

ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல சிறப்புகளை கொண்டது அருகம்புல். முழுமுதற் கடவுளான விநாயக பெருமானின் வழிபாட்டில் மிக முக்கிய இடத்தை அருகல்புல் பிடித்துள்ளது.
அருகம்புல் இல்லாமல் விநாயகர் வழிபாடு முழுமை பெறாது என்றும் கூறுவர். பூஜைக்காக பயன் படுத்தப்படும் இந்த அருகம்புல்லை போற்றி வழிபடும் நாளாக ‘தூர்வாஷ்டமி’ உள்ளது.
ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினம் ‘தூர்வாஷ்டமி’ (Durva Ashtami) என்று அழைக்கப்படுகிறது.
'தூர்வா' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அருகம்புல் என்று பொருள். இந்நாளை ‘அருகம்புல அஷ்டமி’ என்றும் அழைப்பர்.
இந்த நாளில் விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த, லட்சுமி சொரூபமாகப் போற்றப்படும் அறுகம்புல்லை முதன்மையாக வைத்து வழிபட வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இந்த நாளில் தூய்மையான அருகம்புற்களைக் கொண்டு வந்து, முறைப்படி பூஜை செய்து, தூர்வா தேவியை (அருகம்புல்லின் அதிதேவதை) பிரார்த்தனை செய்வார்கள்.
இந்த ஆண்டு செப்டம்பர் 18-ம்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் முதல் 19-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் வரை ‘தூர்வாஷ்டமி’ வருகிறது.
அஷ்டமி திதி தொடக்கம்: செப்டம்பர் 18-ம்தேதி, மதியம் 01.00 மணி
அஷ்டமி திதி முடிவு: செப்டம்பர் 19-ம்தேதி, பிற்பகல் 03.26 மணி
தூர்வாஷ்டமி வழிபாடு பூஜை செய்வதற்கான உகந்த நேரம் (சுப முகூர்த்தம்): செப்டம்பர் 18-ம்தேதி காலை 05.45 மணி முதல் காலை 8.11 மணி வரை வழிபாடுகளைச் செய்வது மிகவும் சிறந்தது
‘தூர்வாஷ்டமி’ அன்று விநாயகருக்கு அருமல்புல் சாற்றி வழிபடுவது சிறப்பானது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டைத் துப்புரவு செய்து, பூஜையறையில் கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும்.
மேலும் பூஜையறையில் சுத்தமான பலகையின் மேல் கோலமிட்டு, ஒரு தாம்பாள தட்டின் மேல் பறித்து வந்த புதிய அருகம்புல்லை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்கவேண்டும்.
விநாயகர், சிவன் மற்றும் மகாலட்சுமியை மனதார நினைத்து அறுகம்புல்லுக்கு பழங்கள், மலர்கள், அரிசி, தயிர் நைவேத்தியம் படைத்து தூப தீபம் காட்டி வழிபட வேண்டும்.
இந்நாளில் விரதம் இருந்து விநாயகரையும், சிவபெருமானையும் வழிபடுவது வழக்கம். ‘தூர்வாஷ்டமி’ விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். குறிப்பாக குடும்ப நலனுக்காக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விரதமான கருதப்படுகிறது.
தூர்வாஷ்டமி (அருகம்புல் அஷ்டமி) விரதத்தின்போது செய்யக்கூடாத முக்கிய காரியங்கள் பின்வருமாறு:
* தூர்வாஷ்டமி நாளில் விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடலாம். ஆனால், துர்க்கை அம்மனுக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்யவோ அல்லது படைக்கவோ கூடாது என்பது ஆன்மீக விதியாகும்.
* வீதி ஓரங்களில் அல்லது கால்களால் மிதிக்கப்படும் இடங்களில் வளரும் அருகம்புல்லைப் பறித்துப் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான, பசுமையான மற்றும் பூச்சிகள் அரிக்காத அருகம்புல்லை மட்டுமே வழிபாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.
* விரத நாளன்று அசைவ உணவுகள், மது அருந்துதல், புகைபிடித்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் சமையலில் வெங்காயம், பூண்டு போன்ற தாமச உணவுகளையும் சேர்க்கக் கூடாது.
* விரத முறைகளின்படி, விரதமிருக்கும் பெண்கள் அல்லது ஆண்கள் தூர்வாஷ்டமி நாளன்று பகல் பொழுதில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
* இந்த நன்னாளில் வீட்டில் கோபப்படுவது, சண்டை போடுவது, பிறரைப் புறம் பேசுவது அல்லது வசைபாடுவது போன்ற எதிர்மறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது. மனதைத் தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும்.
* தூர்வாஷ்டமி அன்று முழுமையாகவோ அல்லது ஒரு வேளை மட்டும் (பகலில் மிதமான உணவு) விரதமிருப்பது வழக்கம். விரதத்தை நிறைவு செய்யாமல் அதற்கு முன்பாகவே பலகாரங்கள் அல்லது கடினமான உணவுகளை உண்ணக் கூடாது.
அறுகம்புல்லை மகாலட்சுமியின் சொரூபமாக பாவித்து பூஜித்தால் வீட்டில் செல்வம் பெருகும். தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க இவ்விரதம் சிறந்தது.
விரதம் இருப்பவர்களுக்கு திருமண வாழ்வு சிறப்பாகவும், அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் என்பது ஐதீகம். ‘தூர்வாஷ்டமி’ நாளில் ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற அளவு உதவிகளையும், தானியங்களையும் செய்தால் புண்ணியம் பெருகும்.
இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் மற்றும் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பதும், தடைகள் யாவும் நீங்கும் என்பதும் ஆன்மீக நம்பிக்கையாகும்.