
காளமேகப் புலவர் இயற்றிய சிலேடைப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஒரேப் பாடலில் மூன்று தெய்வங்களுக்குப் பொருந்தும் வகையில் கூட ஒரு பாடலைத் தந்திருக்கிறார்.
விநாயகர், முருகன், பரமசிவன் என்று மூன்று தெய்வங்களுக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் அவர் பாடிய பாடல் இது;
“சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் நாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுதலானுங் கணபதியுஞ் செவ்வேளும்
எண்ணரனு நேராவரே”
இப்பாடலில்,
‘விநாயகர்’ பற்றி எப்படிச் சொல்கிறார்?
சென்னிமுகம் மாறுளது - தலையும் முகமும் இயற்கைக்கு மாறுபட்டு யானைத் தலையும் முகமுமாக விளங்குகின்றன.
சேர்கரம் முன் நாலுகை - அவர் பெற்றிருக்கும் ஐந்தாவது கரமாகிய துதிக்கை முன்னால் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. (நாலுதல் - அசைதல்)
இந்நிலத்தில் கோடு ஒன்று இருத்தல் - இந்த உலகில் அவர் மகாபாரதம் எழுத, ஒடித்ததால் ஒற்றைக் கொம்புடன் விளங்குகிறார். (கோடு - கொம்பு)
மன்னு குளக்கண் உறுதல் - அவருக்கு உகந்த நிவேதனமாக வெல்லக்கட்டி (குளக்கண்) விளங்குகிறது. மேலும் வெல்லத்தில் (குளக்கண்) அவரே எழுந்தருளி வெல்லப் பிள்ளையாராகவும் வடிவம் எடுக்கிறார்.
இதேப் பாடல் ‘முருகன்’ குறித்தும் சொல்கிறது. எப்படி?
சென்னிமுகம் ஆறு உளது - திருமுடியும் முகமும் ஆறு உள்ளன.
சேர்கரம் முந்நாலுகை - திருக்கரங்கள் முந்நான்கு - பன்னிரெண்டு அமைந்துள்ளன.
இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கை - இந்தப் பூமியில் ஒரு மலை அவரது இருப்பிடமாக அமைகிறது. திருச்செங்கோடு போன்ற மலைத்தலங்கள் முருகனுக்கு உகந்தவை. (கோடு - மலை)
மன்னு குளக்கண் உறுதல் - இங்கு குளம் என்பது பொய்கையைக் குறிக்கும். அதாவது, முருகன் சரவணப் பொய்கையில் தோன்றியவன்.
இதேப் பாடல் விநாயகர், முருகன் ஆகியோரின் தந்தையான ‘பரமசிவன்’ குறித்தும் சொல்கிறது. எப்படி?
சென்னிமுகம் ஆறு உளது - தலையில் கங்கை என்ற ஆறு இருக்கிறது.
முன்சேர் கரம் நாலுகை - முன் புறத்தே உள்ள ஒளி சேர்ந்த நான்கு கரங்களைப் பெற்றுள்ளவர்.
இந்நிலத்தில் கோடொன்று இருக்கை - இந்தப் பூமியில் ஒரு சிறந்த மலையான கயிலாயமே அவரது இருப்பிடம்.
மன்னு குளக்கண் உறுதல்- பொருந்திய நெற்றிக்கண்ணைப் பெற்றிருக்கிறார்.
ஒரு பாடலில் மூன்று தெய்வங்களை அடையாளப்படுத்திய காளமேகப் புலவரின் தமிழ்த்திறன் உண்மையில் வியப்புக்குரியது.