன் வரவேற்று தனக்கு எதிரில் அமர வைத்து இலையில் பரிமாறப்பட்டிருந்த காய்கறிகளையும் பழங்களையும் உண்ணுமாறு கேட்டுக்கொண்டார். ராமனோடு சேர்ந்து ஒரே இலையில் உண்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட அனுமனும் அதனை உண்ணத் தொடங்கினார். அனுமன் அடிப்படையில் ஒரு குரங்கு வம்சத்தைச் சார்ந்தவன். ஆதலால் காய்கறிகளும் பழங்களுமே அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலே ராமன் அதனை முன்கூட்டியே அறிந்து தன் இலையில் வைக்கப்பட்ட சாப்பாட்டை மட்டும்  உண்டு விட்டு, மீதமுள்ள அத்தனை காய்கறி, பழங்களையும் அனுமனுக்கு என ஒதுக்கி அவரை சாப்பிட வைத்து மகிழ்ந்தார். அனுமனின் மீது கொண்ட அன்பால்  வெறும் சாப்பாட்டை மட்டுமே உண்ட காரணத்தால் தான் ராமனுக்கு சாப்பாட்டு ராமன் என்ற பெயர் வந்தது. ஆனால் இதுவே நாளடைவில் மாறி சாப்பாட்டு ராமன் என்பது அதிக அளவில் உண்பவர்களை குறிப்பதாக உருமாற்றம் அடைந்து போனது.

உள்ளத்தில் கொண்ட அன்பினால் அனுமனின் மனதை சரியாக புரிந்து கொண்டு அவரின் பசியை போக்குவதற்காக வெறும் சாப்பாட்டை மட்டுமே உண்டது தான், ராமனுக்கு சாப்பாட்டு ராமன் என்ற பெயர் வந்ததன் உண்மையான காரணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com