தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் இது 5வது தலம். யாத்திரை வந்த சுந்தரர், இத்தலத்திற்கு வந்தபோது அவர் வைத்திருந்த பொன்னும், பொருளும் தீர்ந்து விட்டது. எனவே, விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக் கேட்டார். சிவன் தன்னிடம் பொன் இல்லை என்றார். "உன்னிடம் இல்லாத பொருள் ஏது?" என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், "என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தர வேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்'' என்றார்.
சுந்தரரும் விடுவதாக இல்லை. "எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள்" என்று கெஞ்சிய சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச் செய்தார். அவளிடம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்குக் கொடுத்தார் சிவபெருமான்.
நண்பன், உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளையே அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர்.
முருகன் சிறப்பு: பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆறுமுகனாக தனிச்சன்னிதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார், ‘வெஞ்சக்கூடல் பெருமானே!' என்று போற்றிப் பாடியிருக்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் மீண்டும் இணைந்து தாம்பத்யம் சிறக்கும் என நம்புகிறார்கள்.
கருவறையில் விகிர்தீஸ்வரர் நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விகிர்தீஸ்வரர் என்றால் ‘நன்மைகள் தருபவர்' என்று பொருள். இவரை வழிபடுபவர்கள் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகப்பெற்று, நன்மைகள் கிடைக்கப்பெறுவர் என்பது நம்பிக்கை.
அம்பாள் பண்ணேர் மொழியம்மை சுவாமிக்கு இடப்புறத்தில் தனிச்சன்னிதியில் இருக்கிறாள். முன்மண்டபத்தில் நடராஜரும், பிராகாரத்தில் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னிதியும் இருக்கிறது. இக்கோயில் சுவாமியை வணங்கிவிட்டு வெளியேறும்போது, படிகளில் ஏறிச்செல்லும்படியாக பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் இங்கு வணங்கிவிட்டு திரும்பும்போதே, வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதை இந்த அமைப்பு குறிப்பதாகச் சொல்கிறார்கள். மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு ‘கூடல் ஊர்’ என்று பெயர்.
தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்துவிட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது, இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை, தன் கணவர் என்றெண்ணிய அகலிகை, பணிவிடைகள் செய்தாள்.
இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை தனது ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். (இது ஈசனை தேடி... குழுவின் பதிவு) சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவ தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி, தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான்.
இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்குக் காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றருளினார். தனக்குக் காட்சி தந்து அருளியது போலவே, இத்தலம் வரும் அனைவருக்கும் அருள வேண்டுமென சிவனிடம் வேண்டினான் இந்திரன். அதனையேற்ற சிவனும் சுயம்பு லிங்க மூர்த்தமாக இத்தலத்தில் எழுந்தருளினார். இக்கோயில் கரூர் நகரில் அமைந்துள்ளது.