

சிவகங்கை சீமையில் அமைந்துள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது தேசப்பற்றின் சாட்சியாகவும், பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அதிசய ஸ்தலமாகவும் திகழ்கிறது.
துண்டுச் சீட்டில் எழுதி வைத்தால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் அற்புதமும், பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தெய்வீக சக்தியும் கொண்ட இந்த ஆலயம் குறித்த சிலிர்க்க வைக்கும் தகவல்களை இந்தப் பதிவில் முழுமையாகக் காணலாம்.
வெள்ளையர்களின் ஆட்சிகாலம் அது. அந்தக் காலங்களில் மக்கள் மிகவும் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது முக்கியமான ஒன்றாகும்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மகள் உடையாள் என்பவள் வயல்காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த வழியாக சிவகங்கை நாட்டு ராணி வேலுநாச்சியார் ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்து அந்த வயல்காட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த வழியாக வந்த ஆங்கிலேயர்கள் அந்த உடையாளைப் பார்த்து
“வேலு நாச்சியார் எந்தப் பக்கம் சென்றாள் என்பதை நீ பார்த்தாயா?”
“ஆம் பார்த்தேன்! ஆனால் என் நாட்டு ராணியை ஒரு போதும் நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்!” என்று ஆங்கிலேயனிடம் சொன்னாள் அந்த 17 வயது சிறுமி உடையாள்.
“நீ வேலு நாச்சியார் சென்ற பகுதியை சொல்லாவிட்டால் உன்னை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டு விடுவேன்!”
“நீ என்னை எட்டு துண்டுகளாக வெட்டி போட்டாலும், என் நாட்டின் ராணியை நான் ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன்!” என்றாள்.
பிறகு கோபம் கொண்ட அந்த ஆங்கிலேய அரக்கன் தன்னுடைய வாளினை எடுத்து அந்த உடையாளை இரண்டு துண்டாக வெட்டிப் போட்டான். துடிதுடிக்க இறந்து போனாள் உடையாள். பிறகு இந்தச் செய்தியை அறிந்த வேலுநாச்சியார் அந்த உடையாள் வெட்டுப்பட்ட இடத்தில் ஒரு காளியம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வெட்டுடையார் காளியம்மன் என்ற பெயரில் கோயிலைக் கட்டினார்.
அந்த 17 வயது சிறுமியின் நினைவாக அந்த இடத்தில் இன்று வரை வெட்டுடையார் காளியம்மன் கோவில் இருந்து வருகிறது. ஆதரவு இல்லாதவர்களை அதிகாரம் செய்பவர்கள், பணம் வாங்கி விட்டு கொடுத்த பணத்தைக் கேட்டால் இல்லை என்று பொய் சொல்பவர்கள், ஆடு, மாடுகளை திருடுபவர்கள், நாணயம் தவறுபவர்களுக்கு நாணயத்தை வெட்டிப் போட்டால் எட்டு நாள்களில் நல்ல தீர்வைக் கொடுப்பாள் இந்த வெட்டுடையார் காளியம்மன் என்று ஊர் மக்கள் இன்றுவரை கூறிவருகிறார்கள்.
இந்தக் காளியம்மனுக்கு காசு வெட்டி காளியம்மன் என்ற மற்றொரு பெயரும் மக்களால் கூறப்படுகிறது. தனக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தால் இந்த வெட்டுடையாள் காளியம்மனிடம் ஒரு துண்டு சீட்டில் அவர்களுடைய துன்பங்களை எழுதி வைத்துவிட்டு சென்றால் இரவில் ஊர் சுற்றி வரும் இந்த வெட்டுடையாள் காளியம்மன் இவர்கள் எழுதி வைத்த துண்டு சீட்டை எடுத்து படித்து அவர்களின் கஷ்டங்களை போக்கிடுவாள் என்று எல்லா மக்களும் கூறுகிறார்கள்.
குழந்தை இல்லாத பெண்கள் இந்தக் கோவிலில் உள்ள வேப்ப மரத்தடியில் தொட்டில் கட்டினால் மறுவருடமே இவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆகாத பெண்களும் இந்தக் கோவிலில் மஞ்சள் கயிறை கட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு திருமணத்தடை நீங்கி மறுவருடமே நல்ல வரன் கிடைக்கிறது என்பது மக்களால் நம்பப்பட்டு வருகிறது.
வருடந்தோறும் பங்குனி மாதம் இந்தக் கோவிலில் வெகு விமர்சையாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் கிராமத்து மக்கள் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்கினி சட்டி எடுத்தல், அழகு குத்துதல், ஆயிரங்கண் பானை எடுத்தல், போன்ற அவர்களுடைய நேர்த்திக் கடன்களை அழகாக இங்கு செலுத்துகிறார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு உறவுகள் பிரிந்தால் இந்தக் கோவிலில் வந்து பொங்கல் வைத்து காளியம்மனை வழிபட்டு பிரிந்து இருந்தவர்கள், இந்தக் கோவிலில் வந்து ஒன்றாக சேர்ந்து விட்டுச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு செயலையும் மனதில் நினைத்துக் கொண்டு வெட்டுடையார் காளியம்மனிடம் பிரார்த்தனையை வைத்தால் உடனடியாக அந்த பிரார்த்தனையை நிறைவேற்றித் தருவாள் என்று மக்கள் மனதார உறுதியளிக்கின்றனர்.
இந்தக் கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளையும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்வதன் மூலம், உங்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு ஆன்மீக ரீதியான தெளிவும் மன அமைதியும் கிடைக்கப் பெறுகிறீர்கள்.