பிணி தீர்த்துக் களிப்பு தரும் காளிப்பட்டி கந்தசாமி!

காளிப்பட்டி கந்தசாமி கோயில்...
காளிப்பட்டி கந்தசாமி கோயில்...

முருகப் பெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் பிரசித்தி பெற்ற விழாவாக  தென்னிந்தியாவில் மட்டுமின்றி தற்போது சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் பக்தர்களால் காவடி பால்குடம் சுமந்து விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் இருக்கும் என்றாலும் சில ஆலயங்கள் மேலும் சிறப்பு. அதில் ஒன்றுதான் இங்கு.

சேலம்  நாமக்கல் எல்லையில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காளிப்பட்டி. இங்கு இயற்கை சூழலில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் நடைபெறும் தைப்பூச விழா வெகு சிறப்பு. அறுபடை வீடுகளையடுத்து அதே போன்ற புகழ் மிக்க கோவில்களில் இதுவும் ஒன்று.

மூலவராக அழகிய கந்தசாமி வீற்று கருணை பொழிகிறார்.  இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பழனிக்கு பாதயாத்திரை செய்த தனது பக்தருக்கு அருள அவரது கனவில் வந்து சொல்லி இதைக் கட்டி இங்கு குடியேறியுள்ளார்  முருகப்பெருமான் என்பது வரலாறு. அதனால் பழனிக்கு நிகராக இந்தக் கோவில் சிறப்பு பெறுகிறது.

அந்த ஊரில் வாழ்ந்து வந்த லட்சுமண கவுண்டர் அதி தீவிர முருக பக்தராவார். சிறு வயது முதலே இவர் ஒவ்வொரு தைப்பூசம் அன்றும் விரதத்துடன் நடைபயணமாக பழனி சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். அது மட்டுமின்றி முருகன் அருளால் இப்பகுதி மக்களுக்கு தெய்வ வாக்குகள் மூலம்  தீராத நோய்களை தீர்த்து பல அற்புதங்களை நிகழ்த்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரால் பழனிக்கு பாதயாத்திரை முடியாமல்  வருந்த அவர் கனவில் வந்த முருகன் அவர் இருக்கும் இடத்துக்கு தான் வருவதாக கூறி கோவில் அமைக்க உத்தரவிட்டு மறைய அப்படி  அவரால் எழுப்பப்பட்டது தான் இந்தக் கோவில்.
இவருக்கு பின் வந்த ஏழு தலைமுறைகளாக இவருடைய குடும்ப வாரிசுகள் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு தரப்படும் கருப்பு நிற சாம்பல் திருநீறு நோய் தீர்க்கும் அருமருந்தாக  செயல்படுகிறது என்கின்றனர்.

காளிப்பட்டி கரும்பு விளைச்சலுக்கு பெயர்பெற்றது. அங்குள்ள கரும்பு விவசாயிகள் நல்ல விளைச்சல் தர முருகனை வேண்டி காணிக்கையாக கரும்புச் சக்கைகளை எரித்து பெறப்படும் சாம்பலை  முருகன் முன் வைத்து பூஜித்து பின் பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது. பாரம்பரியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திருநீற்றை நம்பிக்கையுடன் இட்டுக் கொண்டால் மனக்கவலை மறைந்து தீராத நோய்களும் தீர்ந்து விடுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி பில்லி சூனியம் போன்ற செய்வினைகளுக்கும் இந்த கோவிலில் உள்ள இடும்பன் சன்னதியில் தயாரித்து தரும் விசேஷ மை நிவாரணம் தருவதாக நம்புகின்றனர்.

காளிப்பட்டி அழகிய கந்தசாமி ...
காளிப்பட்டி அழகிய கந்தசாமி ...

இந்தக் கோவில் மேற்கு நோக்கிய கோவிலாகும், மேற்குப் பக்கத்தில் உள்ள நுழைவாயிலுக்கு மேல் 5 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது.  அறுபடை வீடு கோவில்களின் சிலைகள் அமைந்த ஒரு அழகிய முக மண்டபம் பக்தர்கள் வந்து செல்ல வசதியுடன் உள்ளது. வெளியே வடக்குப் பகுதியில் இடும்பன் சன்னதியும் அதைத் தொடர்ந்து வழி விடும் விநாயகர் சன்னதியும் உள்ளது. கோயில் ஒரே பிரகாரத்தில் அமைந்துள்ளது.  நின்ற கோலத்தில் மிகவும் அழகான சிறிய முருகன் கருவறை தெய்வமாக அருள் புரிகிறார்.

ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திர தேர் மற்றும் விநாயக தேர் என அழைக்கப்படும் இந்தத் தேரோட்டங்களைக் காணவும் வடம் பிடித்து இழுக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து திரளுவர்.தேரோட்டத்தின் போது பக்தர்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்கள் மற்றும் உப்பு ,மிளகு ஆகியவற்றை தேரில் காணிக்கையாக வீசுவது வழக்கம்.
அன்றைய தினம் பொங்கல் வழிபாடு, உருளுதண்டம், காவடியாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் என்று திரும்பிய திசையெல்லாம் தமிழ் மண்ணின் பாரம்பரியங்கள் கலந்த பக்தி மணம் கமழும். மேலும் அன்று நடைபெறும் ஆயிரக்கணக்கான நாட்டு மாடுகள் பங்கு பெறும் காளிப்பட்டி மாட்டுச்சந்தை வெகு பிரசித்தம்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான சருமம் தரும் பசலைக் கீரை ஜூஸ்!
காளிப்பட்டி கந்தசாமி கோயில்...

மேலும் இங்கு விற்கப்படும் பசுமை நிறக் கரும்புகளின் சுவையும் தேர் மிட்டாய் எனப்படும் சர்க்கரை மிட்டாய்களின் இனிப்பும் குறிப்பிடத்தக்கது. தைப்பூசத்தை ஒட்டி குழந்தைகளுடன் இங்கு வந்து ஆன்மீகத்தின் சுவையுடன் இவற்றையும் ரசிக்கலாம்.

இக்கோயில் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். பூசம் அடுத்து வரும் நாட்களிலும் முருகனை தரிசிக்க மக்கள் வந்த வண்ணம் இருப்பது சிறப்பு.

நீங்களும் சேலம் பக்கம் வந்தால் கந்தசாமியை தரிசனம் செய்து களிப்புடன் செல்லுங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com