கருணையே வடிவான காஞ்சி காமாட்சி: அறிய வேண்டிய அற்புதத் தகவல்கள்!

Sri Kanchi Kamatchi amman
Sri Kanchi Kamatchi amman

காஞ்சி என்றதும் நம் நினைவிற்கு வந்து நிற்பது ஸ்ரீ காமாட்சி அம்மாள் திருக்கோயில்தான். ஐம்பத்தியொரு சக்தி பீடங்களில் தேவியின் நாபி விழுந்த தலம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலாகும். இக்கோயிலின் காயத்ரி மண்டபத்திலுள்ள 24 தூண்களில் ஒரு தூணில் இந்த நாபி உள்ளது.

முன்னொரு காலத்தில் பண்டாசுரன் எனும் அசுரன் எவரையும் வெல்லும் வரத்தையும், தன்னால் வெல்லப்பட்டவரின் சக்தி முழுவதும் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வரத்தினையும் பெற்றிருந்தான். அவனுக்கு ஒன்பது வயது பெண் குழந்தையால் மரணம் நிகழும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது. தேவர்களை அசுரன் துன்புறுத்தியதால் அன்னை பராசக்தி, காமாட்சி அம்பாளாக அவதாரம் எடுத்து பண்டாசுரனை வதம் செய்து இத்தலத்தில் எழுந்தருளினாள்.

‘காம’ என்றால் அன்பு மற்றும் கருணை என்றும், ‘அட்ச’ என்றால் கண் என்றும் பொருள்படும். அன்பும் கருணை பார்வையையும் உடையவள் அன்னை காமாட்சி. காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாட்சி.

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் முதல் பிராகாரத்தின் நடுவில் 24 கல் தூண்களைக் கொண்ட காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. 24 அட்சரங்களே 24 தூண்களாகக் காட்சியளிப்பது இங்கு சிறப்பு. இம்மண்டபத்தின் மையத்தில்தான் அம்பாள் அழகே வடிவாக அமர்ந்து காட்சி தருகிறாள்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அனைத்து சிவஸ்தலங்களிலும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பிகையாக வீற்றிருப்பதாக ஐதீகம். இதன் காரணமாகவே காஞ்சியில் எந்த ஒரு சிவாலயத்திலும் அம்பாளுக்குத் தனிச் சன்னிதி இல்லை.

ஸ்ரீ காமாட்சி அம்பாள் மூன்று சொரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பத்மாசனத்தில் சாந்த சொரூபியாகவும், எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரத்தில் எந்திர சொரூபியாகவும், அருகில் பிலாசாகத்தில் காரண சொரூபியாகவும் திகழ்கிறாள்.

அன்னை காமாட்சி ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என மூவகை வடிவங்களில் எழுந்தருளி அருள்புரிகிறாள். மூலவர் விக்ரஹமான காமகோடி காமாட்சி ஸ்தூல வடிவத்திலும், அஞ்சன காமாட்சி எனும் அரூப லட்சுமியாக சூட்சும வடிவத்திலும், காமகோடி பீடம் எனும் ஸ்ரீ சக்கரமாக காரண வடிவத்திலும் எழுந்தருளியுள்ளாள்.

சக்தி பீடங்களில் மிக முக்கியமான இத்தலத்தில் காமாட்சி அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உத்ஸவர் காமாட்சி என இத்தலத்தில் ஐந்து காமாட்சிகள் எழுந்தருளியுள்ளதும் தனிச்சிறப்பாகும்.

காஞ்சி நகரின் மத்தியில் காமாட்சி அம்பாள் கருணையே வடிவாக பத்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. காமாட்சி அம்பாள் வீற்றிருக்கும் ஆசனத்தின் சிறப்பு என்னவென்றால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் ஆகியோர் நான்கு கால்களாகவும், சதாசிவன் மேல் பலகையாகவும் இருக்க, அதன் மேல் அம்பாள் பத்மாசனம் பூண்டு கருணை வடிவாகக் காட்சி தந்து அருளுகிறாள்.

இதையும் படியுங்கள்:
ஊட்டச்சத்துக்களின் உறைவிட உணவுகள் எவை தெரியுமா?
Sri Kanchi Kamatchi amman

காஞ்சி காமகோடி பீடத்தில் அன்னை காமாட்சியின் திருவுருவத்திற்கு முன்பாக ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்ரம் உள்ளது. மகான் ஸ்ரீஆதிசங்கரர் இத்தலத்தில்தான் ஆனந்தலஹரியைப் பாடினார்.

சரஸ்வதி சன்னிதிக்கு அருகே 1944ம் ஆண்டில் மகாபெரியவா அம்மனின் பாதுகையை பங்காரு காமாட்சி ஞாபகர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அதற்கு பூஜை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருக்குளத்திற்கு பஞ்ச கங்கை என்று பெயர். ஈஸ்வரனின் தலை முடியிலிருந்து இது உற்பத்தியாவதால் பஞ்ச கங்கை என்று பெயர் பெற்றதாக ஐதீகம்.

காயத்ரி மண்டபத்தின் சுவரில் தென்கிழக்கு திசை நோக்கி கள்வப் பெருமாள் தரிசனம் தருகிறார். 108 திவ்ய தேசங்களில் அம்பாள் திருத்தலத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய தேசம் இதுவாகும். வைணவர்கள் இத்தலத்தில் திருக்கள்வருக்கு எதிரே உள்ள கண்ணாடி வழியாக தரிசனம் செய்கின்றனர்.

காசியில் உள்ள அன்னபூரணி போன்று இங்கும் அன்னபூரணியாக ஒரு கரத்தில் அன்ன பாத்திரத்துடனும், மற்றொரு கரத்தினில் கரண்டியுடனும் அம்பிகை காட்சி தருகிறாள். அன்னபூரணியை தரிசித்து அதன் அருகிலுள்ள பிட்ச துவாரத்தில், ‘பவதி பிட்சாந்தேகி' எனக் கூறி பக்தர்கள் வழிபடுகின்றனர். இப்படிச் செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவளித்துக் காப்பாள் என்பது ஐதீகம்.

காஞ்சி காமாட்சி அம்பாளைத் துதிக்க காஞ்சி காமகோடி மடத்தின் இருபதாவது பீடாதிபதியும் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான மூகர் இயற்றிய ஸ்லோக நூலே, ‘மூக பஞ்ச சதி’ என்று அழைக்கப்படுகிறது. ஐநூறு ஸ்லோகங்களைக் கொண்ட அற்புதமான நூல், ‘மூக பஞ்ச சதி’ ஆகும்.

ஸ்ரீ காமாட்சி அம்பாளை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு அம்பாளின் கண்கள் சிமிட்டுவது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com