நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்து, உடலுக்கு சக்தி தரக்கூடியதாக அமைய வேண்டியது மிகவும் முக்கியம். அதிகம் படிக்காதவர்கள் கூட எந்த உணவில் என்ன சத்து உள்ளது என்று தெரிந்து வைத்திருக்கும் விழிப்புணர்வு மிக்க காலம் இது. உட்கொள்ளும் உணவு உடலுக்குப் பயன் தரக்கூடியதா என்பதை நாமும் அறிந்து உட்கொள்ள, ஏழு உணவுகளில் அடங்கியிருக்கும் ஊட்டச் சத்துக்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* பருப்பு வகைகளில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு அளப்பரியது. நமது பாரம்பரிய உணவு வகைகளில் இட்லி, சாம்பார், வடை, கூட்டு, ஜிலேபி, மைசூர்பாக் என பலவித உணவு வகைகளிலும் பருப்புகளின் பங்களிப்பு அதிகமாகவே உண்டு. சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு, மாமிச உணவுகளில் கிடைக்கும் அளவு புரதம் பருப்பு வகைகளிலிருந்து கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
* நோயற்ற வாழ்வுக்கு உதவக்கூடியது ராஸ்பெரி பழங்கள். இப்பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் C போன்ற, நல்ல ஆரோக்கியத்துக்கு அடிப்படைத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அதிகளவில் நிறைந்துள்ளன.
* ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு அவகோடா பழங்களை உட்கொண்டாலே நம் உடலுக்குத் தேவையான ஃபொலேட், வைட்டமின் B6, நிறைந்த ஆரோக்கியம் தரக்கூடிய மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்புகள் அடங்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.
* மற்ற எந்தக் கொட்டை உணவுகளிலும் இருப்பதை விட வால்நட்டில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், வால்நட்டில் தாவர வகை சீரம் (Serum), ஒமேகா 3 ஆயில், நல்ல கொழுப்புகள், வைட்டமின் E ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
* பிளாக் பீன்ஸ் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடிய ஓர் உணவு. அதனால் மீண்டும் பசியுணர்வு வர அதிக நேரம் பிடிக்கும். இதிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்துள்ளன.
* ஊட்டச்சத்துக்கள் தருவதில் உலகிலேயே முன்னிலையில் நிற்கும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது; அறிவாற்றலைப் பெருக்கும் குணமும் கொண்டது.
* உலகத்தரம் வாய்ந்த இலைக் காய்கறிகளில் ஒன்று பசலைக் கீரை. இதை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் எனலாம். குறைந்த அளவு கலோரி கொண்டது. அதிகளவு சக்தி தரக்கூடியது.
ஊட்டச் சத்துக்களின் உறைவிடமாகத் திகழும் மேற்கூறிய ஏழு வகை உணவுகளை அடிக்கடி உண்போம். உடல் ஆரோக்கியம் பெறுவோம்.