தியானம் செய்தால் நாம் விரும்பிய நல்ல நிலையை அடைய முடியுமா? – சத்குருவின் விளக்கம் என்ன?

Meditation...
Meditation...Image creditp pixabay.com

தொகுப்பு: தா. சரவணா

தியானம் என்றால் என்ன? பூஜை, வழிபாட்டிலிருந்து தியானம் எவ்வாறு வேறுபடுகிறது? சடங்குகள் செய்வதால் பலன் கிடைப்பதைப்போல், தியானம் செய்தால் விரும்பியவாறு நல்ல நிலையை அடைய முடியுமா? போன்ற கேள்விகள் நம் மனதில் எழுவது இயல்பு.

சத்குரு தரும் விளக்கங்கள் இதுபோன்ற கேள்விகளுக்கு நல்ல பதில்களாகவும் நமக்கு வழிகாட்டும் வகையிலும் அமைகின்றன.

சத்குரு என்ன சொல்கிறார்?

இப்பதிவு அதைப் பற்றியதே!

“கேள்வியிலேயே ஒரு தூண்டில் உள்ளது. ‘நான் விரும்பும் நல்ல நிலையை அடைய முடியுமா?’ இதுவே உங்களுக்கு இருக்கும் பிரச்னை. நல்ல நிலை மட்டும் போதாது, அந்த நல்ல நிலை நீங்கள் விரும்பியவாறும் இருக்கவேண்டும். வாழ்க்கை நீங்கள் விரும்பியவாறு நடக்கவில்லை என்பதுதான் தற்போது உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒரே பிரச்னை. அதே நேரத்தில் நீங்கள் கடவுளை நம்புவதாகவும் சொல்லிக்கொள்கிறீர்கள்.

பெரும்பான்மையான நேரங்களில் அச்சத்திலும், பேராசையிலுமே உங்கள் வழிபாடு அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு பக்தியை எப்படி தெய்வீகத்துடன் தொடர்புப்படுத்துவது?

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்றால், கடவுளின் விருப்பப்படியே உங்கள் வாழ்க்கை நடக்கிறது என்று அர்த்தம், இல்லையா? அப்போது, நீங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கவேண்டும். ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதில்லையே? உங்கள் நம்பிக்கை மேலோட்டமாக இருப்பதால் அது வேலை செய்வதில்லை.”

தியானம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

“உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பது தியானம். உடல் மற்றும் மனத்தின் எல்லைக்குள் நீங்கள் இருக்கும்போது, உடலும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. அப்போது துயரம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. இந்த நிலையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அது எதேச்சையாக நடக்கிறது என்று சொல்லலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும், துயரமாக இருப்பதும், அமைதியாக இருப்பதும், அமைதியற்றிருப்பதும், உங்கள் வசம் இல்லை என்று இதற்கு அர்த்தம்.

வெளிச்சூழல் மட்டுமே இவை யாவற்றையும் உங்களுக்காக முடிவு செய்கிறது.

எதைத் தெய்வீகம் என்கிறீர்களோ; எதை அல்லா, ஷிவா, கடவுள் என்று கூறுகிறீர்களோ, எது இந்தப் படைப்புக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறதோ அதைத்தான் கடவுள் என்கிறீர்கள்.

எனவே, தியானம் என்பது, உடல், மனம் இல்லாத நிலை. படைப்பின் மூலத்துடன் தொடர்பில் இருக்கும் நிலை. அச்சத்திலும் பேராசையிலுமே பெரும்பான்மையான நேரங்களில் உங்கள் வழிபாடு அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு பக்தியை எப்படி தெய்வீகத்துடன் தொடர்புப்படுத்துவது? படைப்புக்கும் இதுபோன்ற நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உங்களிடம் இல்லாததை அடைவதற்காக, நீங்கள் தேடுவதையும் விரும்புவதையும் அடைவதற்காக, அவற்றைக் கடவுள் உங்களுக்குத் தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள். இல்லையா?

உங்கள் வாழ்க்கையை இலவசமாகப் பெற்றுவிடலாம் என்று நம்புகிறீர்கள். வாழ்க்கையைச் சுமாரான விலைக்குப் பேரம் பேசி பெற்றுவிடலாம் என்று நம்புகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, பிரார்த்தனை வேலை செய்யவில்லை. அச்சத்தோடும் அமைதியற்ற மனதோடும் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
லேடீஸ் விரும்பும் லேட்டஸ்ட் ஃபாஷன் – லெக்கிங்ஸ் இந்த 10 வகைகள் மிகப் பிரபலம்!
Meditation...

வழிபாட்டுக்கும் தியானத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு

வழிபாட்டின்போது நீங்கள் மட்டுமே பேச முயற்சி செய்கிறீர்கள், கடவுளைப் பேசவிடுவதில்லை. உங்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்று அரை மணி நேரத்திற்கு அவரை ஒரு வார்த்தையும் பேச விடாதீர்கள். நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கள். அடுத்த முறை அவர் வீட்டுக் கதவைத் தட்டினால், அவர் வீட்டில் இருந்தாலும் இல்லை என்ற பதில்தானே கிடைக்கும்? நீங்கள் பத்து விஷயத்தைப் பேசும்போது, நண்பருக்கு ஒன்றையாவது பேச அனுமதித்தால்தானே அங்கே உறவு மலரும்? ஆனால், நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நண்பர் உங்களுடன் இருக்க விரும்புவாரா?

அதுதான் உங்களுக்கும் கடவுளுக்குமிடையே நடந்திருக்கிறது. கடவுள் அங்கே முழுமையாக இருந்தாலும் உங்களுடன் இருக்கும்போது அவர் இல்லாததுபோல் காணாமல் போய்விடுகிறார். நீங்களே எல்லாவற்றையும் பேசிவிடுவதால் அவர் உங்களைக் கண்டு பயப்படுகிறார்.

தியானம், நீங்கள் பேசுவதற்கான நேரம் அல்ல.
நீங்கள் செய்யும் சப்தங்களை நிறுத்திவிட்டு இன்னொன்றுக்குச் செவி மடுப்பதே தியானம். நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கும் நீங்கள், ஒரு நாளின் சில மணி நேரமாவது கடவுளைப் பேச அனுமதியுங்கள். கடவுள் என்னதான் சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com