ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ‘ஜாலி அலங்காரம்’! எப்போ தெரியுமா?

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்
Published on
Deepavali 2023
Deepavali 2023

ந்திரன் பூலோகத்துக்கு வந்து தவம் செய்து சாபம் நீங்கப் பெற்ற தடாகத்தின் அருகே அமைந்துள்ள கோயில். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற இத்தலத்திற்கு வருகின்றவர்களுக்கு நரக பயம் கிடையாது. எமபயம் கிடையாது. பல பிறப்பு துன்பங்கள் கிடையாது. இங்கே வழிபடுகிறவர்களுக்கு எந்த பாவங்களும் சம்பவிக்காது. இங்குள்ள இறைவனை வணங்கினால் சகல துக்கங்களில் இருந்தும் விடுபட்டு நன்மையை அடையலாம்.

இவ்வாறு பூலோக வைகுண்டமான ஸ்ரீ ரங்கம், ரங்கநாதர் கோயிலின் பெருமைகளை நாத முனிவருக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் சிவபெருமான்.

பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீ ரங்கம், திருச்சி காவிரிக் கரையில் உள்ளது. இக்கோயிலில் 7 பிராகாரங்கள் உள்ளன. அதில் வெளியிலிருந்து முதல் 3 பிராகாரங்களில் மக்கள் வசிக்கின்றனர். இப்படி மக்கள் வாழ அனுமதித்திருக்கும் ஒரே கோயில் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்தான். மீதமுள்ள 4 பிராகாரங்கள் திருக்கோயில்.

ஸ்ரீ ரங்கம் கோயிலில் காலை 8 மணிக்கு ரங்கனுக்கு கோதுமை ரொட்டி, பச்சை பால், வெண்ணெய் இவைதான் பிரசாதம். இது ஸ்ரீ ரங்கன் தன் உயிராக பாவித்த துலுக்க நாச்சியார் அவனுக்குப் படைக்கும் திருவமுது. நாச்சியார் வடதேசத்தவர் என்பதால் ரொட்டியும், வெண்ணெயும், பாலும் பிரசாதமாயிற்று. ஸ்ரீ ரங்கம் பெருமாளின் உற்சவ மூர்த்திக்கு தினமும் கைலி கட்டப்பட்டுதான் திருமஞ்சனம் நடக்கிறது. காரணம் துலுக்க நாச்சியாரின் பக்திதான்.

ஸ்ரீ ரங்கம், ரங்கநாதர்
ஸ்ரீ ரங்கம், ரங்கநாதர்

9 மணிக்கு வெண் பொங்கல், தோசை, கத்திரிக்காய், பூசணிக்காய், வாழைக்காய் பொரியல். அதோடு பெருமாளுக்கு ஜீரணமாக சுக்கு, வெல்லம் தருகின்றனராம். பகல், மாலை உணவு தவிர, இரவு 9 மணிக்கு ரங்கனுக்கு அர்த்த ஜாம பூஜையும் அதையொட்டி அரவணை, கறியமுது. ரங்கன் பள்ளியறைக்குப் போகிற நேரத்தில் குங்குமப்பூ, ஏலம், நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுண்டக்காச்சிய பால். இவையெல்லாம் பிரசாதமாக நிவேதனம்  செய்யப் படுகிறது. தினமும் இரவில் ரங்கநாதர் சன்னிதி முன் வீணை வாசிக்கப்படுகிறது. பெருமாள் சுக நித்திரை கொள்ளவே இப்படி. இக்கோயிலில் சூடிக் கொடுத்த நாச்சியார், ஆண்டாள், ரங்கநாயகி தாயார் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. பங்குனி உத்திரத்தன்று மட்டுமே பெருமாளும், தாயாரும் ஒன்று சேர்ந்து அருள்பாலிப்பர்.

இதையும் படியுங்கள்:
பற்கள் முத்து போல் பிரகாசிக்க முக்கியமான யோசனைகள்!
ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்

ஸ்ரீ ரங்கம் 108 திவ்ய தேசங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ ரங்கக்தில்  ரங்கநாதனை தரிசனம் செய்தாலே மற்ற 108 திவ்ய தேசங்களில் சேவித்த பலன் கிட்டும். 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த கோயில். இதன் சுற்றளவு 4 கி.மீ.. இந்த கோயில் ராஜகோபுரம் 236 அடி உயரமுள்ளது. இதுவே ஆசியாவில் மிகப் பெரிய கோபுரம். திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரின் ஆலயத்தில் மட்டுமே பெருமாளின் வாகனங்களுக்கும் நைவேத்யம் படைக்கப் படுகின்றன. யானை வாகனத்திற்கு வாழை சோகை, கரும்பு, குதிரை வாகனத்திற்கு கொள்ளு, ஐந்து தலை நாகத்திற்கு  அரவணை. கம்பர், தான் இயற்றிய இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தது இந்த ஸ்ரீரங்கம் கோயிலில்தான்.

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்று புராணம் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் ரங்கநாதருக்கு செய்யப்படும். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை ஐந்து மணிக்கு மேல் ரங்கநாதர் தனது ஆலயத்தில் பணியாற்றுபவர்களுக்கு சீயக்காய், நல்லெண்ணெய் வழங்குவர். அதனை நாமும் சிறிது பெற்று, மறுநாள் காலையில் தீபாவளியன்று நல்லெண்ணெய்யை தலையிலும், உடலிலும் தேய்த்து, சீயக்காய் போட்டு குளித்து ரங்கநாதரை வழிபட்டால் உடல் மற்றும் மன நோய்கள் தீர்ந்து போகும்.

ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் கோபுரம்
ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் கோபுரம்

தீபாவளி அன்று மாலை 4 மணிக்கு ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு முட்டைகளாக கட்டி ரங்கநாதர் திருவடிகளில் வேத பாராயணங்கள் முழங்க சமர்பிக்கின்றனர். இந்த திருச்சேவையை ‘ஜாலி அலங்காரம்’ என்கிறார்கள். இந்த அலங்காரத்தில் ரங்கநாதரை தரிசித்தால் வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.

அதன்பின், கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக்கப் படுவார்கள். அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் கலந்துகொள்ள மாட்டார்கள். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com