கர்நாடக இசையில் சரளி வரிசையை தந்த புரந்தரதாஸர்!

Karnataka Isaiyil Sarali Varisaiyai Thantha Purantharadasar
Karnataka Isaiyil Sarali Varisaiyai Thantha Purantharadasarhttps://www.youtube.com
Margazhi Sangamam
Margazhi Sangamam

ங்கீதம் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலில் கற்றுக்கொடுக்கப்படுவது சரளி வரிசைதான். ‘ச ரி க ம ப த நி ச’ என்று சொல்லித்தான் முதலில் அனைவரும் சங்கீதம் பயில ஆரம்பிப்பார்கள். இதை, சரளி வரிசையின் முதல் பாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடக சங்கீதத்தின் ஸ்வர ஸ்தானங்கள் புரிவதற்காக சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு எளிமையான பயிற்சி. இது, ‘மாயாமாளவகௌளை’ எனும் ராகத்தில் அமைந்தது. இந்த சரளி வரிசையை நமக்குக் கொடுத்தது புரந்தரதாஸர். இவர் நாரதரின் அவதாரம் என்றும் சிலர் கூறுவதுண்டு.

புரந்தரதாஸர், 15, 16ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்தவர். இவர் பிறந்தது ஒரு செல்வந்தரின் குடும்பம். இவரது தந்தை பெயர் வரதப்ப நாயக்கர். தாயார் ருக்குமணி அம்மையார். வரதப்ப நாயக்கர் ஒரு நவரத்தின வியாபாரி. புரந்தரதாஸரின் இயற்பெயர் ஸ்ரீநிவாஸன் நாயக்கர். தந்தையார் மறைவுக்குப் பிறகு அந்தத் தொழில் ஸ்ரீநிவாஸ நாயக்கர் வசம் வந்தது. இதனால் அவர் மிகப்பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார். அதனால் இவரை, ‘நவகோடி நாராயணன்’என்றே பலரும் அழைத்தனர். இவரது மனைவி பெயர் சரஸ்வதி பாய். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். ஒருபுறம் செல்வம் சேர்ப்பதிலேயே குறிக்கோளாக இருந்தார் ஸ்ரீநிவாஸன். ஆனால், சரஸ்வதி பாய் மிகுந்த இறை பக்தி உள்ளவராக இருந்தார்.

ரு சமயம், ஏழை அந்தணர் ஒருவர் செல்வந்தரான ஸ்ரீநிவாஸனிடம், தனது மகனுக்கு பூணுல் அணிவிக்கும் நிகழ்வுக்காக கொஞ்சம் பணம் கொடுத்து உதவும்படி கேட்டார். ஆனால், அந்த ஏழை அந்தணருக்கு பணம் கொடுக்க மறுத்து அவரை விரட்டி அனுப்பி விட்டார் ஸ்ரீநிவாஸன். ஆனால், தான தர்மத்தில் நம்பிக்கையுள்ள, இளகிய மனம் கொண்ட இவரது மனைவி சரஸ்வதி பாய், அந்த ஏழை அந்தணரிடம் தனது கணவருக்குத் தெரியாமல் தன்னுடைய மூக்குத்தி ஒன்றைக் கொடுத்து, இதைக் கொண்டு அவரது மகன் பூணுல் நிகழ்வை நடத்திக்கொள்ளும்படி கூறினார்.

அந்த ஏழை அந்தணரோ, தனவந்தர் ஸ்ரீநிவாஸன் வைத்திருந்த அடகுக் கடையில் அந்த நகையை வைத்து பணம் பெறுவதற்காகச் சென்றார். அந்தணர் கொண்டு வந்த அந்த மூக்குத்தி தனது மனைவியின் மூக்குத்தியே என்பதை அறிந்த ஸ்ரீநிவாஸன் மிகவும் கோபமாக தனது வீட்டுக்கு வந்து, மனைவி சரஸ்வதியை அழைத்து, ‘உன்னோட மூக்குத்தி எங்கே’ என்று கேட்கிறார்.

விஷயம் தனது கணவருக்குத் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த சரஸ்வதி பாய், ‘மூக்குத்தியை வீட்டில்தான் வைத்திருக்கிறேன்’ என்று பொய் கூறுகிறார். இதைக் கேட்ட கணவர் ஸ்ரீநிவாஸன், ’எங்கே, போய் எடுத்து வா’ என்று கூற, சரஸ்வதி ‘தனது கணவருக்குத் தெரியாமல் நகையைக் கொடுத்ததோடு அல்லாமல், இப்போது பொய் வேறு சொல்கிறோமே’ என்று எண்ணி, பாலில் விஷம் கலந்து குடித்து உயிரைத் துறக்க முடிவு செய்கிறார்.

