காலையில் குழந்தை... மாலையில் முதியவர்! கொங்கு மண்டலத்தின் தைப்பூச விழா ரகசியங்கள்!

கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தைப்பூசத் திருவிழா பல்வேறு முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
thaipusam murugan worship
murugan valli deivanaihttps://www.nakkheeran.in
Published on
deepam strip
deepam strip

கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச நாளன்று நிலா பிள்ளையாருக்கு வழிபாடு நடத்தி பெண்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் வரும் பெளர்ணமி அன்று திருச்செங்கோடு பகுதியில் தேரு பார்க்க போகும் பிள்ளையார் விழா நடைபெறும். இதற்காக தைப்பூசத்திற்கு முந்தைய ஒன்பது நாட்களும் திருச்செங்கோடு பகுதியில் முக்கிய வீதிகளின் மையத்தில் பசுஞ்சாணத்தில் பிள்ளையாரை பிடித்து வைப்பார்கள். அந்த பிள்ளையாருக்கு பக்கத்தில் சிறுமி ஒருத்தியை சீட்டுக் குலுக்கி போட்டு தேர்வு செய்து அவரை அலங்கரித்து பிள்ளையாருக்கு துணையாக உட்கார வைப்பார்கள்.

நிலா வந்ததும் விழா தொடங்கும். அதேநேரத்தில் அப்பகுதி பெண்கள் வீடுகளில் செய்யும் விதவிதமான நைவேத்தியங்களை எடுத்து வந்து அந்த விநாயகருக்கு படைத்து நிலாவை வழிபடுகின்றனர். அதன்பின், கும்மி பாடல்களை பாடி, கும்மியடித்து விளையாடுகின்றனர்.

நிறைவாக, தங்களது படைப்புகளை முதலில் கொஞ்சம் அந்த சிறுமிக்கு வழங்கி விட்டு பிறகு அனைவரும் பதார்த்தங்களை சாப்பிடுவர். தைப்பூச நாளில் அந்த பிள்ளையாரை சுற்றி கும்மியடித்து ஆடல் பாடல் பாடி அந்த பிள்ளையாரை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊரணியில் கரைப்பார்கள். தைப்பூசத்தன்று தேரில் ஊர்வலமாக வரும் தன் தம்பியை பிள்ளையார் வந்து காணும் நிகழ்ச்சியாக இதை செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தைப்பூச சிறப்புகள்!
thaipusam murugan worship

கரூரில் இருந்து 16 கிமீ தொலைவில் வடக்கே உள்ளது புகழூர். அங்கிருந்து 4கிமீ தொலைவில் உள்ளது வேலாயுதம் பாளையம். இங்குள்ள புகழிமலை முருகன் கோயிலில் தைப்பூசம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் தைப்பூசம் மிகப் பெரிய திருவிழா. இது சுமார் 15 நாட்களுக்கு நடைபெறும். மற்ற முருகன் கோயிலில் தேர்த்திருவிழா என்றால் அந்த நாளில் மட்டுமே நடக்கும். ஆனால் இங்கே தைப்பூசம் அன்று நடக்கும் தேர் திருவிழா இரண்டு நாட்களுக்கு நடக்கும். இந்நாளில் கோவில் தேர் இரண்டு நாட்கள் தேரோடும் வீதியை சுற்றி வரும். இங்கு மட்டுமே இரண்டு நாட்கள் தேர் இழுக்கப்படுகிறது.

கரூரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள குளித்தலையில் உள்ளது கடம்பவனநாதர் கோவில். இங்கு சிவன் தைப்பூசத்தன்று சப்த கன்னியர்களுக்கு காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

எனவே அந்நாளில் அவர் காவி உடையில் அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இங்கே லிங்கத்தின் பின்புறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். இங்கே கோவில் வடகோடியில் உள் பிரகாரத்தில் அபூர்வ லிங்கம் உள்ளது. இவருடன் சுற்றுப்புறத்தில் உள்ள ஏழு சிவன் கோயில்களில் இருந்தும் சப்பரம் பவனிவரும். அந்நாளில் அஷ்ட சிவ தரிசனம் காணலாம். இது அபூர்வமானது.

கோவை காரமடையில் இருந்து மேற்கே வெள்ளியங்காடு செல்லும் வழியில் உள்ளது புங்கம்பாளையம். இங்கிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது குழந்தை வேலாயுத சுவாமி கோயில். இங்கு முருகன் காலையில் குழந்தை வடிவிலும், மாலையில் முதியவர் வடிவிலும் காட்சியளிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய கதிர்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் நடக்கிறது. முதலில் முருகன் பாதத்தில் தொடங்கி மார்பு வரையிலும் படர்ந்து சென்று ஒளிப்பிரகாசமாய் சூரிய பூஜை நடக்கும். தைப்பூசத் திருவிழா 11 நாள் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தேர்த் திருவிழா சமயத்தில் வள்ளி திருமணம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் 3000 வருடப் பழமை வாய்ந்தது. கந்த சஷ்டி முதலில் பாடப்பட்ட தலம், இங்கு மூலவர் முருகனைச் சுற்றி செவ்வாய் தவிர்த்து மற்ற எட்டு கிரகங்கள் அழகுற அமைந்துள்ளன. மூலவரை வணங்கினாலே, அனைத்து நவகிரகங்களை வணங்கிய பலன் உண்டு. வள்ளி, தெய்வானை இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் சன்னதி இங்கு மட்டுமே உள்ளது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
தை திருநாளில் காப்பு கட்டும் பொங்கல் பூவின் சிறப்பு!
thaipusam murugan worship

வேறு எந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரத் திருநாளில் முருகன் திருவீதி உலா வருவதற்கு இரண்டு தேர்கள் உள்ளன. இதில் தைப்பூசத் தேர் இருநூறு ஆண்டுகள் பழமையானது. வாகை, வேங்கை, ஈட்டி, தேக்கு ஆகிய மரங்களால் இத்திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. தேரில் அழகிய வேலைப்பாடு கொண்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இங்கு மட்டுமே வேங்கை மரத்தேர் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்ரமனிய சுவாமி நான்கு ரத வீதிகளில் உலா வருவது கண்கொள்ளாக் காட்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com