
1. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள மாருதி கஜானனன் கோவிலில், அனுமனுக்கும், விநாயகருக்கும் முதல் நாள் அணிவிக்கும் பூ மாலையை உதிர்த்து, பக்தர்களுக்கு மறுநாள் பிரசாதமாக வழங்குகின்றனர்.
2. திருச்சி பூலோகநாதர் சுவாமி கோவிலில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, நிலக்கடலை ஆகியவைதான் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகின்றன.
3. கோவை கூனியம்மன் கோவிலில், திருமணம் நல்லபடி நடக்க வேண்டி வேண்டுதல் செய்து, அதை நிறைவேறியதும், அம்மனையே சாட்சியாக வைத்து, கோவிலிலேயே நிச்சயதார்த்தம் செய்கின்றனர். ஒரு கூடையில் உப்பை நிரப்பி, அதன் மேல் மங்கலப் பொருட்களை வைத்து நிச்சயம் செய்கின்றனர்.
4. நாமக்கல்லில் உள்ள குடைவரை கோவிலில் ரங்கநாதர் கார்கோடகன் எனும் நாகத்தின் மேல் தான் சயனித்துள்ளார். கார்கோடகன் மலை மேல் ஊர்ந்து வந்த தடம், கரிய நிறத்தில் காணப்படுகிறது.
5. திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் உள்ளன. இந்தியாவின் பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 444 புனித கற்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுகின்றன.
6. திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் ஒரே பந்தலின் கீழ் கூடி வழிபட்டதால், இவ்விடம் முப்பந்தல் என அழைக்கப்படுகிறது. இவ்வழியே பயணிப்போர் இசக்கியம்மன் கோவில் முன் நின்று அம்மனை வழிபட்டு விட்டு செல்கின்றனர். அம்மன் வழித்துணையாக வந்து காப்பாள் என்பது நம்பிக்கை.
7. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனியூர் கிராமத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் ஆஞ்சநேயரின் அன்னை அஞ்சனாதேவிக்கு தனி சந்நிதி உள்ளது. தேவியின் இடப்பக்கத்தில் அவரது தோழியும், வலப்பக்கத்தில் குழந்தை வடிவில் அனுமனும் காட்சி தருகின்றனர்.
8. நேபாளத்தில் உள்ள சூரிய விநாயகர் கோவிலில், தினமும் சூரியனின் முதல் கதிர் விநாயகர் விக்ரகத்தின் மேல் படர்கிறது.
9. நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவில் அருகே, ராமபிரானின் மகன்கள் லவன், குசன் இருவருக்கும் கோவில் உள்ளது.
10. வேலூர் மாவட்டம் வன்னி மேடு அகத்தீஸ்வரர் கோவிலில் வன்னி மரத்தின் அடியில், விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அருகருகே காட்சி தருகின்றனர். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாக சூட்டி, எள் தீபம் ஏற்றி வணங்கினால், வாழ்வில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
11. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டையில் உள்ள முனிஸ்வரர் கோவிலில், முனீஸ்வரர் பத்தடிக்கும் மேற்பட்ட உயரத்தில் இருப்பதால், ஏணி மீது ஏறிதான் இவருக்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்படுகின்றன. திருவிழாவின் போது முனீஸ்வரருக்கு திருப்பதி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.