விஷம் கலந்த பாலைக் குடிக்க சரஸ்வதி பாய் முற்படுகையில், அதிசயமாக அந்தப் பாலில் அவரது மூக்குத்தி இருந்தது. அதைக் கண்டு மிகவும் அதிசயித்துப்போன சரஸ்வதி அதை எடுத்துக்கொண்டு வந்து தனது கணவனிடம் காண்பித்ததோடு, நடந்த முழு விஷயத்தையும் அவரிடம் கூறுகிறார். அதைக் கேட்ட ஸ்ரீநிவாஸன் அப்போதுதான், ‘நம்மையும் மீறிய ஏதோ ஒரு சக்தி உலகில் உள்ளது’ என்பதை அறிகிறார். அதையடுத்து ஸ்ரீநிவாஸன், தம்மிடம் உதவி கேட்டு வந்த அந்த ஏழை அந்தணரைத் தேடி இருக்கிறார். ஆனால், அந்த அந்தணர் அவரது கண்ணில் படவேயில்லை. அதுமட்டுமின்றி, ‘தம்மிடம் உதவி கேட்டு வந்தது சாட்சாத் அந்த மகாவிஷ்ணுவே என்பதையும் உணர்கிறார் ஸ்ரீநிவாஸன்.

அன்றிலிருந்து ஸ்ரீநிவாஸனின் செல்வம் சேர்க்கும் ஆசை அவரை விட்டு அகன்றது. தவிர, இறைவன்பால் பக்தி செலுத்துவதிலும் அவரது மனம் திரும்பியது. தம்மிடம் இருந்த கணக்கிட முடியாத கோடிக்கணக்கான செல்வங்கள் அனைத்தையும் ஏழை எளியோருக்கு தானமாகக் கொடுத்துவிட்ட ஸ்ரீநிவாஸன், ஒன்றுமில்லாதவராக தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறி பிட்சை ஏற்று தனது குடும்பத்தை நடத்தியதோடு, பெருமாள் பெருமையை கதையாகக் கூறி தனது வாழ்க்கையை நடத்தினார்.

இதையும் படியுங்கள்:
மார்கழி சங்கமம்: இந்த வருடத்து சங்கீத கலாநிதி யார் தெரியுமா?
Karnataka Isaiyil Sarali Varisaiyai Thantha Purantharadasar

தையடுத்து, வியாச தீர்த்தர் என்னும் மகானிடம் இவர் தீட்சை பெற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து ஸ்ரீநிவாசன் நாயக்கராக இருந்த இவர், புரந்தரதாஸர் என்னும் நாமத்தைப் பெறுகிறார். அதன் பிறகு, கர்நாடகத்தின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் ஆரம்பித்து, அனைத்து திசைகளிலும் ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரமான விட்டலனின் பெருமையை மக்களிடம் தனது பாடல்களின் மூலம் எடுத்துச் சொல்லி தனது வாழ்நாளை கழித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீகிருஷ்ணன் குறித்து இவர் பாடிய பாடல்கள் அனைத்திலும், ‘புரந்தர விட்டல்’ என்னும் இவரது அடையாளம் இருக்கும். இப்படி இவர் சுமார் நான்கு லட்சம் பாடல்களுக்கும் மேல் இயற்றிப் பாடி இருக்கிறார்.

இவரது அந்தப் பாடல்களைத்தான் இன்றும் பலரும் இசைத் திருவிழாக்களில் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம் இவை அனைத்துமே கர்நாடக இசை பயிலும் குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும் விஷயமாக உள்ளது. இவை அனைத்தையும் நமக்குக் கொடுத்தது புரந்தரதாஸர்தான்.

இவரது பாடல்கள் பெரும்பாலும் கன்னட மொழியில்தான் இருக்கின்றன. சில சமஸ்கிருத பாடல்களையும் இவர் இயற்றி இருக்கிறார். இவரது பாடல்கள் எளிதில் அனைவருக்கும் புரிந்து பாடும் விதத்தில் இருப்பது சிறப்பு. இதுமட்டுமின்றி, அந்தக் காலத்திலேயே இவர் சாதிக்கொடுமை, பெண் விடுதலை, தீண்டாமைக்கு எதிராகவும் பாடல்கள் இயற்றி பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இவரது புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றே கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com