சிவபெருமானே சிவலிங்கத்தை பூஜித்த அதிசயம்! மதுரையில் இப்படி ஒரு இடமா?

நீங்கள் செய்த பாவங்கள் இந்த பிறவியிலேயே தீர வேண்டுமா? இங்கே செல்லுங்கள்!
Immayilum nanmai tharuvar temple
Immayilum nanmai tharuvar templeImg credit: AI Image
Published on
Deepam strip
Deepam strip

பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி கரை சேரவும், முற்பிறவி வினைகளை அறுக்கவும் இறைவனின் திருவடிகளில் சரணடைதல் ஒன்றே சிறந்த வழி.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் அருகிலுள்ள 'இம்மையிலும் நன்மை தருவார்' கோயில் இந்த பிறவியிலேயே நம் வினைகளைக் களைந்து இறையருளை அள்ளித்தரும் திருத்தலமாக விளங்குகிறது.

மதுரையை சிறப்பாக ஆட்சிபுரிந்த மலையத்துவஜ பாண்டிய மன்னனின் குமாரத்தியாக அவதரித்தவர் அன்னை பார்வதி தேவி. இவருக்கு மீனாட்சி என்று பெயரிட்டு, சீரோடும் சிறப்போடும் வளர்த்தார் மன்னர். தக்க சமயத்தில் மீனாட்சியை மணம்புரிய சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்தார்.

சுந்தரேஸ்வரர் மீனாட்சி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாநகரை அரசாளும் பொறுப்பை மீனாட்சியம்மையும் சுந்தரேஸ்வரரும் ஏற்றனர். ஆட்சிப் பொறுப்பில் அமரும் முன்பு சிவபூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. எனவே சுந்தரேஸ்வரர் தன் ஆத்மாவை சிவலிங்கமாக்கி பூஜை செய்து, பின் மன்னராக முடிசூட்டிக் கொண்டதாக இத்தலத்தின் வரலாறு குறிப்பிடுகிறது.

இத்தலத்தில் மீனாட்சியும் சுந்தரேசுவரரும் சிற்ப வடிவில் மேற்கு நோக்கி அமர்ந்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதைக் காணலாம். சிவபெருமான் சுந்தரேஸ்வரராக இருந்தபோது, அவரே பூஜித்து அருள் பெற்றதால், இத்திருத்தல இறைவன் 'இம்மையிலும் நன்மை தருவார்' என்று பெயர்பெற்றார்.

மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்கின்றனர். அவர்களுக்கு முன் சிவலிங்கம் உள்ளது. இறைவனும் இறைவியும் பூஜை செய்ய ஏதுவாக சிவலிங்கம் அவர்களை நோக்கி உள்ளது. எனவே லிங்கத்தின் பின்பகுதியையே பக்தர்கள் தரிசிக்கமுடியும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அன்னை இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
குதிரை மேல் வரும் காவல் தெய்வம்! ஊர் மக்களை காக்கும் தேரடி கருப்பர் கோவில்கள்!
Immayilum nanmai tharuvar temple

இம்மையிலும் நன்மை தருவார், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகிய மூவருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கும். இந்தப் பூஜையை சிவபெருமானே செய்வதாக ஐதீகம்.

இத்தல இறைவி மத்தியபுரி நாயகி அம்பிகை நின்ற கோலத்தில் அருளும் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம் உள்ளது.

இத்தலத்தில், நித்திய பூஜையின்போது, அர்ச்சகர் அமர்ந்த கோலத்தில் அருளும் அன்னைக்கும் ஈசனுக்கும், முன்னாலிருக்கும் சிவலிங்கத்திற்கும் நடுவே நின்று லிங்கத்தை பூஜை செய்கிறார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. அமர்ந்த கோலத்தில் அருளும் இறைவனுக்கும் இறைவிக்கும் வருடத்திற்கு 54 முறை மட்டும் (அமாவாசை, பௌர்ணமி, மார்கழியில் 30 நாட்கள்) தைலாபிஷேகம் நடக்கிறது.

தேவாதி தேவர்களும், பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானைப் பூஜித்த நிறைய வரலாற்றைக் கேட்டிருப்போம். ஆனால் சிவபெருமானே சிவலிங்கம் அமைத்து வழிபட்டதால், இத்திருத்தலம் பூலோக கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

மிகவும் தொன்மையான இத்திருத்தலம் பற்றிய குறிப்புகள் கல்லாடம், திருவிளையாடல் புராணம், பரிபாடல் போன்ற இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் ஒன்றான 'வளையல் விற்ற' திருவிளையாடல் இங்குதான் நடந்ததாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com