

துக்கங்களை களைபவள் துர்கா தேவி. இந்த தேவி மாகாளி, மகாலட்சுமி , மகா சரஸ்வதி போன்ற முப்பெரும் தேவியர்கள் சேர்ந்த திருவடிவம். தேவி மகாத்மியம் தன் 700 ஸ்லோகங்களால் இந்த தேவியின் மகிமையைப் பரவலாகப் பேசுகிறது. இவ்வளவு மகிமை வாய்ந்த துர்க்காம்பிகையின் ஆலயங்களுள் ஒன்று சென்னையில் தாம்பரம்- மடிப்பாக்கம் வழியில் கீழ்கட்டளையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலம்பாக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
எங்கும் நிறைந்தவள்:
தேவி துர்க்கைக்கு என்று சில சிறப்பு வழிபாடுகள் உண்டு. உலகை நான்முகன் படைக்கும் போது சரஸ்வதியாகவும், அதனை திருமால் காக்கும் போது மகாலட்சுமியாகவும், அதே உலகை ருத்ரன் அழிக்கும் போது அவளே பார்வதியாகவும் இருந்து முத்தொழிலும் குறைவின்றி இயங்க உதவுகிறாள். இப்படி உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவியுள்ள பேராற்றலே பராசக்தி. அவள் எங்கும் நீக்கமற நிறைந்தவள்.
அகிலத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அந்த சக்தியே ஆற்றலாகவும், ஊக்கமாகவும் ஊட்டமாகவும் இருந்து அருள்கிறாள்.
வேதங்கள் கூறும் தேவி:
எந்த தேவி எல்லாப் பொருட்களிலும் நிறைந்து, வெளிப்பட்டு, பிரகாசப்படுத்துகிறாளோ அவளே பரம்பொருளான ஆதி சக்தி என ரிக்வேதம் கூறுகிறது.
எந்த தேவி இந்த பிரம்மாண்டத்தை அசைய செய்பவளோ, எவள் யோகிகளின் தியானமூர்த்தமாக இருப்பவளோ, எவள் தனது பிரகாசத்தினால் இந்த அண்டத்தை வெளிப்பட செய்கிறாளோ அந்த துர்க்கை மட்டுமே பரம்பொருள் என சாம வேதம் போற்றுகிறது.
தேவர்களின் ஈஸ்வரியாக இருந்து எவள் அவர்களுக்கு நன்மையைச் செய்கிறாளோ அந்த பகவதி துர்கையையே சாஸ்திரங்கள் பரம்பொருள் என கூறுகின்றன என அதர்வண வேதம் பராசக்தியை விளக்குகிறது.
துர்க்கையின் காட்சி :
மூலக்கருவறையில் 18 திருக்கரங்களுடன் அழகே வடிவாய், அன்பே உருவாய் மகாலட்சுமி துர்க்கை என்னும் திருப்பெயருடன் தேவி அருள்கிறாள். அன்னையின் பீடத்தில் சண்டியந்திரம் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. கருவறையின் முன் சிம்மம் வீற்றிருக்கிறது. அதன் அருகில் திரிசூலம் நிறுவப்பட்டுள்ளது. அன்னையின் சன்னதியின் இருபுறங்களிலும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
தோஷ பரிகாரம்:
தேவியை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வலம் வந்து வணங்கிட ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளில் இருந்து விடுதலை அடையலாம் என்பது பொதுவான கருத்து. வேலை வாய்ப்பு, திருமணத்தடை, வியாபாரத்தில் லாபம், குழந்தைப்பேறு இல்லாதவருக்கு இந்த அரிய வரம் எல்லாம் கிட்டியதாக அங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர், "பசு மாடு தொலைந்து போனது. இங்கு வந்து பிரார்த்தித்து சென்றதும் கிடைத்துவிட்டது. அதில் இருந்து இந்த அன்னையை தரிசனம் செய்து வருகிறேன்," என்று கூறினார். ஆதலால் சகல தோஷ பரிகாரத்தலமாக இக்கோயில் விளங்குகிறது என்பதை பக்தர்கள் கூறும் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
வழிபடும் முறைகள்:
சுகப் பிரம்ம மகரிஷியின் அருளால், சுகர் நாடியில் காணப்பட்ட வர்ணனைப்படியே உருவாக்கப்பட்ட ஆலயமாம் இது. ஆலயம் சிறியது என்றாலும், அங்கு அருள்பாலிக்கும் அம்பிகை பெருங்கருணையுடன் திகழ்கிறார்.
இங்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் இந்தத் துர்க்கை விசேஷமாக வணங்கப்படுகிறார். இங்கு அடிக்கடி சண்டி ஹோமம், விளக்கு பூஜை, அன்னதானம் என ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
அவள் முன் மனம் குவிந்து வணங்கும் பக்தர்களின் தேவை அறிந்து அருள்பாலிக்கிறாள் இந்த மகாலட்சுமி துர்க்கை. அனைவரும் வந்து வணங்கி அவள் அருள் பெறுவோம்.