கோபுரமே லிங்கம்; கோபுரத்தின் வெளியே நந்தி! தரிசிப்போம் வாங்க!

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கூடுதுறை பவானி சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாங்க...
kooduthurai sangameswarar temple
kooduthurai sangameswarar temple
Published on

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு தெரியாத அமுதா நதி ஆகியவை சங்கமிக்கும் புனித இடம் பவானி. இங்கு பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த இடம். இது தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.

மேலும், குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் வழிபாடு செய்கிறார்கள். தென்னிந்தியாவின் முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிகிறார்கள். கொங்கு மண்டலத்தில் 7 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் புனித ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

மூலவர் - சங்கமேஸ்வரர்

அம்பாள் - வேதநாயகி அம்பாள்

தல விருட்சம் - இலந்தை மரம்.

திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமாகும். குபேரனுக்கு சிவபெருமான் சுயம்புவாக காட்சியளித்த இடமாகும்.

இதையும் படியுங்கள்:
இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசய கிருஷ்ணர் கோவில்!
kooduthurai sangameswarar temple

இங்குள்ள நந்தி, கோவில் உள்ளேயே அமைந்துள்ளது. இங்குள்ள இலந்தை மரத்தில் உள்ள பழங்கள் தினசரி சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் சுவாமி விசுவாமித்திரர் ‘காயத்ரி மந்திரம்’ சொல்லி வழிபட்டார்.

இந்த இடத்திற்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. இதைச் சுற்றி நாமகிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகிய இடங்கள் உள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் கோவை கலெக்டராக இருந்த காரோ என்ற வெள்ளைக்காரர் இந்த மாவட்டத்தை ஆட்சி புரிந்து வந்தார். அவர் ஒரு சமயம் பவானிக்கு ஆய்வுக்கு சென்ற இடத்தில் பவானியில் உள்ள ஆய்வு மாளிகையில் தங்கி விட்டார். அன்று இரவு பயங்கர இடி சத்தத்துடன் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது ஒரு குழந்தை வந்து கலெக்டரை எழுப்பி கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தது. அவர் வெளியே வந்ததும் பயங்கர சத்தத்துடன் அந்த மாளிகை மேற்கூரை இடிந்து விழுந்தது.

பின்னர் அந்த குழந்தை வேகமாக நடக்கத் தொடங்கியது. கலெக்டரும் அந்த குழந்தையை பின்பற்றி நடக்கத் தொடங்கினார். குழந்தை ஒரு கோவிலுக்குள் சென்று மறைந்து விட்டது. கலெக்டர் தன்னை காப்பாற்றியது அந்த அம்பிகை தான் என நம்பினார்.

அக்காலத்தில் வெள்ளைக்காரர்கள், அந்நியர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. கலெக்டர் அம்மனை வழிபட வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். எனவே அம்பாளுக்கு எதிர்ப்புறம் உள்ள கோவில் சுவரில் ஒரு துவாரம் போட்டு அம்மனை வழிபட்டு வந்தார். அம்பாள் தன்னை காப்பாற்றியதற்காக அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கலெக்டர் கோவிலில் பள்ளியறையில் வைப்பதற்காக தங்கத்தால் ஆன ஊஞ்சலை செய்து பரிசாக அளித்தார்.

இந்தச் சம்பவம் 1804ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. ராஜகோபுரம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தை ஒட்டி வைகுண்ட வாசல் உள்ளது. இக்கோவிலில் உள்ள கல் சிற்பங்களில் புராணக் கதைகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ‘மாசி மகம்’ அன்று ‘சூரிய ஒளி’ சங்கமேஸ்வரர் மீது படும்படி அமைக்கப்பட்டுள்ளது.

ஆடி 18 புரட்டாசி, அமாவாசை, தை அமாவாசை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.

ஆடி பதினெட்டாம் தேதி கூட்டம் நிரம்பி வழிகிறது. காவிரி அம்மனுக்கு பெண்கள் தீப ஆராதனை செய்து வழிபடுகின்றனர். திருமணமான தம்பதிகள் காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

இந்த கோவிலில் இரண்டு வாயில்கள் உள்ளன. பிரதான கோபுரம் வடக்கு திசையில் அமைந்துள்ளது.

ஆதிகேசவ பெருமாள், சௌந்தரவல்லி தாயாருக்கு தனி சன்னதிகள் உள்ளன.

இந்த கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சிவனும், விஷ்ணுவும் அமைந்துள்ளதால் இந்த இடம் சேத்திர சங்கமம் என அழைக்கப்படுகிறது.

யோக நரசிம்மர் லட்சுமி தாயாருடன் காட்சி தருகிறார். சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. ராவணன் இங்கு வந்து சகசர லிங்க பூஜை செய்து உள்ளார்.

இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடுவதால் கோபுரத்தின் வெளியே நந்தி உள்ளது. நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன.

கோவில் தெற்கு பக்கம் 63 நாயன்மார்கள் திருஉருவங்கள் உள்ளன. இங்கு வேதமே மரவடிவில் வந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
தீராத நோய்களையும் தீர்க்கும் 'அதிசய எண்ணெய்'! நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் ரகசியம்!
kooduthurai sangameswarar temple

தினசரி காலை 5 மணி முதல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

குழந்தை பாக்கியம் வேண்டி நிறைய பெண்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். இந்த கோவில் மிக சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com