
கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா கர்வம் கொண்டவர். கிருஷ்ணரின் மனைவிகளிலே அவள்தான் மிகவும் அழகானவள் மற்றும் செல்வாக்கு மிகுந்தவள் என்ற எண்ணம் சத்யபாமாவிற்கு உண்டு. ஒருமுறை சத்யபாமா கிருஷ்ணரின் பிறந்தநாள் அன்று அவரை துலாபாரத்தில் அமரவைத்து தன் அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்று எண்ணினாள். இதைப் புரிந்துக் கொண்ட கிருஷ்ணர் சத்யபாமாவின் அகந்தையைப் போக்க எண்ணி திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கிருஷ்ணரின் பிறந்தநாளுக்கு அவரின் எடைக்கு எடை தங்கத்தை அந்த நகர மக்களுக்கு வழங்க எண்ணினாள் சத்யபாமா. இதைக்கேட்ட கிருஷ்ணரும் சென்று துலாபாரத்தில் அமர்ந்துக் கொண்டார். அவருடைய எடை என்னவென்பதை முன்பே ஓரளவிற்கு கணித்திருந்த சத்யபாமா அந்த அளவு தங்கத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தார்.
ஆனால், சத்யபாமா தராசில் தங்கத்தை வைத்தபோது அது சிறிதளவுக்கூட நகரவில்லை. கிருஷ்ணர் அவரின் எடையை அதிகரித்துக்கொண்டே சென்றார். சத்யபாமா தங்கம், வெள்ளி என்று தன்னிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் துலாபாரத்தில் வைத்தாள். ஆனால், அது சற்றும் அசையவில்லை. இதற்குள் நகர மக்கள் அனைவரும் இந்த நிகழ்வைக்காண வந்துவிட்டனர்.
இப்போது சத்யபாமா தனது அனைத்து ஆபரணங்களையும் எடுத்து வரச்சொன்னாள். தனது ஆபரணங்கள் கிருஷ்ணரின் எடையை ஈடுசெய்யும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. தன்னிடம் இருந்த அனைத்து ஆபரணங்களையும் ஒவ்வொன்றாக துலாபாரத்தில் வைத்துவிட்டால், ஆனால் துலாபாரத்தின் முள் கொஞ்சம்கூட நகரவில்லை.
இப்போது சத்யபாமா விசும்பி அழத்தொடங்கினாள். எப்போதும் கர்வம் கொண்ட அவளிடம் போதுமான தங்கம் இல்லை என்றதும் என்ன செய்வதென்று புரியவில்லை. சத்யபாமா ருக்மணியை பார்க்க, ருக்மணி வெளியே சென்று துளசி செடியில் மூன்று இலைகளை மட்டும் எடுத்து வந்து கிருஷ்ணரை மனதார வேண்டிக்கொண்டு துலபாரத்தில் வைத்தாள். இப்போது கிருஷ்ணர் இருந்த தட்டு சரிசமமானது.
இதைப் பார்த்த சத்யபாமாவிற்கு புரிந்தது, கிருஷ்ணர் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது பொன்னோ பொருளோ அல்ல. தூய்மையான பக்தியையும், உண்மையான அன்பையும் தான். அதுவே அவரை அடிமையாக்கும் என்பதை உணர்ந்துக்கொண்டாள்.