பெருமாளுக்கே கட்டளையிட்ட ஆழ்வார்: காஞ்சி திருவெக்கா பெருமாள் திருத்தலத்தின் உறைவைக்கும் ரகசியம்!

Yathothkari Perumal -திருவெக்கா பெருமாள்
Yathothkari Perumal -திருவெக்கா பெருமாள்
Updated on

ன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரான திருமழிசையாழ்வார், காஞ்சிபுரத்தில் திருவெக்கா என்னும் திருத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு சேவை செய்துவந்தார். இவருடன் இவரின் சீடர் கணிக்கண்ணனும் தினமும் பெருமாளுக்கு (திருவெக்கா பெருமாள்0 சேவை செய்தார். இவர்களின் ஆசிரமத்தை தினமும் ஒரு மூதாட்டி சுத்தம் செய்து உதவிவந்தார். தங்கள் ஆசிரமத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவும் அந்த வயதான பெண்மணிக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று விரும்பினார் திருமழிசையாழ்வார்.

அதனால் இளமை திரும்பவேண்டும் என்ற மூதாட்டியின் வேண்டுகோளை பெருமாளிடம் தெரிவித்து, அருள் செய்யுமாறு வேண்டினார் ஆழ்வார். இறைவனும் மூதாட்டிக்கு இளமை திரும்பும் வரத்தை அருள, மூதாட்டி முதுமை நீங்கி இளமையானார். ஆழ்வாருக்கும் திருமாலுக்கும் மகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்தார்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட காஞ்சி மன்னனுக்கு பேராசை ஒன்று எழுந்தது. தானும் முதுமை நீங்கி இளமை பெற்றால் சுகமாக வாழலாம் என்று விரும்பினான். எனவே கணிகண்ணனை அழைத்து தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

“உங்கள் ஆசிரமத்து மூதாட்டிக்கு இளமையை மீட்டுக் கொடுத்ததுபோல் எனக்கும் இளமையைத் திருப்பித் தருமாறு உங்கள் குருநாதரிடம் தெரிவியுங்கள்,” என்று மன்னன் கணிகண்ணனிடம் தெரிவித்தான்.

குருவின் கருணையையும், பெருமாளின் அருளையும் சேவையால் மட்டுமே பெறமுடியும், உத்தரவால் பெற முடியாது என்பதனை கணிகண்ணன் சொல்லி, தன் மறுப்பைத் தெரிவித்தார். மன்னன் சும்மா விடுவாரா? கணிகண்ணனை நாடு கடத்தும்படி உத்தரவிட்டார். மிகவும் மனம் வருந்திய கணிகண்ணன் ஊரைவிட்டுப் போகும் முன், தன் குருநாதரிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். இனிமேல் பெருமாளுக்கு சேவை செய்ய இயலாது என்று சொல்லி, ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட திருமழிசையாழ்வார் கணிகண்ணனைத் தேற்றினார்.

“வா, நாம் இருவரும் சென்று நம் திருவெக்கா பெருமாளிடம் முறையிடலாம்,” என்று கணிகண்ணனையும் அழைத்துக்கொண்டு ஆலயத்திற்கு வந்தார். பெருமாளிடம் தன் மனக்குறையைச் சொல்லி பாசுரம் பாடினார்.

“கணிகண்ணன் போகின்றான்

காமருபூங்கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டா –

துணிவுடைய

செந்நாப் புலவன்யான் செல்கின்றேன்

நீயுமுந்தன்

பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்”

கணிகண்ணனுடன் தான் ஊரைவிட்டுப் போவதாகவும், ஆதிசேஷன் என்னும் நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு பெருமாளையும் ஊரைவிட்டுக் கிளம்புமாறு தன் பாசுரத்தில் பாடினார் திருமழிசையாழ்வார். இவ்வாறு தன் பாசுரம் வழியாக பெருமாளுக்குக் கட்டளை பிறப்பித்து விட்டு, ஆழ்வார் புறப்பட்டார். உடனே ஆழ்வார் சொன்னவண்ணம் பெருமாளும் பாம்புப் படுக்கையை சுருட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

பெருமாள் கிளம்பியபிறகு திருமகள் இருப்பாரா? திருமாலின் மார்பில் வாசம் செய்யும் திருமகளும் கிளம்பிவிட, காஞ்சி மாநகர் களையிழந்தது. காஞ்சியை விட்டுக் கிளம்பிச்சென்ற ஆழ்வார், கணிகண்ணன், பெருமாள், திருமகள் நால்வரும் இரவு ஓரிடத்தில் தங்கினர். அவர்கள் தங்கிய இடம் ‘ஓர் இரவு இருக்கை’ என அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் மருவி இப்போது ‘ஓரிக்கை’ என்று அழைக்கப்படுகிறது.

