
திருச்செந்தூரில் அமைந்துள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் திருத்தலம், கடற்கரையில் அமைந்த ஒரே முருகன் திருக்கோவிலாகும். வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை நீங்க வேண்டும், மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்றால் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் முருகப் பெருமான் தான்.
குரு பகவானுக்கு முருகப் பெருமான் அருள் செய்த தலம் என்பதாலும், முருகன் திருத்தலங்களில் திருச்செந்தூரில் மட்டுமே முருகப் பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக அருள் செய்கிறார்கள்.
தமிழ்கடவுள் முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் நிவர்த்தியானது.
எனவேதான் முருகனின் அறுபடை வீடு தலங்களில் திருச்செந்தூர் தலம் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததற்கு, அது முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக இருப்பது, சூரபத்மனை அவர் அழித்த வீரத்தை கொண்டாடும் நிகழ்வு, மற்றும் கடலோரத்தில் அமைந்திருக்கும் தனித்தன்மை ஆகியவையே முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. முருகனின் மற்ற ஆறுபடை வீடுகள் மலைகளின் மேல் அமைந்திருக்க, இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டும் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த அமைவிடம் விழாவை மேலும் தனித்துவமாக்குகிறது.
கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் கொண்டாடப்படுவதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டி விழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தால் கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா எப்போது தொடங்குகிறதோ அதை கணக்கிட்டே பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். அந்த வகையில் முருக பக்தர்கள் 48, 21, 11, 6 நாட்கள் என மாலை அணிந்து தங்களது தேவைகளுக்கு ஏற்ப விரதம் அனுஷ்டிப்பார்கள். 48, 21, 11 நாட்கள் விரதம் இருக்க முடியாத பக்தர்கள் கந்த சஷ்டியின் 6 நாட்களாவது விரதம் அனுஷ்டிக்க வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் இந்த ஆண்டு (2025) வரும் அக்டோபர் 22-ம்தேதி புதன் கிழமை கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. இந்த ஆறு நாள் விரதம் வரும் 27-ம்தேதி திங்கள் கிழமை சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் 28-ம்தேதி முருகப் பெருமான்-தெய்வானை திருமண வைபவமும் நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழா நடக்கும் 6 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்து விரதம் அனுஷ்டித்து அனுதினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். கடைசி நாளில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பின்னரே விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இந்த கந்த சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். கடைசி நாளில் சூரசம்ஹார நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவார்கள். மேலும் 27-ம்தேதி திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வை கண்டுகளிப்பார்கள்.
சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. கந்த சஷ்டி திருவிழா நாட்களில் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.