பொதுவாக, கோயில்களில் ஊஞ்சல் ஸேவை நடப்பதை நாம் பார்த்திருப்போம்! அதில் பெருமாள், திருமகளோடு சேர்ந்து ஊஞ்சல் ஸேவை கண்டருளும்போது அவரது எண்ணத்தில் என்ன தோன்றும் என்பதை ஸ்ரீநிதி ஸ்வாமிகள் தம்முடைய ‘வஸுமதிஷதகத்தில்’ மிக அழகாகக் குறிப்பிட்டிருப்பார். தன்னுடைய ஊஞ்சல் ஸேவையைக் காண வரும் பக்தர்களை சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டு ஊஞ்சலில் ஆடும் திருமாலுக்கு, அந்தப் பக்தர்களைப் பார்க்கும்போது அவர்கள் செய்த பாவங்கள் அவரது மனதில் நிழலாடுமாம். உடனே அந்தப் பக்தனுக்கு அதற்கேற்ற தண்டனையைத் தர வேண்டும் என அவர் நினைப்பாராம். அப்படி திருமால் நினைக்கும்போதெல்லாம், திருமாலில் திருமார்பிலேயே உறைந்திருக்கும் திருமகள், “அவர்களுக்குத் தண்டனை எதுவும் தராமல் உங்கள் கருணையை மட்டுமே காட்டுங்கள்” என்று சொல்லுவாளாம். திருமாலிடம் இருக்கும் அந்த ஆளுமை என்ற குணமோ ‘இல்லை இல்லை... இவர்களுக்குத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும்’ என்று சொல்லுமாம். ஆளுமையைக் காட்டுவதா அல்லது அருளைச் செய்வதா என திருமாலின் திருவுள்ளமும் அங்கே ஊஞ்சல் ஆடுகிறதாம். அவரது பக்கத்தில் இருக்கும் திருமகளில் ஸ்வரூபமான பூமாதேவி, பொறுமையின் இருப்பிடமல்லவா? அதனால் அவள் திருமாலிடம், “சற்றே பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி, “இதோ உங்கள் திருவடியில் சரணாகதி செய்தவர்களுக்கு அருளை மட்டுமே கொடுங்கள்” என்று கூறுவாளாம்.
திருமாலை மத்ஸ்ய, கூர்ம, வராஹ என அவதாரம் எடுக்க வைத்து நமக்குக் கொடுக்க வேண்டிய தண்டனைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றி இருக்கிறாள் திருமகள் என்றும் சொல்வதுண்டு. தம் முன்னே நின்று கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கிறார்களாம் திருமகளும், திருமாலும். திருமால் தம் முன் நின்ற மனிதனைப் பார்த்து விட்டு திருமகளிடம் சொல்கிறாராம், “இதோ இந்த மனிதன் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் கோள் சொல்வதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவன். அதனால் இவனுக்கு ஒரு தண்டனை தர வேண்டும். இவனை மீனாகப் பிறக்க வைக்கப் போகிறேன்” எனச் சொல்ல, “எதற்காக மீனாய் பிறக்க வேண்டும்?” எனக் கேட்ட திருமகளிடம், ”வேதத்தில் சொல்லப்படும் ஒரு கதையை மறந்துவிட்டாயா திருமகளே? பூலோகத்தில் தபஸ்விகள் அக்னி வளர்த்து அதில் சேர்க்கும் பொருட்களை எல்லாம் ஜாக்கிரதையாக அந்தந்த தேவதைகளிடம் கொண்டு போய் சேர்ப்பதைத்தான் அக்னி பகவானின் மூன்று சகோதரர்களும் செய்து வந்தார்கள். இப்படிப் பொருட்களைச் சேர்ப்பிக்கும் வேலையை செய்து வந்த தனது மூன்று சகோதர்களும் இறந்துவிட, அந்த வேலையைத்தான் அடுத்து செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடுமோ என பயந்த அக்னி, ஒரு கடலுக்கடியில் சென்று மறைந்துகொண்டாராம். அக்னியைக் காணாமல் தேவர்கள் தவித்துக்கொண்டு கடலில் தேட, அப்போது அக்னி அங்கேதான் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதை ஒரு மீன் தேவர்களிடம் கோள் சொல்லி