திருவெக்காவில் மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், கருவறையில் திருமால் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பதறியபடி மன்னரிடம் முறையிட்டனர். காரணத்தைக் கண்டறிந்த மன்னன், தன் தவறை உணர்ந்து வருந்தி, ஆழ்வாரைக் கண்டு மன்னிப்பு கோரினான். கணிகண்ணனை நாடுகடத்தும் ஆணையைத் திரும்பப் பெற்றான். ஆழ்வாரும் மன்னித்து மீண்டும் பாசுரம் பாடினார்.

“கணிகண்ணன் போக்கொழிந்தான்

காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் –

துணிவுடைய

செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்

நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக்கொள்”

என்று பாடியதும், பெருமாள் தன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் கிளம்பி வந்து திருவெக்காவில் படுத்துக்கொண்டார். ஆழ்வாரின் பக்திக்கும், அவர் பாடும் பாசுரங்களின் மேல் வைத்திருந்த பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, ஆழ்வார் சொன்னதும் அவர் சொன்னபடியே பெருமாள் செய்ததால், சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் வந்தது.

ஆழ்வார் சொன்னதும் அவசர அவசரமாகத் திரும்பி வந்து படுத்துக் கொண்டதால், வலமிருந்து இடமாக மாறி படுத்துக்கொண்டுவிட்டார். பெருமாள் சயனத் திருக்கோலத்தில் அருளும் திருத்தலங்களில் எல்லாம் இடமிருந்து வலமாக சயனித்திருப்பார். இத்திருத்தலத்தில் மட்டும்தான் வலமிருந்து இடமாக சயனித்திருக்கிறார். இப்போதும் இந்த அதிசய அழகை காஞ்சிபுரம் திருவெக்கா திருத்தலத்தில் தரிசிக்கலாம்.

Yathothkari Perumal -திருவெக்கா பெருமாள்
Yathothkari Perumal -திருவெக்கா பெருமாள்

இங்கே பெருமாளின் திருவடி அருகே சரஸ்வதி தேவி அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இதுவும் வேறெங்கும் காணக் கிடைக்காத சிறப்பாகும். அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

சயனக் கோலத்தில் மற்ற பெருமாள் ஆலயங்களில் எப்படி இடமிருந்து வலமாக பெருமாள் அருள்கிறாரோ அதேபோல்தான் இத்தலத்திலும் முன்பு பெருமாள் சயனித்திருந்தார்.

ஒருமுறை பிரம்மா யாகம் செய்வதற்காக சத்யவிரத தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாக சாலையில் யாகம் வளர்த்தார். மனைவி சரஸ்வதியை அழைக்காமல் யாகத்தைத் தொடங்கியதால், சரஸ்வதிக்கு கோபம் வந்தது. யாகத்தை நிறுத்த பலவாறு முயன்றார். உலகை இருளாக்கினார். ஸ்ரீமன் நாராயணன் விளக்கொளி பெருமாளாக திருத்தண்காவில் தோன்றி யாகத்தைத் தொடர உதவினார். சரஸ்வதி சரபம் என்னும் பறவை வடிவ அசுரனை ஏவினார். நாராயணன் அஷ்டபுஜங்கராய் தோன்றி அசுரனை அழித்தார்.

வேகவதி என்னும் ஆறாக சரஸ்வதி பெருக்கெடுத்து வர, பெருமாள் ஆற்று நீரைக் கட்டுப்படுத்தும் அணையாக குறுக்கே படுத்துக்கொண்டார். வேகவதியின் வேகம் குறைந்து திசை மாறி பிரம்மாவின் யாகம் தடையின்றித் தொடர உதவினார். சரஸ்வதி தன் தவறை உணர்ந்து நாராயணனை வணங்கினார். இவ்வாறு வேகவதி ஆற்றின் குறுக்கே திருவெக்காவில் பெருமாள் சயனித்த இடம்தான் சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஆலயம் இருக்கும் இடம். பெருமாள் வழக்கம்போல் மற்ற தலங்களில் அருள்வது போலத்தான் இத்தலத்தில் முதலில் சயனித்தார். பின் திருமழிசையாழ்வார் பாசுரம் பாடி வேண்டியதும் கிளம்பிச் சென்று மறுபடியும் வந்தபோது மாற்றி, வலமிருந்து இடமாகப் படுத்துகொண்டார்.

இத்தல இறைவனுக்கு யதோத்தகாரி என்பது திருநாமம். பிறகு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்போதும் பெருமாள் திசை மாறி சயனித்திருப்பதையும், பெருமாளை வணங்கியபடி சரஸ்வதி அமர்ந்திருப்பதையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com