

சிறுநீரகம் மற்றும் சிறுநீரகக்கல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறார் திருச்சி மாவட்டத்தில் ஊட்டத்தூரில் எழுந்தருளியுள்ள நடராஜர்.
மருத்துவத்துறை நவீன மயமாக்கப்பட்டதாக இருந்தாலும், நோய்கள் குணமாக மக்கள் இறைவனின் சக்தியையே பொதுவாக நம்புகிறார்கள். அந்த வகையில் சிறுநீரக நோயை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் தனிச் சிறப்பு பெற்றுள்ளார். பதவியை இழந்தவர்கள் ஊட்டத்தூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியைப் பெறலாம் என்பதை கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் உள்ள பஞ்சநதன நடராஜர் சிறுநீரக நோயை நீக்குபவராகத் திகழ்கிறார்.
ஊட்டத்தூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரே கல்லால் ஆன பஞ்சநதன நடராஜர் அருள்புரிகிறார்.
இந்த நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்ற சிறுநீரக நோய் குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அந்தக நரிமணம் என்கிற வேர் பலகோடி கற்களில் ஒன்றை பிளக்கும் சக்தி பெற்றது. அப்படிப் பிளக்கக்கூடிய கற்கள் தான் பஞ்சநதன பாறைகள். பாறைகளில்ஆனந்த நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை தகனம், யாழி நதனம் என்று 5 வகை பாறைகள் உள்ளன. இதில் பஞ்சநதனப் தெய்வீக ஒளி பெற்ற பாறையாகக் கருதப்படுகிறது. அதனால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். சூரியன் உதிக்கும் போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக் கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. இத்தல இறைவி சிவகாமி அம்மை, தலையைச் சாய்த்து பஞ்சநதன நடராஜரைப் பார்ப்பது போல் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
அதனால் இவரை என்ன நினைத்து வணங்குகிறோமோ அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய ஒளி கர்ப்பக்கிரகத்தின் லிங்கத்தின் மீது படுகிறது. வைகாசி விசாகம் போது சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது 3 நிமிடங்கள் படுகின்றது.
சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்து மாலையாகக் கட்டி நடராஜருக்கு அர்ச்சித்து தினமும் ஒரு துண்டை இரவில் ஊறவைத்து மறுநாள் சாப்பிட நோய் தீரும் அதிசயம் நடைபெறுகிறது.
பலன் தரும் நவக்கிரகங்கள் கோவில் கொடிமரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு பூமியை நோக்கி பார்த்து உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் நவக்கிரகங்கள் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து சேர்க்கப்படும் யாக பூஜைகள் அனைத்துக்கும் உடனடி பலன் கிடைக்கும்.
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளது. உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டுவந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்துள்ளார். வேறு எந்த கோவிலிலும் சிவனருகே பிரம்ம தீர்த்தம் கிடையாது.
இதனால் பிரம்ம தீர்த்த நீரை நோயுள்ளவர்கள் மீது தெளிக்க, அவர்கள் குணமடைவதாக கூறப்படுகிறது. இங்கு சக்திவாய்ந்த காலபைரவர் சன்னதி உள்ளது. இவருக்கு 11 வாரம் சகஸ்ர நாம வழிபாடு செய்ய குழந்தைகளின் மன பயம் தீரும். இந்த அபூர்வ தலம் திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.