

1. சுதாமா: ஸ்ரீகிருஷ்ணர் - சுதாமா ஆகியோரிடையே உள்ள நட்பு மிக மிக ஆழமானது. இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பர்கள் வட்டத்தில் சுதாமா நெருக்கமான நண்பர். ஸ்ரீ கிருஷ்ணரின் ஒவ்வொரு விளையாட்டின் போதும், செயல்களின் போதும் சுதாமா இல்லாமல் அந்த விளையாட்டு இருக்காது... அப்படி ஒரு நெருக்கம். பின்னாளில் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகை மன்னராக இருந்த பொழுது, சுதாமா பகவான் கிருஷ்ணனின் அரண்மனைக்கு வருகிறார். சுதாமாவை வரவேற்க கிருஷ்ணரே அரண்மனை வாசலில் நின்று வரவேற்று சுதாமாவின் பாதங்களை நீரில் தூய்மை செய்து மலர்கள் தூவி வரவேற்றார் என்றால் ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமா நட்பிற்கு இதை விட வேறு என்ன பெரிதாய் இருந்து விடக்கூடும்.
2. அர்ஜூனன்: ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் நட்பு என்பது இருவரிடையே நீ வேறு நான் வேறு என்றில்லாமல் இருவரும் ஒன்றே என எண்ணும் வகையிலும், துரியோதனன் பொறாமைப் படும் அளவிலும் இருந்தது.
பாண்டவர்கள் ஐந்து பேர் இருக்க, ஸ்ரீ கிருஷ்ணர், கீதையை உபதேசம் செய்ய அர்ஜூனன் மட்டும் தேர்ந்தெடுக்க காரணம் உண்டு. தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரிடைய உள்ள குணநலன்களை சீர்தூக்கி பார்த்த ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனன் குணநலன்களை ஆராய்ந்ததில், அவனிடம் பொறுமை, சகிப்பு தன்மை, மற்றவர்கள் சொல்வதை நிதானமாக கேட்கும் மனப்பாங்கு, நடுநிலைத் தன்மை இருப்பதை அறிந்ததால்தான் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தார். நல்ல நண்பர்களாகவும் திகழ்ந்தனர்.
3. திரௌபதி: திரௌபதி - ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரிடைய ஆழமான நட்பும் சகோதர பாசமும் ஒருங்கே இருந்தது. எந்த ஆபத்து அல்லது இக்கட்டான சூழல் வந்தாலும், ஸ்ரீ கிருஷ்ணன் தமக்கு உதவுவார் என்றே நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற தக்க சமயம் வருமென காத்திருந்த பொழுதில்தான், துரியோதனன் சபையில் பல பேர் முன்னிலையில் துகில் உரிந்து ஆவமானப்படுத்தப்பட்ட பொழுது, எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்ற பொழுது, "கிருஷ்ணா!" என்ற ஒற்றைச் சொல் கேட்டு ஓடோடி வந்து அபயக்கரம் நீட்டி ஆபத்பாந்தவனாக மாறி தனது நட்பையும், சகோதரப் பாசத்தையும் நிலை நிறுத்தினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
இதுவரை ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் உள்ள நட்பினை பார்த்தோம். இப்போது இராம அவதாரத்தில் உள்ள நட்பினை பார்க்கலாம்.
4. ஹனுமன்: ராமர் - ஹனுமான் நட்பு என்பது அளவிட இயலாது. ஹனுமன் இராமரிடம் காட்டிய நட்பு என்ற அளவில் மட்டுமல்லாமல், எஜமான விசுவாசம், படைத் தளபதி, தூதுவர், சிறந்த பக்தன் என்று பல்வேறு பரிணாமங்களில் நட்பினை செலுத்தி இராமரையே இதயக் கமலத்தில் இருத்தி கொண்டார் ஹனுமன்.
5. சுக்ரீவன்: ராமர் - சுக்ரீவன் நட்பானது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நட்பாகும். சுக்ரீவன் ஒரு மன்னனாக இருந்த பொழுதும், வாலியின் தவறான செய்கையால் சுக்ரீவனுக்கு உதவ வாக்களிக்கிறார். அதை நிறைவேற்றவே வாலியை மறைந்திருந்து தாக்கி வாலி வதம் செய்கிறார் இராமன்.
இதில் இராமர் தெய்வீத அவதாரமாயிற்றே வாலியை மறைந்திருந்து கொல்வது அறமா? என்று விவாதம் நடப்பதுண்டு. இராமர் அவதாரம் மனித அவதாரம் தான். ஆகவே, உண்மையான காரணம் என்னவெனின், வாலி தவம் செய்து ஒரு வரம் பெற்றிருந்தான்.
அது எதிரி எவர் வந்து தம் முன்னால் நின்று போர் புரிந்தாலும், அவரின் சக்தியை பாதி தமக்கு வந்து விட வேணடும் வரம் பெற்றிருந்தான். ஆதனால் வாலியை மறைந்திருந்து வதம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பக்திக்கு அப்பால் அமைந்த பாசப் பிணைப்புகள் நம் வாழ்க்கைக்கு நல்ல நெறிமுறைகள்!