‘ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சனா’

‘ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சனா’

ன்று (28.6.2023) ஸுதர்சனர் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வாரின் ஜயந்தி. திருமாலின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, அவரது வலது திருக்கரத்தை அலங்கரிக்கும் ஸுதர்சன சக்கரம். பெருமாளின் திருக்கரங்களை விட்டு ஒருபோதும் பிரியாதவர் சக்கரத்தாழ்வார். தனது பக்தர்களுக்கு ஒரு துன்பம் நேரும்போது, அந்தத் துன்பத்திலிருந்து அவர்களை வேக வேகமாக விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே எப்போதும் சங்கு, சக்ர, கதாதாரியாகவே இருக்கிறார் திருமால்.

திருமாலின் அத்தனை ஆயுதங்களுக்கும் தலைவராகப் போற்றப்படுபவர் ஸுதர்சனாழ்வார். அதனாலேயே அவருக்கு, ‘ஹேதிராஜன்’ என்றொரு திருநாமம் உண்டு. ‘ஹேதி’ என்றால் ஆயுதங்கள் என்றொரு பொருள் உண்டு. ஹேதிகளுக்கு ராஜன் ஸுதர்சனர். ஆரோக்கியம், ஆயுள், ஐச்வர்யம் தந்தருள்பவர் சக்கரத்தாழ்வார். விரோதி பயம், எதிலும் ஜயம் என்று தடைகளைத் தகர்த்தெறிந்து அனைத்திலும் வெற்றியை தரக்கூடியவர் ஸுதர்சனர்.

ஒரு முறை ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன் திருபுட்குழி என்ற ஊரில் தங்கி இருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள அனைவருமே விஷ ஜுரத்தின் பிடியில் தவித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வூர் மக்களை விஷ ஜுரத்திலிருந்து காப்பதற்காக ஸுதர்சனாழ்வார் மீது, ‘ஸ்ரீ ஸுதர்ஸநாஷ்டகம்’ ஸ்லோகத்தை செய்த உடனேயே, சக்கரத்தாழ்வாரின் பரம கிருபையால் அவ்வூரில் இருந்த அனைவருமே விஷ ஜுரத்திலிருந்து நிவாரணம் பெற்றனர் என்பதை புராண குறிப்புகள் குறிப்பிடுகின்றன. எப்பேர்ப்பட்ட நோயிலிருந்தும் நம்மைக் காக்கும் கவசமாக இன்றளவும், ‘ஸுதர்ஸநாஷ்டகம்’ இருந்து வருவது கண்கூடு. கண் திருஷ்டிகளின் தாக்கத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நினைப்பவர்கள் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஸ்லோகம், ‘ஸுதர்ஸநாஷ்டகம்.’ அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் கவசம். எட்டு பத்திகள் கொண்ட இந்த ஸுதர்ஸநாஷ்டகத்தில் ஒவ்வொரு ஸ்லோகம் முடியும்போதும், ‘ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சனா ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சனா’ என்றே முடியும்.

அழகான பார்வை கொண்டவர், தம் பார்வையாலேயே அனைத்து விதமான மங்கலங்களையும் அருளுபவர் என்பதாலேயே ஸுதர்சனர் என்ற பெயர் இவருக்கு வந்தது. ‘திருமாலின் இடக்கையில் இருக்கும் ஆழியே உமக்கு எல்லா வெற்றிகளும் கிடைக்கட்டும். இவ்வுலகை என்றுமே தொடர்ந்து மங்கலகரமாகக் காத்தருள்வீர்’ என்றே இவரைப் போற்றிச் சொல்லும் பாசுரங்கள் ஏராளம். ஒரு கோடி சூரியர்களை எரித்து அவற்றை சக்கரத்தாழ்வாரின் அருகில் கொண்டு வந்து வைத்தால், சக்கரத்தாழ்வாரின் பிரகாசத்தில், அந்த ஒளியின் சக்தியில் கோடி சூர்யர்களே தோற்றுப் போய் விடுவார்களாம். அப்படி ஜொலிப்பவர் சுதர்சனர். நம் வாழ்க்கையில் தொடர்ந்து ஜொலிப்பதற்கும், ஜெயிப்பதற்கும் உற்ற துணையாய்  நிச்சயம் இருப்பார் சக்கரத்தாழ்வார். தீய செயல்களை, அவற்றால் வரக்கூடிய பலன்களை, தீய எண்ணங்களை அழிப்பவரும் இவரே.

சக்கரத்தாழ்வாரை மனதால் தியானித்தால்போதும், நம்மை துன்பக்கடலிலிருந்து காப்பாற்றுவார். நேரம் கிடைக்கும்போதும், மனதில் பயம், குழப்பம் சூழும்போதும் தொடர்ந்து, ‘ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சனா’ என்றே ஜபிப்போம். வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com