காலையில் எழுந்து வீட்டின் வாசலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து பிறகு கோலம் போடுவது பாரம்பரியமாக இந்தியப் பெண்கள், முக்கியமாக தமிழ்நாட்டு பெண்கள் கடைப்பிடித்து வரும் வழக்கமாகும். கோலம் என்பது பாரம்பரியமாக வாசலை அலங்கரிக்கும் கலையாகும். இதை அரிசி மாவு பயன்படுத்தி போடுவார்கள். பண்டிகை நாட்களில் கலர் பொடிகளை பயன்படுத்தி வண்ணமயமான கோலங்கள் போட்டு கொண்டாடுவார்கள். இதை ‘ரங்கோலி’ என்றும் சொல்வார்கள்.
பெண்கள் காலையில் எழுந்து கோலம் போடுவது வீட்டினுடைய வாசலை அலங்கரிப்பதற்காக மட்டுமில்லாமல், நம் வீட்டில் செல்வ செழிப்பு பெருகுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது. நம் முன்னோர்கள் அரிசியை கொரகொரப்பான மாவாக அரைத்து அதைப் பயன்படுத்தி கோலம் போட்டனர். இதற்கான முக்கியக் காரணம் எறும்புகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.
மேலும், கோலம் வீட்டின் வாசலில் போடுவதன் மூலம் தீய சக்திகள் வீட்டினுள் நுழையாது என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் சாலை முழுவதும் அழகழகாக பெரிய கோலங்கள் போட்டு அலங்கரிப்பார்கள்.
கோலங்களில் சிக்கு கோலம், புள்ளி கோலம், கம்பி கோலம், நெல்லி கோலம், கோடு கோலம் என்று பல வகைகள் இருக்கின்றன. சிக்கு கோலத்தில் நிறைய வளைவு, நெளிவுகள் மற்றும் சிக்கலான அமைப்புகள் இருக்கும். இந்த கோலம் எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு சென்று முடிகிறது என்று கணிப்பது கடினம். இதுவே, புள்ளி கோலத்தில் புள்ளிகள் வைக்கப்பட்டு அதைப் பொருத்து நாம் கோலத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். கோலங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தே போடப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
கோலங்களுக்கும், கணிதத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. Patterns, curves, geometry, dots, lines என்று பலவிதமான வடிவங்களில் கோலம் போடப்படுகிறது. கோலம் போடும் பெண்களிடம் பிரச்னைகளை சுலபமாக தீர்க்கக்கூடிய திறமை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கோலம் போடுவது அறிவை மட்டும் வளர்க்கவில்லை, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. காலையில் கோலம் போடுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். குனிந்து கோலம் போடுவது முதுகு தண்டிற்கு, இடுப்பிற்கு நல்லது. கோலத்தை முழுமையாக போட்டு முடிப்பதற்கு நல்ல கவனமும், மனதை ஒருமுகப்படுத்துவதும் அவசியமாகும்.
கோலம் போடுவது ஸ்ட்ரெஸ்ஸை குறைந்து மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. காலையில் மாட்டு சாணத்தை வாசல் முழுக்க தெளிப்பதால், இது கிருமிநாசினியாக செயல்பட்டு கிருமிகளையும், பூச்சிகளையும் அழிக்கிறது.
அதற்கு பிறகு கோலம் போடத் தொடங்கும் பெண்களுக்கு தூயக் கற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்பறம் என்ன? இத்தனை சிறப்புகள் கொண்ட கோலத்தை நீங்களும் இனி உங்கள் வீட்டு வாசலில் ஜாலியாகப் போடுங்கள்.