தீப ஆராதனையின்போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

தீப ஆராதனை...
தீப ஆராதனை...

ற்பூரம் ஒரு கிருமி நாசினி. அது எரியும்போது பிராண வாயுவைப் பரப்பி கற்பகிரகத்தில் உள்ள கரியமிலவாயு கலந்த மூச்சு காற்று மற்றும் பாண, அபாண வாயுக்களின் அசுத்தம், வியர்வை நாற்றம் முதலியவற்றை வெளியேற்றுகிறது.

கற்பூர ஆரத்தியைக் கண்ணில் ஒற்றி கொள்வதினால் நேத்திர ஆரோக்கியம் ஏற்படும் என்று ஆஞ்சநேயர் புராணம் கூறுகிறது. 16 விதமான சோடச உபசாரங்களில் கற்பூர ஆரத்தி கடைசியானது. கற்பூர ஆரத்தி செய்வதால்தான் பூஜை முறை பூர்த்தி ஆனதாக கருதப்படுகிறது.

கற்பூரம் எரியும்போது கரியோ, சாம்பலோ இல்லாமல் காற்றில் மறைந்துவிடுகிறது. அதுபோல ஆன்மா இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகிறது.

கற்பூர தீபம் எரியத்தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகள், படங்கள் முதலிய இறை தொடர்பான அனைத்து பொருட்களிலும், தெய்வ அருள் உச்ச நிலையில் விளங்குகிறது.

தீப ஆராதனையின்போது காற்றினாலோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினாலோ தீபம் அணைந்துவிட்டால் அபசகுனம் என்றெல்லாம் எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து தீப ஆராதனை காட்ட வேண்டும்.

கற்பூர தீபம் இடையில் நிற்காமல் முழுமையாக எரிந்து தானே அடங்க வேண்டும். பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. ஆராதனை முடியும் வரை எரியக்கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம்.

கற்பூர வெளிச்சத்தில் இறைவனின் அழகு தெள்ளத்தெளிவாய் தெரியும். அதேபோல் கற்பூரம் எரிந்து முடிந்த உடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக்கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடுவதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.

கருவறையில் இருக்கும் இறைவனின் சிலை கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலாரூபம் அடர் கருமை நிறத்துக்கு மாறிவிடும். இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கை, கால் நகப்பராமரிப்பு டிப்ஸ்!
தீப ஆராதனை...

சுவாமி மீது தீபம் காட்டும்போது நமது முழு கவனமும் சுவாமி மேலேயே இருக்கும். அந்த நேரத்தில் கடவுளை தரிசனம் செய்யும்போது எல்லோருடைய எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது இறையருள் பெறுவது மட்டுமே நமது குறிகோளாக இருக்கும். மேலும், இறைவனுடைய சக்தியை இந்த ஒளி வடிவத்திலே நாம் பெற்று கொள்வதாகவே ஐதீகம் இருக்கிறது.

ஆத்மா, பரமாத்மாவோடு கலப்பதை குறிக்கும் கற்பூரம் வெண்மையானது.அது சுத்த சத்துவ குணமுள்ள ஆத்மாவை குறிக்கும்.

கற்பூரம் தன்னை அழிந்துகொண்டு இறைவனுடைய திருமேனியைப் பக்தர்கள் தரிசனம் செய்ய வழிகோலுகிறது. கற்பூரத்தைப் போலவே தன்னுடைய சுயநலங்களை அழித்துக்கொண்டால் இறைவனை உணர முடியும் என்பதே கற்பூரம் உணர்த்தும் உண்மை. இதுவே கற்பூரத்தின் தத்துவமும் கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com