ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

Ayyappan
Ayyappan
Published on

ஐயப்பன் தரிசனம், கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா? இல்லை, மாதந்தோறும் உண்டா?

கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டால் போதும், கேரளத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலும் ‘சாமியே……ய் சரணம் ஐயப்பா…‘ என்ற குரல் கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கிவிடும். 

ஆனால் கார்த்திகை மாதம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மலையாள மாதமும் சபரிமலை ஐயப்பனின் தரிசனத்துக்காக பக்தர்கள் செல்கிறார்கள் என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா?

ஆமாம், சித்திரை என்று ஆரம்பித்து பங்குனி என்று முடியும் தமிழ் மாதங்களைப் போலவே, கிட்டத்தட்ட அதே தேதிகளில் மலையாள மாதங்களும் பிறக்கின்றன. மலையாள காலண்டர்படி மாதங்களின் வரிசை: சிங்கம் (ஆகஸ்ட்-செப்டம்பர்), கன்னி (செப்டம்பர்-அக்டோபர்), துலாம் (அக்டோபர்-நவம்பர்), விருச்சிகம் (நவம்பர்-டிசம்பர்), தனுர் (டிசம்பர்-ஜனவரி), மகரம் (ஜனவரி-பிப்ரவரி), கும்பம் (பிப்ரவரி-மார்ச்), மீனம் (மார்ச்-ஏப்ரல்), மேடம் (ஏப்ரல்-மே), எடவம் (மே-ஜூன்), மிதுனம் (ஜூன் – ஜூலை). கார்க்கடகம் (ஜூலை-ஆகஸ்ட்) ஆகியவை. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஒவ்வொரு மலையாள மாதத்திலும் ஒன்று முதல் ஐந்து தேதிகள் மட்டும் நடை திறந்து பூஜைகளை மேற்கொள்கிறார்கள். இந்த பூஜைகளை பக்தர்கள் கண்டு களிக்கலாம்.

அதாவது முந்தின மலையாள மாதத்தின் கடைசி நாளன்று இரவு நடை திறப்பார்கள். அப்போது பூஜை எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. ஆனால் மறுநாள், அதாவது அடுத்த மாத முதல் தேதியிலிருந்து 5 தேதிவரை நித்திய பூஜைகள் ஐயப்பனுக்கு மேற்கொள்ளப்படுகின்றன. ஐந்தாம் நாள் இரவில் ஐயப்பனுக்கு செய்விக்கப்பட்டிருக்கும் எல்லா அலங்காரங்களும் களையப்படும். ஒரு சிறு மலர் கூட தங்கிவிடாதபடி அவருடைய சந்நிதானம் முற்றிலுமாக சுத்தம் செய்யப்படும். பிறகு ஐயப்பன் விக்ரகம் முழுவதையும் விபூதியால் அபிஷேகமாய் பூசிவிடுவார்கள். 

அடுத்த மலையாள மாதம் முதல் தேதி, பக்தர்கள் காணும் முதல் தரிசனம் ஐயப்பனின் இந்த விபூதி அபிஷேகக் கோலம்தான். பிறகு அன்று சம்பிரதாயமான எல்லா பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். இது அன்று முதல் ஐந்து நாட்களுக்குத் தொடரும். நூற்றுக் கணக்கான உள்ளூர் பக்தர்கள் ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் ஐந்து நாட்கள் ஐயப்பனின் திவ்ய தரிசனம் கண்டு மகிழத் தவறுவதில்லை.

பொதுவாகவே மலையாள மாதமும், தமிழ் மாதமும் ஒன்றுபோலதான் வரும். உதாரணமாக, சித்திரை தமிழ் மாதமும், அதற்கு சமமான மேடம் என்ற மலையாள மாதமும் ஏப்ரல் 14ம் தேதியில்தான் ஆரம்பிக்கும். சில வருடங்களில்  ஏப்ரல் 13ம் தேதியிலும் அமையும். 

இதையும் படியுங்கள்:
நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!
Ayyappan

ஆக தமிழ் கார்த்திகை மாதத்தில்தான் – இதை விஷ்ணுபதி புண்ய காலம் என்றும் சிறப்பிக்கிறார்கள் - அதாவது மலையாள விருச்சிக மாதம், (நவம்பர்-டிசம்பர்) சபரிமலை ஐயப்பன் தரிசனம் அருள்கிறார் என்று நினைக்க வேண்டாம்; ஒவ்வொரு மலையாள மாத முதல் ஐந்து நாட்களுக்கும் அந்த தரிசனம் உண்டு.

கார்த்திகை மாதம், விரதம் அனுசரிக்கவும், இருமுடி தரிப்பதற்கும் உகந்த மாதமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால், அந்த மாதத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான ஐயப்பமார்கள் சபரி மலை செல்கிறார்கள்; பதினெட்டுப் படி ஏறி திவ்ய தரிசனம் காண்கிறார்கள். நவம்பர் முதல் ஜனவரிவரை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, மாத முழுவதுமே ஐயப்பன் கோவில் திறந்திருக்கும். இந்த மூன்று மாதங்களில் ஒன்று முதல் ஐந்து தேதிவரை மட்டும் என்ற சம்பிரதாயம் மேற்கொள்ளப் படுவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com