

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை என்ற இடத்தில் இந்த மகா கணபதி கோவில் அமைந்துள்ளது. முதன் முதலில் இந்த இடத்தில் சிவன் கோவில் இருந்தது. ஆனால் கணபதி கோவில் வந்த பின்னர் தான் இந்த கோவில் பிரபலமானது. கொல்லத்தில் இருந்து வடகிழக்கில் 26 கிலோ மீட்டர் தொலைவில் கொட்டாரக்கரை அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பலாமரத்தால் செய்யப்பட்ட விநாயகர் கையில் அப்பம் ஏந்தி தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இந்தக் கோவிலில் நெய் அப்பம் படைத்தல், உதயா அஸ்தமன பூஜை இரண்டும் மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த இடம் கதகளி நடனத்தின் பிறப்பிடமாக விளங்குகிறது. இங்கு சிவன் இருந்தாலும், விநாயகருக்கு முதலிடம் தரப்படுகிறது. எல்லா விநாயகர் கோவிலிலும் கொழுக்கட்டை பிரதான பிரசாதமாக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நெய் அப்பம் பிரசாதம் பிரதானமாக உள்ளது. இந்த நெய் அப்பத்தை 'உண்ணி அப்பம்' என்றும் அழைக்கிறார்கள்.
இங்குள்ள விநாயகருக்கு நெய் அப்பம் கொண்டு வழிபாடு நடத்தினால், அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அரச குலத்தவர்கள் பலரையும் அழித்து அந்தப் பாவத்தைப் போக்க பரசுராமர் கேரளாவில் பல இடங்களிலும் சிவன் கோவிலை நிறுவினார். அதேபோன்று கொட்டாரகரையிலும் ஒரு சிவன் கோவிலை பரசுராமர் நிறுவினார்.
கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி பெருந்தட்சன் இங்குள்ள சிவனை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் சிவனை வணங்கி விட்டு அந்த வழியாக செல்லும் போது வழியில் ஒரு பலாப்பழ மரத்தை கண்டார். அந்த மரம் பிடித்துப் போகவே அவர் அந்த மரத்திலிருந்து ஒரு பகுதியை வெட்டி எடுத்து அதில் ஒரு விநாயகர் உருவத்தை செதுக்கினார். அந்த விநாயக உருவத்தை கொட்டாரக்கரை சிவன் கோவிலில் நிறுவுவதற்காக அதன் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். நிர்வாகம் அனுமதி அளித்ததன் பேரில் அங்கு விநாயகர் சிலை நிறுவப்பட்டு அதற்கென்று தனி கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவில் தொடர்பாக மற்றொரு கதையும் இருந்து வருகிறது.
600 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் என்று வேதியர் கொட்டாரக்கரை சிவனை வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவனை வேதியர் வணங்கி விட்டு வெளியே வரும்போது ஒரு அசரீரி குரல் "என்னையும் வணங்கி விட்டு செல்" என்றது.
அந்த குரல் வந்த திசையை பார்த்ததும் ஒரு பலா மரம் சாய்ந்து கிடப்பதை கண்டார். அந்தப் பலாமரத்தின் அடியில் விநாயகர் உருவம் இருப்பதைக் கண்டார். தனக்கு குரல் கொடுத்தது விநாயகர் என புரிந்து கொண்டார்.
வேதியர் விநாயகரிடம் இங்கேயே தங்கி எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி விநாயகருக்கு இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது என்ற வரலாறும் உண்டு.
கருவறையின் பின்புறம் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பகவதி அம்மன் மேற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். மேற்கு என்பது படி ஞாயிறு என்பதை குறிக்கும். எனவே பகவதி அம்மனுக்கு 'படி ஞாயிறு பகவதி' என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவில் வளாகத்தில் தர்ம சாஸ்தா சுப்பிரமணிய சுவாமி, நாக தேவதைகள் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் உள்ள கதகளி நடனம் இந்த இடத்தில் தோன்றியதாக வரலாறு. கதகளி ஆட்ட கலைஞர்கள் ஆண்டிற்கு ஒரு முறை இங்கு வந்து விநாயகருக்கு நெய்யப்பம் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். கோவில் அலுவலகத்தில் தங்களுக்கு எத்தனை நெய் அப்பம் வேண்டும் எனகேட்டு அதற்குரிய பணத்தை கட்டினால் அவர்களுக்கு நெய்யப்பம் கோவிலில் இருந்து வழங்கப்படுகிறது. கோவில் சன்னதிக்கு எதிரே காலை 5 மணி முதல் 11 மணி வரையும் மாலை நாலு மணி முதல் 8 மணி வரையும் நெய் அப்பம் செய்யும் பணி நடைபெறுகிறது.
கதகளி ஆட்டம் வரலாறு
கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட மன்னர் மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. மகளின் திருமணத்திற்காக பலவித கலை நிகழ்ச்சிகள் நடத்த மன்னர் விரும்பினார். இதற்காக வடக்கு மலபார் பகுதியில் உள்ள களியாட்ட குழுவினரை அழைத்து கிருஷ்ண களியாட்டம் நடத்த விரும்பினார்.
அதற்கு அந்த குழுவினர் இங்குள்ள மக்கள் இந்த களியாட்டத்தை விரும்ப மாட்டார்கள் என மறுத்து சென்று விட்டார்கள். மன்னர் கணபதியிடம் முறையிட்டார். அன்று இரவு மன்னர் கனவில் கணபதி தோன்றி அவரிடம் ராமாயண காவியம் ஒன்றை எழுதச் சொன்னார். அதன்படி மன்னர் ராம காவியத்தை 8 பகுதிகளாக எழுதினார். பின்னர் அதை விநாயகர் முன்பாக வைத்து வழிபட்டார்.
அன்று இரவு மன்னர் கனவில் மகுடம், பச்சை தாடி, மினுக்கும் கத்தி கதை போன்ற உருவங்கள் தோன்றியது. கனவில் தோன்றிய உருவங்களை வைத்து மன்னர் ஒரு களியாட்டத்தை தொடங்கினார். அதற்கு 'கதகளி ஆட்டம்' என பெயர் சூட்டினார். அன்றிலிருந்து தான் கேரளாவில் கதகளி ஆட்டம் தோன்றியது. இதுவே சொல்லப்படும் வரலாறு!