கிருஷ்ண ஜயந்தி – 26.08.2024 இன்றும் காணலாம், கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகையை!

Krishna Jayanti Dwarka
Krishna Jayanti Dwarka
Published on

இன்றும்கூட பகவான் கிருஷ்ணன் கோலோச்சிய துவாரகாபுரியை நம்மால் காணமுடியும் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

பகவான் கிருஷ்ணர் ராஜ பரிபாலனம் புரிந்த நகரம், துவாரகை. அந்த நகரத்தை சுனாமி போல ஒரு பேராழி வந்து கபளீகரம் செய்துவிட்டது. இது உண்மையா? கிருஷ்ணர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் துவாரகை உண்மையிலேயே இருந்ததா? 

அமெரிக்காவிலுள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம், தன் செயற்கைக்கோள் மூலமாக  ராமேஸ்வரத்துக்கும்  இலங்கைக்கும் இடையே ராமனால் கட்டப்பட்ட பாலத்தை அடையாளம் காட்டியதே, அதுபோன்ற, விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் ஏதாவது துவாரகைக்கு இருக்கிறதா?

இருக்கிறது.

இந்திய தேசிய கடலாராய்ச்சிக் கழகம், 1983 முதல் 1990ம் ஆண்டுவரை பதினெட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ், ‘The Lost City of Dwaraka’ என்ற தன்னுடைய புத்தகத்தில் தன் ஆராய்ச்சி முடிவுகளை எழுதியிருக்கிறார்.

“புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இது, மகாபாரத சம்பவங்கள் நடந்ததையும், துவாரகை நகரம் இருந்ததையும் உறுதிபடுத்துகிறது.

கி.மு. 1500ம் ஆண்டுவாக்கில், தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகிலுள்ள தீவான பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்திருப்பதற்கு ஆதாரம் இருக்கிறது. கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரமாண்டமான கட்டிடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகையின் ஒரு பகுதி விளங்கியிருக்கிறது....

அந்நகரின் சுவர்கள் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது. இப்படி விரிவாக்கப்பட்ட பகுதி ‘பெட் துவாரகை’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீவுப் பகுதி, கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா - ஜாம்பவதிக்கான பொழுதுபோக்கு தலமாகவும் அமைந்திருக்கிறது....

துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக் கூடியது. சௌராஷ்டிர மேற்கு கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு, நகரம் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. இது,கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. த்வாரமதி, த்வாரவதி, குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்பட்டது. எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள், குடியிருப்பு, வியாபாரத் தலங்கள், அகன்ற சாலைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுமக்கள் கூடும் அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கியது துவாரகை.” 

- இவ்வாறு அந்த நூலில் எஸ்.ஆர்.ராவ் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கிருஷ்ணரின் மூல துவாரகா!
Krishna Jayanti Dwarka

துவாரகை உருவானது எப்படி?

கம்ஸனை வதைத்த பிறகு, கிருஷ்ணனும் பலராமனும் உக்ரசேனனை, மதுராவுக்கு அரசனாக்கினார்கள். இது கம்ஸனுடைய மாமனாரான ஜராசந்தனுக்குப் பெருங்கோபத்தை உண்டாக்கியது. அவன் அடுத்தடுத்து பலமுறை மதுரா மீது போர் தொடுத்தான். யாதவ சேனை ஆரம்பத்தில் ஜராசந்தனது படைகளை எதிர்த்தன. என்றாலும், அடுத்தடுத்த போர்களில் பலம் குன்றி, வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிற்று. இனி ஜராசந்தனை எதிர்க்க இயலாது என்று கருதிய கிருஷ்ணர், மிச்சமிருந்த யாதவர்களை அழைத்துக்கொண்டு மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கே கடலரசனிடம் 12 யோஜனை (ஒரு யோஜனை என்பது பத்து மைல்) நிலத்தைப் பெற்றார். இதனால் நிலப்பரப்பை விட்டு 12 யோஜனை தூரம் கடல் உள்வாங்கிச் சென்றது. இப்படி கடல் விட்டுக் கொடுத்த நிலத்தில் தேவதச்சனான விஸ்வகர்மா மூலமாக ஓர் அழகான நகரை கிருஷ்ணன் நிர்மாணித்தார்.

அதுதான் துவாரகை.

மகாபாரத யுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது. இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப் பிரதேசத்திற்கு (தற்போதைய சோம்னாத்) அழைத்துச் சென்று அவர்களைக் காத்தார். ஆனால், அங்கே யாதவர்கள் தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு மாய்ந்தார்கள். கிருஷ்ணனும் வேடன் எய்த அம்பால் இவ்வுலகம் நீத்து, வைகுண்டம் ஏகினார்.

இதையும் படியுங்கள்:
கடலுக்குள் மூழ்கிய துவாரகா - இந்திய இதிகாசங்களுக்கு வலு சேர்க்கும் ஓர் எச்சம்!
Krishna Jayanti Dwarka

ஹைதராபாத்திலுள்ள பிர்லா மியூஸியத்தில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா இப்படித்தான் இருந்திருக்கும் என்று சொல்வதுபோல ஒரு ‘மாடல்’ வைத்திருக்கிறார்கள். இது, இந்திய கடல் அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட தேடுதலில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் விதிஷா என்ற இடத்தில் பெட்ஸா என்று ஒரு பகுதி. இங்கே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கி.மு. 300ம் வருடத்திய கோயில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கிருஷ்ணன், பலராமன், கிருஷ்ணரின் மகன் ப்ரத்யும்னன், கிருஷ்ணரின் பேரன் அநிருத்தன் மற்றும் யாதவர் தலைவன் சத்யகி ஆகியோரின் விக்ரகங்களைக் காண முடிந்தது.

கி.மு. 113ம் ஆண்டு வாக்கில் கிரேக்க நாட்டுத் தூதுவரான ஹீலியோபிஸ் என்பவர், விகஸிலா என்ற பகுதியிலிருந்து (தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் இணைந்த பகுதி) பெஸ் நகர் என்ற இப்போதைய சௌராஷ்டிராவுக்கு வந்தார். இங்கே கிருஷ்ணனைப் பற்றி நன்கு அறிந்த அவர், கிருஷ்ணனின் அடியவராகி, அந்த பக்தியைப் போற்றும் வகையில் ஒரு ஸ்தூபியை எழுப்பினார். அந்த ஸ்தூபியை இன்றும் காணலாம்.

இப்படி கடல் கொண்ட துவாரகையின் நினைவுச் சின்னங்களை, அந்தப் பகுதியில் கடலுக்கு அடியிலேயே போய் காட்சிப்   பொருட்களாக நாம் காண முடியும்! அதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக் கழகம் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் நீர் மூழ்கிக் கப்பல் மூலமாகவும், குழாய் கிணறு அமைப்பில், கடலடிநோக்கு ஆடி மூலமாகவும் துவாரகையின் மிச்சங்களை நாம் பார்வையிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com