பொங்கல் பண்டிகையின்போது கரும்பு, மஞ்சள் இவற்றுடன் நாம் படைப்பது பொங்கல் பூ என்றழைக்கப்படும் கண்ணுப்பிள்ளைச் செடி. காடுகளிலும், தோட்டங்களிலும் எங்கும் வெள்ளைப் பூக்களுடன் நிறைந்து காணப்படும் இச்செடியை வீட்டு வாசலில் தொங்க விடுவார்கள்.
நமது வீட்டின் தலைவாசலில் பொங்கல் பூ வைக்கலாம். இதை கிராமங்களில் கூரைப்பூ என்றழைப்பர். வீட்டுக்கு மங்கலகரமாக வரும் பொங்கலை வரவேற்பதன் அடையாளமாகவும் இருக்கிறது. இதனுடன் மாவிலை, ஆவாரம் பூ, வேப்பிலையையும் சேர்த்துக் கட்டலாம்.
மார்கழி முடிந்து, தை ஆரம்பிக்கும்போதே பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கி விடும். மார்கழி கடைசியில் பழையதைப் போக்க போகியும், பின் புதியவை புகுவதற்கு தையும் உணர்த்துகிறது. தைத் திருநாளை வரவேற்க வீட்டின் கூரையில் பூ காப்பு கட்டிய பிறகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.
கூரைப்பூவில் ஆறு வித செடிகள் உள்ளன. அதற்கும் தனித்தனியாக பல்வேறு குணங்கள் உள்ளன. மா இலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும். சீரான சிறுநீர் போக்கை ஏற்படுத்துவது, விஷ முறிவுக்கு உதவும்.
வேப்பிலை நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். கொசுக்களைத் தடுக்கும். தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பிரண்டை வயிற்று புண்ணை ஆற்றும். எலும்புக்கு வலு சேர்க்கும்.
இந்த ஆறு பொருட்களையும் மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்க விட மங்கலம், பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிராமங்களில் அக்கி, மஞ்சள் காமாலை நோய்களிலிருந்து பாதுகாக்க கூரைப் பூக்களை இன்றும் பயன்படுத்துகின்றனர்.
இச்செடியின் சாறு உடலில் கரையாத கற்களையும் கரைத்து விடும். இச்செடிகளை வேருடன் பிடுங்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து அதைப் பருகி வர, சிறுநீரக கோளாறு பிரச்னைகள் தீரும். இச்செடியின் சாறை தொடர்ந்து குடித்து வர சிறுநீர் நன்றாகப் பிரியும்.