காட்டிவிட்டது. “என்னை தேவர்கள் வலை வீசிப் பிடிப்பதற்கு நீ காரணமாகி விட்டாய் அல்லவா மீனே? இனி உன் இனத்தை எல்லோரும் வலை வீசியே பிடிப்பார்கள்” என்று தனது மன வலி தாங்காமல் அக்னி தேவன் மீனைப் பார்த்து சாபம் கொடுத்தான். இந்தக் கதையை சொன்ன பரம்பொருள், “இப்போது புரிகிறதா என் தேவியே, நான் ஏன் இந்தக் கோள் சொல்லியே வந்த மனிதனை மீனாகப் பிறக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்று” எனக் கேட்டாராம். அதற்கு திருமகள்,” அவர்களை எல்லாம் மன்னித்து விடுங்கள். அவர்களுக்குப் பதிலாக நீங்களே ஒரு பெரிய மீனாகப் பிறந்து விடுங்கள்” என திருமகள் சொல்ல, திருமகளின் வார்த்தைக்கு எதிர்வார்த்தை ஒருபோதும் பேசாத திருமால், பெரிய மீனாகத் தோற்றம் கொண்டு எடுத்ததுதான் மத்ஸ்ய அவதாரம்.
அடுத்து வந்த மனிதனோ, போலியாக வாழ்க்கையை நடத்தி வந்தவன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவன். எனவே, அவன் ஆமையாக பிறக்க வேண்டும் என்று திருமால் சொல்ல, உடனே தாயார், பெருமாளை தடுத்து, “தயவுகூர்ந்து அந்த மனிதனை மன்னித்து விடுங்கள். அந்த மனிதனுக்குப் பதிலாக நீங்களே ஆமையாக அவதாரம் செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொள்ள, திருமகளின் வார்த்தையைக் கேட்டு திருமால் எடுத்த இரண்டாவது அவதாரம்தான் கூர்மாவதாரம்.
அடுத்து வரக்கூடிய மனிதர்களோ தாம் உழைக்காமல், மற்றவர்களின் உழைப்பில் மட்டுமே உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டவர்கள் மற்றும் மற்றவர்களின் சம்பாத்தியத்தில் வாழ்ந்தவர்கள். “இப்படிச் செய்த மனிதர்களுக்குத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும். உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும், தான் உண்மையாக உழைத்து, அந்த உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தில்தான் ஒருவர் முன்னேற வேண்டுமே தவிர, மற்றவர்களின் உழைப்பில் தான் வளமாக வாழ்வது என்பது எவ்வளவு பெரிய குற்றம்? அதனால் அப்படிப்பட்ட குற்றங்கள் செய்த மனிதர்களைப் பன்றிகளாக பிறக்க வைக்கப் போகிறேன். மற்றவர்கள் போடும் குப்பைகளைச் சாப்பிடும்போது, தான் எவ்வளவு பெரிய தவறு புரிந்துவிட்டோம் என்று இவர்களுக்குப் புரிந்து இவர்கள் மனம் திருந்துவார்கள்” என திருமால் கூற, திருமகள் மீண்டும் “அந்த மனிதர்களைக் கண்டிக்க மட்டுமே செய்யுங்கள்; தண்டிக்காதீர்கள் எனச் சொன்னதால் திருமால் எடுத்ததன்றோ வராஹ அவதாரம்?
இந்த அவதாரக் கதைகள் சொல்லும் பாடம் என்ன? இதுவரை எத்தனையோ தவறுகளை நாம் செய்திருந்தாலும் “திருமகளே இனியாவது நான் திருந்தி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு நல்ல புத்தியைக் கொடு, உன் திருவருளை என் மீது செலுத்து” என நாம் மனம் உருகி வேண்டி நிற்கும்போது திருமகளின் திருவருள் என்பது நம் மீது நிச்சயம் பொழிந்தே தீரும் . திருமகளின் திருவருள் கிடைத்துவிட்டால் போதுமே? எல்லா நலன்களும் தானாகவே வந்து சேர்ந்துவிடும் அல்லவா?
(இந்த திருமகள் திருவருள் தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்)